(பழுலுல்லாஹ் பர்ஹான்)
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சேவைத் தரம் குறைந்து செல்வதாக கூறி இன்று 18 வியாழக்கிழமை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட பிரஜைகள் சபையும்,சிவில் அமைப்புக்களும்,மனித உரிமை செயற்பாட்டாளர்களும் இணைந்து ஏற்பாடு செய்த மேற்படி கவனயீர்ப்பு போராட்டத்தில்; மட்டக்களப்பு மாவட்ட பிரஜைகள் சபையின் தலைவர் வ.கமலதாஸ்,பெண்கள் உரிமை செயற்பாட்டாளர் நளினி ரட்னராஜா உட்பட சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சிலரும்; தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டோர் நல்லாட்சி அரசே மட்டக்களப்பு மக்களுக்கு பாரபட்சம் காட்ட வேண்டாம்,இருதய சத்திர சிகிச்சைக்கு தேவையான பிரிவு எங்கே?,அரசே எங்கள் சுகாதார உரிமையை மீறாதே,ஒரு வருடத்திற்கு முன் நியமிக்கப்பட்ட வைத்திய நிபுணர்கள் எங்கே?,பெண்கள் நல நிலையம் எப்போது உபகரண இட வசதியோடு இயங்கும்,நீரளிவு சிகிச்சை நிலையம் மட்டக்களப்பில் வேண்டும் போன்ற வசனங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டோர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் எம்.எஸ்.இப்றாலெவ்வையை சந்தித்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் 13 அம்ச குறைபாடு தொடர்பான மஹஜரை கையளித்ததோடு அம் மஹஜரின் பிரதியையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரனுக்கும் உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தனர்.
குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்ற பகுதியில் பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.