கட்டுரைகள்பிரதான செய்திகள்

அரசியலமைப்பு மாற்றம் இவ்வரசுக்கு ஆப்பாகுமா?

(ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை)

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை வீழ்த்தி அமையப்பெற்றுள்ள ஆட்சியை நோக்கி இலங்கை மக்கள் மிகப் பெரும் கனவுகளோடு காத்திருந்தனர். அவைகள் ஒவ்வொன்றாக இவ்வாட்சினாலும் சாத்தியப்படாது என்ற மனோ நிலைக்கு இலங்கை மக்களை தள்ளிக் கொண்டு சென்று கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. தற்போதைய ஆட்சியாளர்கள் கடந்த ஜனாதிபதி தேர்தல் பிரச்சார காலத்தின் போது தேர்தல் முறை மாற்றம், ஜனாதியின் அதிகார குறைப்பு உட்பட சில விடயங்களில் மாற்றத்தை கொண்டு வருவோம் என்ற வாக்குறுதியை இலங்கை மக்களிடம் வழங்கி இருந்தனர். இலங்கை மக்கள் தற்போதைய இலங்கை அரசியலமைப்பின் ஓரிரு பகுதிகளில் மாற்றம் கொண்டுவரப்படல் வேண்டும் என விரும்பியிருந்த நிலையிலேயே இவ் வாக்குறுதி வழங்கப்பட்டிருந்தது. இவற்றுள் இலங்கை மக்களின் பல நாள் கோரிக்கையான ஜனாதிபதியின் எல்லையற்ற நிறைவேற்று அதிகார முறைமையே பிரதானமாக இருந்தது எனலாம். தேர்தல் முறைமை மாற்றம் என்பது சிறு கட்சிகளுக்கு, குறிப்பாக முஸ்லிம் கட்சிகளுக்கு அதிக பாதகமாக உள்ள போதிலும் அது தொடர்பில் அன்று யாருமே சிறிதும் கவனம் செலுத்தவில்லை. அனைவரும் மஹிந்தவை வீழ்த்தும் முயற்சியில் அனைத்தையும் மறந்து போனார்கள் எனலாம். சர்வதேசம் உட்பட பலர் இணைந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை இலங்கை மக்களிடம் ஒரு அரக்கன் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருந்தமை இதற்கான பிரதான காரணமாகவும் அமைந்திருந்தது.

