உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

அரசுக்கு எதிராக திரண்ட ஆயிரக்கணக்கானோர்: ஈராக் பாராளுமன்றம் சூறை

ஈராக் நாட்டில் பிரதமர் ஹைதர் அல் அபாதியின் அரசுக்கு எதிராக போராடிவரும் அதிருப்தியாளர்கள் பாக்தாத் நகரில் உள்ள பாராளுமன்றத்துக்குள் புகுந்து, அங்கிருந்த மேஜை, நாற்காலிகளை உடைத்து, சூறையாடினர்.

ஈராக் பிரதமர் ஹைதர் அல்-அபாடி சமீபத்தில் அந்நாட்டு ஆட்சிமுறையில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டுவர முயன்றார். அமெரிக்காவின் ஆலோசனைப்படி, அமைச்சரவைகளில் அரசியல் கட்சியினரின் ஆதிக்கத்தை குறைத்து கல்வியாளர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்களை புதிய அமைச்சர்களான நியமிக்க அவர் முடிவு செய்தார்.

இந்த முடிவுக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஈராக்கில் வாழும் ஷியா பிரிவினரின் மூத்த தலைவரான மக்தாதா அல்-சதர் என்பவர் தலைமையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டங்களிலும், போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் கடந்த சிலதினங்களுக்கு முன்பு 5 புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். அதற்கு பாராளுமன்றத்தின் ஒப்புதலை பெற வேண்டும். ஆனால், எதிர்க்கட்சியினரின் நிராகரிப்பால் பாராளுமன்றத்தின் ஒப்புதலைபெற முடியாதநிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நஜாப் நகரில் ஷியா பிரிவு மதத்தலைவர் மாக்தாதா அல்-சதர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர், அரசியலில் நிலவிவரும் முட்டுக்கட்டைக்கு கண்டனம் தெரிவித்தார்.

இந்த பேட்டிக்கு பின்னர், அடுத்த சிலநிமிடங்களில் பாக்தாத் நகரில் அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் ஆவேசமாக திரண்டனர்.

உச்சக்கட்ட பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ள பசுமை பிரதேசத்தில் அமைந்துள்ள பாராளுமன்ற வளாகத்துக்குள் நுழைந்தனர். கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டிருந்ததால் எம்.பி.க்கள் யாருமில்லாத நிலையில், பாராளுமன்ற கட்டிடத்தின் உள்ளே இருந்த நாற்காலி, மேஜை, விளக்குகளை அடித்து நொறுக்கினர்.

பாராளுமன்றத்துக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களையும் தீயிட்டு பல வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இதனால் பெரும் பரபரப்பு நிலவியது. போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த பாதுகாப்பு படையினர் எடுத்த நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தன.

அவர்கள் பாராளுமன்றத்துக்கு அருகாமையிலேயே முகாமிட்டுள்ளனர். இதனால், பாதுகாப்பு படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் வெடிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

Related posts

ஞானசார தேரருக்கு நாளை தீர்ப்பு குற்றவாளியா?

wpengine

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படவிருந்த விடுமுறை இரத்து

wpengine

முட்டைக்கு ஏற்பட்ட சோதனை

wpengine