நாட்டை இரண்டாகப் பிளவுபடுத்தும் வகையில் அரசமைப்பை உருவாக்கும் பாதையில் சென்று கொண்டிருக்கும் அரசு, மகாநாயக்க தேரர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அவ்வாறு இல்லாவிடின் எந்தவொரு அரசியல்வாதிக்கும் அரசமைப்பை மாற்றியமைக்க சந்தர்ப்பமளிக்க மாட்டோம் என மெகொட அபேதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியம் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
புதிய அரசமைப்பு ஒன்றைக் கொண்டு வரும் செயற்பாட்டை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று மகாநாயக்க தேரர்கள் கடந்த வாரம் அறிவித்திருந்தனர்.
அவர்களின் கருத்து அரச தரப்பால் நிராகரிக்கப்பட்டமையானது அவர்களுக்கான அகௌரவம் அல்ல. இலங்கையில் வாழும் ஒட்டுமொத்த பௌத்தர்களுக்கும் இழைக்கப்பட்ட சவாலாகும்.
மேலும், 13வது திருத்தச்சட்டத்தின் அடிப்படையில் செயற்பட்டு நாட்டைப் பிளவுபடுத்தும் நோக்கில் செயற்படும் எந்தவொரு அரசுக்கும் அதிகாரம் இல்லை. அவ்வாறு செய்ய முற்படுபவர்கள் தேசத் துரோகிகளே.
எனவே, மகாநாயக்க தேரர்களின் கோரிக்கையை ஏற்று அரசு செயற்பட வேண்டும். மாறாக, அவர்கள் மீது கைவைக்க எத்தனிக்கக்கூடாது என மெகொட அபேதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டுள்ளார்.