தற்போது இலங்கை அரசியலமைப்பை முற்று முழுதாக மாற்றுகின்ற செயற்பாடு நடைபெற்று வருகிறது. இப்படியான ஒரு பேச்சு கடந்த ஜனாதிபதித் தேர்தலின் ஆரம்ப காலத்தில் இடம்பெற்றிருக்கவில்லை. தற்போது போன்று அன்று அதிகாரப்பரவலாக்கம் தொடர்பான விவாதம் சென்றிருந்தால் அது நிச்சயம் மஹிந்தவுக்கு சாதகமாக அமைந்திருக்கும். இன்றைய ஆட்சியாளர்கள் அன்று சாதூரியமாக அவற்றை தவிர்ந்து கொண்டார்கள் அல்லது இப்படியான ஒரு சிந்தனையின் தேவை அன்று அவர்களுக்கு எழுந்திருக்கவில்லை எனலாம். இவ்வரசானது ஆட்சியமைத்த மிகக் குறுகிய காலத்தினுள் 19வது அரசியலமைப்பு சீர் திருத்தத்தின் ஊடாக இலங்கை அரசியலமைப்பின் சில விடயங்களில் மாற்றம் கொண்டுவந்திருந்தது. அதில் ஒருவர் இரு தடவைகளுக்கு மேல் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடக் கூடாதவாறு மாற்றம் கொண்டுவரப்பட்டிருந்தமை பிரதானமானது எனலாம். இவ்வரசானது அரசியலமைப்பையே மாற்றம் செய்யும் சிந்தனையில் உள்ள போது இச் சீர் திருத்தத்தை அவ்வளவு அவசரமாக கொண்டு வராது அனைத்தையும் ஒன்றாக செய்திருக்கலாம். இச் சீர் திருத்தத்தின் ஊடாக இவ்வரசுக்கு மிகப் பெரும் தலையிடியான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மீண்டும் ஜனாதிபதி அதிகாரத்தை கைப்பற்ற முடியாதவாறு தடுத்துள்ளமையே இதில் உள்ள விசேடமாகவும் அவர்களது அவசரத்துக்கான காரணமாகவும் குறிப்பிடலாம். அன்று மஹிந்த ராஜபக்ஸவினால் ஏற்படுத்தப்பட்ட சவால்கள் மிகக் குறைவாகவே இருந்தன. இதன் காரணமாக அன்று இதனை நிறைவேற்றாமல் போய் இருந்தால் தற்போது மஹிந்த ராஜபக்ஸவுக்கு செல்வாக்கு மித மிஞ்சியளவு அதிகரித்துள்ளதால் இவ்வரசு பாரிய சவாலை எதிர்கொண்டிருக்கும். இன்று நிறைவேற்ற சிந்திக்கப்படும் விடயங்கள் மக்கள் எதிர்ப்பை பெறக் கூடிய வாய்ப்புள்ளது. இதனை நன்கு பழுத்த தற்போதைய ஆட்சியாளர்கள் நன்கே அறிவார்கள். இதன் காரணமாக 19ம் சீர் திருத்தத்தை உள்ளடக்கியதான முற்று முழுதான அரசியல் சீர் திருத்தத்துக்கு முயற்சித்தால் சில வேளை அதனை நிறைவேற்ற முடியாமல் போகும் என்ற சிந்தனை அதனை முற்கூட்டி நிறைவேற்றியதன் இரகசியமாகவும் இருக்கலாம்.

இலங்கை நாடானது இன்னும் இனவாத பேய்களுக்கு தாலாட்டு பாடும் வகையில் தனது அரசியலமைப்பை பேணாது புதிய புரட்சி கரமான பாதையில் பயனிக்கத்தக்கவாறு அரசியலமைப்பின் சில இடங்களில் மாற்றங்களை கொண்டுவர வேண்டியது காலத்தின் தேவை எனலாம். அந்த வகையில் இலங்கை சனத்தொகையின் கால் பங்கினராக உள்ள சிறுபான்மை மக்களை அரவணைத்த அரசியலமைப்பு வரைவு மிகவும் அத்தியவசியமானதாகும். அவர்களை புறக்கணிக்கின்ற போது இலங்கை நாட்டின் வளர்ச்சியே குன்றப்போகின்றது. இலங்கையில் வரையப்பட்டு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட இரு அரசியலமைப்புக்களிலும் ( 1972, 1978 ) சிறுபான்மை மக்களின் கருத்துக்கள், தேவைகள் உள்வாங்கப்பட்டு வரையப்பட்டிருக்கவில்லை. அதன் காரணமாக சிறுபான்மை மக்களின் கருத்துக்களும் உள் வாங்கப்பட்ட ஒரு அரசியலமைப்பை இலங்கையில் நடைமுறைக்கு கொண்டுவர வேண்டிய தேவை உள்ளமை மறுக்க முடியாத உண்மைகளில் ஒன்றாகும். தற்போது இடம்பெறும் அரசியலமைப்பு மாற்ற முயற்சியினை தமிழ் மக்கள் தங்களது தீர்வுப் பொதிகளை சுமந்து வருகின்ற ஒன்றாக கருதுவதோடு முஸ்லிம், சிங்கள மக்கள் இவ் அரசியலமைப்பு தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்குவதன் காரணமாக தாங்கள் பாதிக்கப்பட்டு விடுவோமா என அஞ்சுவதையும் அவதானிக்க முடிகிறது. இவ் அரசியலமைப்பு சீர் திருத்த முயற்சியில் முஸ்லிம் மக்களின் கருத்துக்கள் சிறிதும் உள் வாங்கப்பட்டதாகவோ அல்லது அவர்கள் மீது சிறிதேனும் கரிசனை கொள்ளும் விதத்தில் நடப்பதையோ அறிய முடியவில்லை. இவ் அரசியலமைப்பில் முஸ்லிம்கள் நம்பிக்கையிழந்து நிற்கின்றமை இவ்வரசியலமைப்பு சீர் திருத்தத்தின் முதற் தோல்வியாகும். இலங்கை நாடானது தமிழ் டயஸ்போறாக்களின் நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையில் இயங்குவதான பாரிய குற்றச் சாட்டு இலங்கை மக்களிடையே நிலவி வருகிறது. அதற்கான சமிஞ்சைகள் பல இடங்களில் தென்படுவதையும் அவதானிக்க முடிகிறது.

இலங்கையில் ஜே.ஆர் ஜெயவர்த்தனவின் ஆட்சிக் காலத்தில் இரண்டாவது அரசியலமைப்பு மாற்றம் இடம்பெற்றதன் பிறகு பல அரசியலமைப்பு சீர் திருத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் எந்த முயற்சியும் வெற்றி பெறவில்லை. இதற்கு தற்போதைய அரசியலமைப்பானது போதியளவு பேரின மக்களை திருப்தி செய்கின்ற வகையில் அமைந்திருக்கின்றமையும் சிறு பான்மை மக்களை திருப்தி செய்யும் நோக்கோடு அரசியலமைப்பு சீர் திருத்த/ மாற்ற முயற்சிகள் கொண்டுவரப்பட்டதையும் பிரதான காரணங்களாக குறிப்பிடலாம். மிகவும் சொகுசாக வாழ்ந்தார்களை சாதாரண வாழ்க்கை வாழுமாறு கூறினால் அவ்வளவு இலகுவில் யார் தான் ஏற்கப்போகிறார்கள்? இதுவரை காலமும் இடம்பெற்ற சிறுபான்மை மக்களுக்கான அரசியலமைப்பு மாற்ற முயற்சிகளில் 13ம் சீர் திருத்தம் சிறுபான்மை மக்களுக்கான தீர்வுப் பொதிகளை ஓரளவு கொண்டிருந்தது. அந் நேரத்தில் தமிழ் மக்கள் தங்களுக்கான முற்று முழுதான தீர்வுப் பொதிகளை பெறத் தவறியமை அவர்கள் செய்த மிகப் பெரும் தவறு எனலாம். அப்படியான ஒரு சூழ் நிலை இதன் பிறகு ஒரு போதும் வராது. இவ் அரசியலமைப்பு சீர் திருத்தமானது முஸ்லிம் மக்களை முற்று முழுதாக புறக்கணித்தே கொண்டுவரப்பட்டிருந்தது. இப்போதும் அப்படியான ஒரு சீர் திருத்தத்தை கொண்டுவரவே சிந்திக்கப்படுகிறது. தமிழ் மக்கள் முஸ்லிம்களுக்குரிய தீர்வை வழங்கி தங்களது விடயங்களை சாதிக்க இன்றும் முயல்வதாக இல்லை. இவ்வாறான நிலையில் பெரும்பான்மையின மக்கள் அவர்களது தேவைகளை புரிந்துகொண்டு, விட்டுக்கொடுத்து, அவர்களது தேவைகளை நிறைவு செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பதில் எதுவித நியாயமுமில்லை. முதலில் தமிழ் மக்கள் தங்களது இனவாத முகங்களை கழுவ வேண்டிய தேவை உள்ளமை இந்த இடத்தில் புலனாகின்றது. அவர்களிடம் தங்களது மொழியை தாய் மொழியாக கொண்டுள்ள முஸ்லிம் மக்களுக்கான தீர்வுகளை வழங்கும் சிந்தனை எழும் வரை இவர்களிடம் இலங்கை மக்கள் சமஸ்டி போன்ற முக்கிய தீர்வுப் பொதிகளை நம்பி வழங்கும் தகுதி பெற மாட்டார்கள். இரண்டாம் அரசியலமைப்புக்கு பிறகு கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பு சீர் திருத்த முயற்சிகள் அனைத்தும் சிறு பான்மை மக்களின் தீர்வுகளை பிரதானமாக கொண்டிருந்தது. சிறுபான்மையின மக்களின் தீர்வுகளை மையமாக கொண்டு இலங்கை அரசியலமைப்பை மாற்ற அவ்வளவு இலகுவில் அந்த மக்கள் சம்மதம் தெரிவிக்கப்போவதில்லை. அந்த மனோ நிலை இன்று இலங்கை மக்களிடம் இருப்பதாகவும் தெரியவில்லை.

