அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

அரசியலமைப்பை விட்டு பொருளாதாரத்தை மட்டும் அரசாங்கம் கையாழ்தல், நாடு மேலும் பாதாளத்துக்குள்.

தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு காண்பதை மையப்படுத்திய அரசியலமைப்பு விடயத்தினை கைவிட்டு, பொருளாதார நெருக்கடிகளை மட்டும் அரசாங்கம் கையாளுமாக இருந்தால் நாடு மேலும் பாதாளத்துக்குள்ளேயே செல்லும் அபாயமுள்ளது என்று தமிழ்த் தலைவர்கள் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பொருளாதார நெருக்கடிகளையும், அரசியலமைப்பு விடயத்தினை சமாந்தரமாக கையாளுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டியது அவசியமென்பதை கடந்தகால வரலாற்றில் இருந்து கற்றுக்கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அரசாங்கம் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வினைக் கண்டதன் பின்னரேயே அரசியலமைப்பு விடயங்களை கையாளவுள்ளதாக அறிவித்துள்ளமை தொடர்பில் தமது நிலைப்பாடுகளை வெளிப்படுத்துகையிலேயே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர். அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு, சிறிதரன் எம்.பி இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக் குழுவின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறிதரன் தெரிவிக்கையில், அரசியல் தீர்வினைக் காணாது பொருளாதாரத்தில் மீட்பெற முடியும் என்று அரசாங்கம் கருதினால் அது தவறானதொரு புரிதலாகும்.

இனப்பிரச்சினைக்கான தீர்வும், பொருளாதார மீட்சியும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்துள்ளன என்ற உண்மையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு இதயசுத்தியுடன் செயற்பட வேண்டும். அரசாங்கம், அரசியலமைப்பு விடயத்தினை காலதாமதப்படுத்துவதான அதன் மீதான சந்தேகத்தினை ஏற்படுத்துவதாக இருக்கின்றது. ஆகவே அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினையை இதயசுத்தியுடன் கையாள்வதாக இருந்தால் அரசியலமைப்பு விடயம் தாமதமின்றி முன்னெடுக்கப்பட வேண்டும்.

விசேடமாக, தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான சமஷ்டி அடிப்படையிலான கோரிக்கையை நிறைவு செய்யும் வகையில் புதிய அரசியலமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டியது அவசியமாகும் என்றார். செல்வம் எம்.பி ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக்கட்சியான ரெலோவின் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவிக்கையில்,

தற்போதைய அரசாங்கம் ஆட்சியைப் பொறுப்பெடுக்கும்போது புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதாகவும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதாகவும் உறுதியளித்துவிட்டே மக்கள் ஆணையைப் பெற்றுக்கொண்டது.

அவ்வாறான நிலையில் குறித்த வாக்குறுதியை தாமதமின்றி மேற்கொள்ள வேண்டியது அதன் கடமையாகின்றது. ஆனால் தற்போது வாக்குறுதியில் பின்னடிப்புச் செய்யவே முனைகின்றது. முதலில் இனப்பிரச்சினையொன்றே இல்லையென்பது போல் காண்பிப்பதற்கு அரசாங்கம் முனையும் அதேநேரம், பொருளாதாரப் பிரச்சினைக்கே முக்கியத்துவம் அளிப்பதாக பகிரங்கமாக அறிவிக்கின்றது.

இலங்கையின் எந்தவொரு அரசாங்கங்களும் தன்னுடைய ஆட்சியின் இறுதியில் அரசியலமைப்பு விடயங்களை முன்னெடுப்பதில்லை. அவை தேர்தல் வெற்றியில் தான் அதிகளவில் கவனம் செலுத்தும். ஆத்துடன் எதிர்ப்புக்களும் அதிகரித்துவிடும். ஆகவே தற்போது மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் பதவியில் உள்ள அரசாங்கம் தமதமின்றி அரசியலமைப்பு விடயத்தினை முன்னெடுப்பது தான் பொருத்தமானது என்றார்

கஜேந்திரகுமார் எம்.பி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிக்கையில், ஜே.வி.பி.யை மையமாகக் கொண்டிருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது பொருளாதார விடயங்களுக்கு முக்கியத்துவமளிக்கும் வகையில் தெரிவித்துள்ள கருத்தையிட்டு ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

ஏனென்றால், ஜே.வி.பி.யைப் பொறுத்தவரையில் சிங்கள,பௌத்த தேசியவாத நிலைப்பாட்டிலேயே செயற்பட்டுவரும் ஒரு தரப்பினராகும். அதேநேரம், கடந்த காலத்தில் இருந்த அரசாங்கங்கள் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணாது, தேசிய இனப்பிரச்சினையே இல்லையென்று வெளிப்படுத்தி வந்திருக்கின்றன.

இதன்காரணமாக, அந்த அரசாங்கங்கள் எதிர்கொண்ட விளைவுகளை வரலாற்றில் இருந்து ஜே.வி.பி கற்றுக்கொண்டிருக்க வேண்டும். ஆனால் ஜே.வி.பி.அந்த விடயங்களை இன்னமும் உணர்ந்து கொண்டிருப்பதாக தெரியவில்லை. தேசிய இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படாததன் காரணமாகவே நாடு பொருளாதார ரீதியில் நெருக்கடிகளுக்கு முகங்கொடுப்பதற்கு காரணமானது. ஏனென்றால் ஒவ்வொரு வரவு செலவுத்திட்டத்திலும் பாதுகாப்புத்துறைக்கு 20சதவீதத்துக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டு வருகின்றது.

ஆகவே பொருளாதார ரீதியில் முன்னேற்றத்தைக் காண வேண்டுமென்ற உண்மையான நோக்கம் அரசாங்கத்துக்கு காணப்படுமாக இருந்தால் இனப்பிரச்சினைக்கான தீர்வினை காண்பது மிகவும் அவசியமானது.அதற்காக தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்கின்ற அரசியலமைப்பை புதிதாக தயாரிப்பது மிகவும் முக்கியமானது. தமிழ் மக்கள் தங்களது அபிலாஷைகளை பூர்த்தி செய்யுமாறு வலியுறுத்தியே ஏழு தசாப்தங்களாக போராடி வருகின்றார்கள். ஆகவே, அந்த நியாயமான கருத்தினை ஏற்றுக்கொண்டு அரசாங்கம் அரசியலமைப்பு விடயத்தினை தமதமன்றி முன்னெடுக்க வேண்டும் என்றார்.

Related posts

பாராளுமன்றத்தில் கல்வி அமைச்சரிடம் அமீர் அலி வேண்டுகோள்.

wpengine

அம்பாறை,கண்டி தாக்குதல் ஈராக்கிடம் முறையிட்ட ஹரீஸ்

wpengine

ஹஸன் அலி விவகாரம் தொடர்பில் ஆராய்ந்து நியாயம் வழங்க குழுவை நியமிக்க தீர்மானம்!

wpengine