(சுஐப் எம்.காசிம் )
அரசியல் இருப்புக்காக இனவாதத்தையும், விஷங்களையும் கக்கிவரும் அரசியல்வாதிகளுக்குப் பின்னால் அலைந்து திரிந்து எதிர்காலத்தையும், நலன்களையும் வீணடிக்க வேண்டாம் என்று அமைச்சர் றிசாத் பதியுதீன் கோரிக்கை விடுத்தார்.
மக்கள் காங்கிரஸ் தலைவர், கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில், வடபிராந்திய தேசிய இளைஞர் சேவைகள் மன்றப் பணிப்பாளர் முனவ்வரின் தலைமையில், மன்னார் மாவட்ட இளைஞர் கூட்டுறவுச் சங்கத்தினால் (நிஸ்கோ) இளைஞர்களுக்கு சுயதொழில் திட்டங்களுக்கான காசோலை வழங்கும் நிகழ்வில் அமைச்சர் றிசாத் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார்.
மன்னார் நகரமண்டபத்தில் நேற்று காலை (29/09/2016) இடம்பெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
மன்னார் மாவட்டம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு மாவட்டம். யுத்தம் முடிந்த பின்னர் இந்த மக்களை மீளக்குடியேற்றுவதில் நான் முன்னின்று உழைத்திருக்கின்றேன். அப்போது நான் அனர்த்த நிவாரண, மீள்குடியேற்ற அமைச்சராக இருந்தேன். மன்னார் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் ஏககாலத்தில் மீள்குடியேற்றத்தை மேற்கொண்டோம், குறிப்பாக, கருக்காக்குளம் பகுதியை மையமாக வைத்து, மாந்தை மேற்குப் பிரதேசத்தில் பல கிராமங்களில் குடியேற்றங்களை மேற்கொண்ட நாம், முசலிப் பிரதேசத்தில் அரிப்பு, மருதமடு, கொக்குப்படையான், பண்டாரவெளிக் கிராமங்களில் குடியேற்றத்தை மேற்கொண்டோம்.
கடந்த அரசில் யுத்தத்தின் பின்னரான இந்தக் குடியேற்றங்களுக்கு கடந்த அரசின் அமைச்சர்களான பெசில் ராஜபக்ஷ, டக்லஸ் தேவானந்தா ஆகியோர் எமக்கு பக்கபலமாக இருந்தனர். நான் மீள்குடியேற்ற அமைச்சராக இருந்ததனால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 25௦௦௦ ரூபா வீதம் அவர்களது உடனடி வாழ்வாதார உதவிகளுக்கு வழங்கினேன். கொட்டில்கள் அமைப்பதற்கு மரக்கூட்டுத்தாபனத்தில் இருந்து தடிகளையும், கம்புகளையும் வழங்கினோம். மாற்றுடையில்லாத பாடசாலை மாணவர்களுக்கு, அவர்களின் கல்வி நடவடிக்கைகளை இடையறாது தொடரச்செய்ய வேண்டுமென்ற நோக்கிலே, சீருடைகளையும், பாடசாலை உபகரணங்களையும் வழங்கியதோடு, க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவர்களின் கல்வித் தேவைக்காக, கொழும்பிலிருந்து ஆசிரியர்களைக் கொண்டுவந்து படிப்பித்தோம்.
இந்த மாவட்டத்தில் யுத்தத்தால் மோசமாகப் பழுதடைந்திருந்த பாதைகளை புனரமைத்தோம். கேரதீவு – சங்குப்பிட்டி பாலம், தள்ளாடியிலிருந்து பூநகரி வரையான காபட் பாதை, மன்னாரிலிருந்து புத்தளம் வரையான காபட் பாதை, தகர்ந்து கிடந்த ரயில் பாதை, ரயில்வே நிலையங்கள் இத்தனையும் வெறுமனே வானத்திலிருந்து வந்து குதித்தவைகள் அல்ல. இந்திய, சீன அரசாங்கங்களிடம் இருந்தும், உலகவங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் யுனிசெப் நிறுவனத்திடமிருந்தும், நாம் மேற்கொண்ட முயற்சிகளினால் அரசின் உதவியுடன் பெற்றுத்தரப்பட்டவையே.
இந்த அபிவிருத்திகளையும், நலனோம்புத் திட்டங்களையும் நாம் அரசியலுக்காக மேற்கொள்ளவில்லை. மக்களிடமிருந்து வாக்கு கிடைக்குமென்ற நப்பாசையிலும் செய்யவில்லை. மனிதாபிமான அடிப்படையில், இந்த மண்ணில் பிறந்தவன் என்ற உரிமையிலேயே மக்களோடு மக்களாக நின்று, அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் உதவிகளை மேற்கொண்டிருக்கின்றேன்.
இவைகளை நான் கூறுவதற்குக் காரணம் உண்டு. மன்னார் மாவட்டத்துக்கு புதிதாக இறக்குமதி செய்யப்பட்ட, அரசியலில் கத்துக்குட்டியான, வியாபாரத்தை நோக்கமாகக் கொண்டு, இங்கு வந்து குடியேறியிருக்கும் ஓர் அரசியல்வாதி, என்னையும், எனது செயல்பாடுகளையும், எனது முயற்சிகளையும் எப்போதும் கறுப்புக் கண்ணாடி கொண்டு பார்த்து, மிகமோசமாக விமர்சித்து வருகின்றார். இவர் பொய்யை மீண்டும் மீண்டும் கூறி, அதை உண்மைப்படுத்தும் ஒரு உபாயத்தைக் கைக்கொண்டு வருகின்றார். இவரின் தந்திரோபாய முயற்சிகளுக்கு நீங்கள் இரையாக மாட்டீர்கள் என, நான் பரிபூரணமாக நம்புகின்றேன். இவ்வாறானவர்களைப் போன்று தென்னிலங்கையிலும், சிங்கள இனவாதிகளும், முஸ்லிம் கட்சியைச் சார்ந்த காழ்ப்புணர்வு கொண்டோரும் என்னைத் தொடர்ச்சியாகக் குறிவைத்து தாக்குகின்றனர். ஆக, மும்முனைகளிலும் என்மீது கல்லெறிகின்றார்கள். இறைவனின் துணையுடன் இவற்றையெல்லாம் முறியடித்து நான் பணி செய்கின்றேன்.
மன்னார் நகரை அழகுபடுத்த வேண்டும் என்றும், அதனை நவீனமயப்படுத்த வேண்டும் என்றும், நான் மேற்கொண்ட முயற்சிகளுக்கு, சில அரசியல் குரோத சக்திகள் தடையாக இருந்தன என்பதை, நான் மிகவும் வேதனையுடன் கூற விரும்புகின்றேன்.
வன்னி மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், தருமலிங்கம் சித்தார்த்தன், சிவசக்தி ஆனந்தன் போன்ற நல்ல அரசியல்வாதிகளின் பண்பையும், அவர்கள் இந்த மாவட்டத்தின் அபிவிருத்தியின்பால் கொண்டுள்ள கரிசனையையும் நான் பாராட்டுகின்றேன் என்றும் அமைச்சர் கூறினார்.
இந்த நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், மன்னார் மாவட்ட பிரதேச செயலாளர் வசந்தகுமார், டாக்டர்.மகேந்திரன், கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் செபமாலை, அடம்பன் மகா வித்தியாலய அதிபர் மற்றும் அமைச்சரின் இணைப்பாளர்களான செல்ல/ந த்தம்பு, முஜாஹிர் ஆகியோர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.