(பா.ருத்ரகுமார்)
அரசியல் கைதிகளின் உடல்நிலை தற்போது மிக மோசமான நிலையில் உள்ளது எனவே அவர்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டிய பாரிய பொறுப்பு எமக்குள்ளது என வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல் குரே தெரிவித்துள்ளார்.
மேலும் குற்றம் புரியாது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியற்கைதிகளை விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
தற்போது உண்ணாவிரதம் மேற்கொண்டுவரும் தமிழ் அரசியற்கைதிகளின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அவர்கள் தமது விடுதலையினை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இதனடிப்படையில் அவர்களின் மனோநிலை மற்றும் அவர்கள் எதிர்ப்பார்த்துள்ள கோரிக்கைகளை என்னிடம் மிகவும் வேதனையுடன் தெரிவித்தனர். அவர்களின் மனிநிலையை என்னால் நன்கு உணரக்கூடியதாக இருந்தது.
அரசியற்கைதிகளில் சிலர் விடுதலையளிக்கப்பட்டு மீண்டும் சந்தேகத்தின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டவர்களா உள்ளனர். சிலர் எவ்விதமான குற்றமும் புரியாது சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அத்தோடு மேலும் சிலர் நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்ற பின்னர் புலம்பெயர் நாடுகளிலிருந்து இலங்கைக்கு வந்து பின்னர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களாவர்.
கொழும்பிலுள்ள வெலிக்கடை சிறைச்சாலையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுவரும் தமிழ் அரசியல்கைதிகளை இன்று செவ்வாய்க்கிழமை வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல் குரே பார்வையிட சென்றிருந்தபோதே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்துள்ளார்.