தற்போதைய அரசியலமைப்பு மாற்ற முயற்சிகளில் மிகவும் மும்முரமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு செயலாற்றிக்கொண்டிருக்கின்றது. அரசியலமைப்பு மாற்ற முயற்சி தொடர்பான பேச்சுக்களின் ஆரம்ப காலப்பகுதியில் தங்களுக்கு இப்படியான தீர்வு வேண்டும் என்ற பேச்சுக்களை தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் வாய்களில் இருந்து அவதானிக்க முடிந்தது. தற்போது குறித்த அரசியலமைப்பு மாற்றத்தில் இப்படியான திருத்தங்கள் வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கூறுவதை விடுத்து அதனை கொண்டு வர வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கையாக அமைந்துள்ளது. அண்மையில் பௌத்த பீடங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து அரசியல் சீர் திருத்தம் ஒன்று தேவையில்லை என்ற கோரிக்கையை முன் வைத்திருந்தன. முந்தியடித்துக்கொண்டு வந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுமந்திரன் அவர்கள் அவ்வாறு கூறுவதை கண்டித்தும் அரசியலமைப்பை கொண்டுவர வேண்டும் என்றும் கருத்து தெரிவித்திருந்தார். அது மாத்திரமன்றி பல இடங்களில் இவ்வரசு எது செய்தாவது புதிய அரசியலமைப்பை கொண்டு வர வேண்டும் என்ற வகையிலே கருத்து தெரிவித்தும் வருகின்றார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இவ்வாறு இவ் விடயத்தில் மிகவும் கரிசனை கொள்வதே இவ்வரசியலமைப்பில் எவ்வாறான திருத்தங்கள் வரப்போகின்றது என்ற விடயத்தை அறிந்துகொள்ளச் செய்கிறது. தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பினுள் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் குழுவினர் பலமான சவாலை வழங்குவதன் காரணமாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இனியும் தமிழ் மக்கள் விடயத்தில் உரிய தீர்வை பெற்றுக்கொடுக்காது போனால் மிகப் பெரும் சவாலை எதிர்கொள்ள நேரிடும். மிக விரைவில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் வரவுள்ளதால் அதற்குள் எப்படியான தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அரசியலமைப்பை கொண்டு வரச் செய்து தீர்வை பெற முயல்வார்கள் என்பது பலரது கணிப்பாகும்.

