Breaking
Sun. Nov 24th, 2024

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்படுவதற்கான செயற்பாடுகளை வன்மையாகக் கண்டிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

“கடந்த 30 வருட யுத்தத்தின் போது, யுத்தத்தில் ஈடுபட்டவர்கள் மாத்திரமன்றி, அப்பாவி தமிழ் இளைஞர்கள் பலரும் இப்பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, எவ்வித விசாரணைகளுமின்றி அநியாயமாக நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள்.

அதேபோன்று, ஈஸ்டர் தாக்குதலின் பிற்பாடு, அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள், உலமாக்கள், புத்திஜீவிகள், அரசியல் தலைவர்கள் என முஸ்லிம்களை குறிவைத்து இச்சட்டம் பிரயோகிக்கப்பட்டது.

தற்போது, நாட்டினை நாசமாக்கிய ஆட்சியாளருக்கு எதிராக போராடிய சிங்கள, தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் மீது இச்சட்டம் பிரயோகிக்கப்படுவதற்கான எத்தனங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

அப்பாவி தமிழ் இளைஞர்கள் மீது பயங்கரவாத தடைச் சட்டம் பிரயோகிக்கப்பட்ட போது, ஏனைய சமூகத்தவர்கள் அதற்கு எதிராக போதுமான அளவில் கைகோர்க்க முன்வந்திருக்கவில்லை.

ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள், உலமாக்கள், புத்திஜீவிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் மீது இச்சட்டம் பிரயோகிக்கப்பட்டபோது, பெரும்பான்மை சமூகத்தவர்கள் போதுமான அளவில் அதற்கெதிராக கைகோர்க்க முன் வந்திருக்கவில்லை. ஆனால், இன்று இந்நிலைமையில் பாரிய மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது.

பயங்கரவாத தடைச் சட்டம் இந்த நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட காலம் முதல், பயங்கரவாதத்துக்கு எதிராக அது பயன்படுத்தப்பட்டதை விடவும் அரசியல் உள்நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்ட சந்தர்ப்பங்களே அதிகம் என்பது எல்லோருமே அறிந்த விடயம்.

நான் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, இன்றைய ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்கள், எனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக பாராளுமன்றத்திலே மிகவும் காத்திரமாக குரல் கொடுத்த ஒருவர் என்பதை இங்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். அதேசமயம், அவ்வாறான ஒருவர் இன்று ஜனாதிபதியாக இருக்கின்ற நிலையில், அறவழிப் போராட்டக்காரர்களை அவரது கையொப்பத்துடன், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைப்பதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகளை எண்ணி மிகவும் வேதனையடைகின்றேன்.

இவ்வாறு பயங்கரவாத தடைச் சட்டத்தை ஜனநாயக ரீதியில், அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பிரயோகிக்கின்ற பொழுது, தற்பொழுது நாடு எதிர்கொள்ளும் இக்கட்டான பொருளாதார நிலைமை இன்னும் மோசமடையும் என்பதை அச்சத்தோடு நினைவுகூற விரும்புகின்றேன்.

பயங்கரவாத தடைச் சட்டம் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து, இச்சட்டம் பயங்கரவாதிகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டதை விட அரசியல் தேவைகளுக்காகவே அதிகமாக பிரயோகிக்கப்பட்டிருக்கின்றது. எனவே, இப்பயங்கரவாத தடைச் சட்டம் இந்த நாட்டின் சட்டங்களிலிருந்து ஒழிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன். அது மாத்திரமின்றி, பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்டவர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்க மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *