எந்தவித குற்றச்சாட்டுகளும் இன்றி பல வருட காலமாக சிறைச்சாலைகளில் வாடுகின்ற அரசியல் கைதிகளை நிபந்தனையின் அடிப்படையிலாவது விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசியல் கைதிகளின் விடுதலை கோரி திங்கட்கிழமை கொழும்பு மற்றும் யாழ்ப்பாண பகுதிகளில் இருவேறு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். இலங்கை அரசு சர்வதேச ரீதியில் பல சவால்களை முகம்கொடுத்து வருகின்ற நிலையில், இப்பிரச்சினை மேலும் அழுத்தங்களை ஏற்படுத்தும். எந்தவித குற்றச்சாட்டுகளுமின்றி சிறைகளில் வாடுகின்ற அரசியல் கைதிகளின் விடுதலைக்காக நான் பல தடவைகள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி உரையாற்றியுள்ளேன்.
கடந்த காலங்களில் பல அரசியல் கைதிகள் நிபந்தனைகளின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர். இதுபோன்று நிபந்தனைகளின் அடிப்படையில் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.