சிறு பான்மையின மக்களை திருப்தி செய்யும் வகையிலான அரசியலமைப்பானது காலத்தின் தேவையாக இருப்பினும் அதனை கொண்டு வரும் சூழ் நிலை தற்போதில்லை. இலங்கை அரசியலமைப்பில் மாற்றம் கொண்டு வருவதாக இருந்தால் பெரும்பாலான பகுதிகளை மாற்ற பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை. இன்னும் சில பகுதிகளை மாற்ற பெரும்பான்மையோடு சேர்த்து சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படல் வேண்டும். பாராளுமன்றத்திலும் இலங்கை நாட்டிலும் பேரின மக்களே மூன்று மடங்களவில் அதிகமாக இருப்பதன் காரணமாக அவர்களின் சம்மதமின்றிய தீர்வு ஒரு போதும் சாத்தியப்படப் போவதில்லை. இலங்கை நாட்டில் இன ரீதியான முரண்பாடுகள் அதிகம் நிலவி வருகின்றனது. அதிலும் குறிப்பாக முஸ்லிம் மக்கள் மீதான இன ரீதியான பாய்ச்சல்கள் மிக அதிகமாகவே உள்ளது. சிறு பான்மை மக்களை திருப்தி செய்யும் வகையிலான தீர்வுகள் கொண்டு வரப்படும் போது பெரும் பான்மை மக்கள் தங்களுக்கு முன்பிருந்த பலத்தை சிறிதளவு இழக்க நேரிடலாம். இருவருக்கு சமனற்ற முறையில் ஒரு பொருள் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களுக்குள் சமனான முறையில் அப் பொருளை பகிர்ந்தளிக்கும் முயற்சிகள் இடம்பெற்றால் முன்னர் அதிகமாக வழங்கப்பட்ட நபருக்கு சற்று குறைவான பங்கே கிடைக்கும். அதனை குறித்த நபர் ஏற்றுக்கொள்ள வேண்டும். குறித்த நபர் அதனை ஏற்றுக்கொள்ள இதனை ஏற்கும் மனோ நிலை இருக்க வேண்டும். இலங்கை நாட்டில் இவ்வாறான விடயங்களை கருத்தில் கொண்டாவது இலங்கை மக்களிடையே இன ரீதியான புரிந்துணர்வுகளை ஏற்படுத்தும் செயற்திட்டங்கள் அறிமுகம் செய்யப்படல் வேண்டும். அவ்வாறல்லாது இவ்வாறான தீர்வுப் பொதிகள் ஒரு போதும் சாத்தியமாகப் போவதில்லை.

இலங்கை நாடானது சர்வதேசத்தின் கோரப்பிடிக்குள் அகப்பட்டு கொண்டுள்ளது. குறிப்பாக இலங்கையினுள் அமேரிக்கா, இந்தியா மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளின் செல்வாக்குகள் அதிகமாக காணப்படுவதை அவதானிக்க முடிகிறது. இந்தியாவை பொறுத்தமட்டில், அது இலங்கையை ஆட்கொள்ள தமிழர்கள் கையில் அதிகாரம் பொருந்திய அலகுகள் இருப்பது மிகவும் சாதகமானது. இலங்கை தமிழ் மக்கள் இந்திய நாட்டுடன் ஒன்றிணைந்து செல்லும் தன்மை கொண்டவர்களாகாவே உள்ளனர். தங்களுக்கான தீர்வுகளை இலங்கை அரசிடம் முன் வைப்பதை விட இந்தியா அரசிடம் முன் வைக்கின்றார்கள் என்றாலும் தவறில்லை. தமிழ் தலைவர்கள் மிக அதிகமாக இந்தியா நாட்டு தலைவர்களுடன் தொடர்பில் உள்ளதான பேச்சுகள் உள்ளன. இன்றைய தமிழக அரசியலில் இலங்கை ஈழ அரசியல் மிகப் பெரும் பங்கு வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக சர்வதேசமே கண் குத்தி நிற்பதும் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலுமாக அமைந்துள்ள திருகோணமலை துறைமுகத்தை வடக்கு, கிழக்கை இணைத்து சமஸ்டி அதிகாரத்தையும் வழங்கி தமிழர்கள் கையில் வைத்திருப்பதன் மூலம் தனக்குள்ள பாரிய அச்சுறுத்தல்களை மிக இலகுவாக எதிர்கொள்ள முடியும். இதன் காரணமாக இவ்வரசியலமைப்பில் இலங்கை வடக்கு, கிழக்கு ஆகியவற்றை இணைத்து சமஸ்டி தீர்வை நோக்கிய காய் நகர்த்தல்களை செய்யலாம். இலங்கையின் ஆட்சி மாற்றத்தில் இந்தியாவின் பங்களிப்பு அளப்பரியது எனலாம். அதற்கான பிரதியுபகாரமாக இலங்கை ஆட்சியாளர்கள் இவ்வாறான விட்டுக்கொடுப்புக்களை மேற்கொள்ளலாம். இந்தியாவின் இலங்கையுடனான தொடர்பு மற்றும் இந்தியாவின் தேவை ஆகியன இலங்கையில் இவ்வாறான சதி நிகழ்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறது.

