அரசியல்வாதிகளுக்குள் இருக்கும் பிரச்சினைகளால் வட மாகாணத்திற்கு வரும் பணங்கள் செலவழிக்காமல் திரும்பிச்செல்கின்றன என வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.
சிவில்பாதுகாப்பு திணைக்களத்தின் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சிக்கான இணைந்த கட்டளைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசியல்வாதிகளுக்குள் இருக்கும் பிரச்சினைகளால் வட மாகாணத்திற்கு வரும் பணங்கள் செலவழிக்காமல் திரும்பிச்செல்கின்றன.குறிப்பாக இரணைமடுவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் கொண்டு செல்வதற்கு மிகப்பெரிய தொகைப்பணம் ஒதுக்கப்பட்டும் எதுவும் செய்யப்படவில்லை. அதுமட்டுமல்ல மாங்குளம் பகுதியில் பொருளாதார மத்திய நிலையம் ஒன்றை நிறுவுவதற்கும் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது, அந்நிதியும் எதுவும் செய்யாமல் திரும்பிப் பேயுள்ளது. வாக்குவாதங்கள் இல்லாது அனைவரும் ஒன்று சேர்ந்து மக்களுக்கு வேலைசெய்ய வேண்டும். நான் இனவாத அரசியல் செய்யவில்லை நாம் இன மத கட்சி வேறுபாடின்றி இணைந்தால் இந்த நாட்டை அபிவிருத்தி நோக்கி கொண்டுசெல்லமுடியும்.
நமது கடவுள், தமிழ், சிங்கள வேறுபாடின்றி ஒன்றாக ஒற்றுமையாக இருக்கின்றனர். அரசியல் பிரமுகர்களும் தமிழ் சிங்கள வேறுபாடின்றி திருமணம் செய்து ஒன்றாக இருக்கின்றனர். நாம் சண்டைபிடிக்க ஒரு கரணம் கூட இல்லை நாம் அனைவரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும்.
இராணுவத்தினர் கூட புனரமைப்புப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டுள்ளார்கள் இப்பொழுது உள்ள இராணுவம் யுத்தத்திற்கானதல்ல, பொலிசாரும் அவ்வாறே. அனைவரும் மக்களுக்கானவர்கள் அதேபோல் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். அதுவே நல்லிணக்கம் என மேலும் தெரிவித்தார்.
அத்துடன் சிவில்பாதுகாப்பு திணைகளத்தில் வேலைசெய்யும் தாய்மார்களது குழந்தைகளை பராமரிப்பதற்கான பராமரிப்பகத்தை அமைக்க தனது நிதியிலிருநு்து இரண்டு இலட்சம் ரூபா வழங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.