(அபூ செயனப்)
எழுத்தாளன் வலிமை மிக்கவன். அவனது எழுத்துக்கள் சமூகத்திற்காகவே இருக்கவேண்டும் சமூகத்திற்குள் புரையோடிப்போய்கிடக்கின்ற அவலங்களை அடையாளம் கண்டு அதற்கான தீர்வுகளை முன்மொழிகின்ற தார்மீகப்பொறுப்பு எழுத்தாளனுக்கு உண்டு. என கிராமிய பொருளாதார அலுவல்களுக்கான பிரதி அமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
ஓட்டமாவடி ஹசனார் ஐயூப்கானின் “கடந்து போகும் சப்தங்கள்” கவிதை நூல் வெளியீட்டு விழா நேற்று ஓட்டமாவடி பிரதேச சபை மண்டபத்தில் விரிவுரையாளர் அஷ்ஷெய்க் ரிஸ்வி அவர்களின் தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே பிரதி அமைச்சர் அமீர் அலி இவ்வாறு கூறினார்.
தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில்
எழுத்தாளர்கள் அநேகமாக அரசியல் வாதிகளை விமர்சிக்கின்றவர்களாகவே காணப்படுகிறார்கள், இந்த முரண் போக்கை நான் தொடர்ந்தும் அவதானித்து வருகிறேன். அது ஏன் என்று எனக்கு தெரியவில்லை.அரசியல் வாதிகள் செய்கின்ற பிழைகளை அடையாளப்படுத்துகின்ற தார்மீகப் பொறுப்பு எழுத்தாளனுக்கு உண்டு. அதேவேளை அரசியல் வாதிகளின் அபிவிருத்திப் பணிகளையும்,அவர்கள் பக்கம் இருக்கின்ற நியாயங்களையும் எழுத்தாளர்கள் பதிய வேண்டும். ஒரு பக்க நியாயங்களை மாத்திரம் வைத்து பக்கம்பக்கமாக எழுதுவதில் எந்த மாற்றத்தையும் சமூகத்தில் கொண்டு அவர் முடியாது.
எனவே எழுத்தாளர்களின் பேனை உண்மைக்காகவும், நேர்மைக்காகவும் தலை கவிழவேண்டும். போட்டி,பொறாமை,நயவஞ்சகம் போன்ற இழி குணங்கள் இப்போது நமது சமூகத்தினுள் புரையோடிப்போய்கிடக்கின்றது. நல்ல கல்விமானை எப்படி இல்லாமல் ஆக்கலாம்,நல்ல அரசியல்வாதியை எப்படி கேவலமாக விமர்சிக்கலாம்,நல்ல பணக்காரனை எப்படி கவிழ்க்கலாம்,நல்ல வியாபாரியை எப்படி அவனது வியாபாரத்தை முடக்கலாம் இப்படி கீழ்த்தரமான சிந்தனையோட்டமுடைய பலரை நாம் காணமுடிகிறது. இந்தப்போக்கு ஆரோக்கியமான போக்கு கிடையாது. இவ்வாறான அடிமட்ட சிந்தனையில் உள்ளவர்களை மீட்டெடுக்கும் பணியை எழுத்தாளர்கள் செய்யவேண்டும். அப்போது தான் அந்த எழுத்தாளரின் எழுத்தின் பெறுமானம் உயர் அந்தஸ்துள்ளதாக அமையும்.
தான் விரும்புகின்றவர்களை போற்றிப்புகழ்ந்து அவர் என்ன செய்தாலும் சரி காண்கின்ற மனோநிலையை எழுத்தாளர்கள் மாற்றவேண்டும். யார் சமூகத்திற்கு நன்மை செய்தாலும் அவர்களின் நல்ல பக்கங்களை அடையாளப்படுத்த வேண்டும். அவ்வாறே நம்முடன் மாற்றுக்கருத்துடைய ஒருவரின் அபிவிருத்திப்பணிகளை,நல்ல செயற்பாட்டினை நாம்
வரவேற்று, அந்தச்செயற்பாட்டின் வெற்றிக்காக உதவி செய்யவேண்டும். ஒரு நேர்மையான எழுத்தாளன் இதனைத்தான் செய்வான். அரசியல் வாதிகளை விமர்சிக்கும் போக்கிலிருந்து விடுபட்டு,அவர்களை வழி நடாத்தும் ஆலோசகர்களாக எழுத்தாளர்கள் மாற்றவேண்டும் என அவர் கூறினார்.