இலங்கை நாடு சர்வதேசத்தின் அழுத்தத்திலிருந்து தப்பித்துக்கொள்ள தமிழ் மக்களை திருப்தி செய்யும் வகையிலான தீர்வை முன் வைக்க வேண்டிய தேவை உள்ளது. எப்படித் தான் அமெரிக்க போன்ற முக்கிய நாடுகள் இலங்கைக்கு ஆதரவளித்தாலும் தமிழ் மக்கள் மீதான யுத்த குற்றச் சாட்டுக்கள் தெளிவாக நிரூபணம் செய்யப்பட்டிருப்பதால் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையிலான ஓரளவான தீர்வுத் திட்டங்களையாவது இலங்கை அரசு முன் வைத்தேயாக வேண்டும். அவற்றில் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் பல தீர்வுத் திட்டங்களில் இலங்கை அரசியலமைப்பை மாற்றி தீர்வு வழங்குவதே ஓரளவு பாதகம் குறைந்தது எனலாம். அவர்களது ஏனைய தீர்வுப் பொதிகள் இலங்கையின் முன்னாள், இந்நாள் ஆட்சியாளர்களையும் பாதுகாப்பு துறையுடன் சம்பந்தப்பட்ட முக்கிய அதிகாரிகளையும் சர்வதேசத்தின் முன் கைகட்டச் செய்துவிடலாம். அதன் காரணமாக சர்வதேசத்தின் பிடியிலிருந்து தப்பித்துக்கொள்ள இலங்கை அரசியலமைப்பை மாற்றி அவர்களுக்கு ஓரளவான தீர்வுப் பொதிகளை வழங்க வேண்டிய நிர்ப்பந்த நிலையில் இலங்கை அரசுள்ளது. இந்த நிலையில் இலங்கையில் இப்படியானதொரு சம்பவம் இடம்பெறப்போகிறதென அறிந்த இலங்கை பௌத்த மக்களின் பேரங்கீகாரம் பெற்ற அஸ்கிரிய பீடமானது அதனை தடுக்கும் வகையில் புதிய அரசியலமைப்பு தேவையில்லை என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளது. இவர்களின் இக் கோரிக்கையானது இலங்கை அரசை மிகப் பெரும் இக்கட்டுக்குள் தள்ளிவிடும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. இக் கருத்துக்கு எதிராக அமைச்சர் ராஜித, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் கருத்து வெளியிட்டுள்ளனர். இருந்த போதிலும் மிக நிதானமாக ஜனாதிபதி மைத்திரி அஸ்கிரிய பீடத்துடன் குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்படும் என்ற கருத்தை வெளியிட்டிருந்தார். இந்த விடயங்கள் இலங்கை மக்களுக்கு பல செய்திகளை வெளிப்படுத்துகிறது.

அண்மையில் பொது பல அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் கைதாகி புதுமை நீதி நிலை நாட்டப்பட்ட விடயத்தில் அஸ்கிரிய பீடத்தின் செல்வாக்கு இருந்ததான தோற்றம் தற்போதைய ஆட்சியாளர்களால் ஏற்படுத்தப்பட்டிருந்தது. இத் தோற்றமானது ஞானசார தேரர் கைது விடயத்தில் இலங்கை ஆட்சியாளர்கள் மிகப் பெரும் சவாலை எதிர்கொண்டுள்ளதை முஸ்லிம் மக்கள் புரிந்துகொண்டு செயற்பட வேண்டும் என்ற இவ்வாட்சியாளர்களை நியாயப்படுத்தும் வாதம் அத் தோற்றத்தில் பொதிந்திருந்தது. தற்போது அரசியலமைப்பு மாற்றம் பற்றிய அஸ்கிரிய பீடத்தின் கருத்தை ஒரு பொருட்டாகவே கொள்ளாது இவ்வாட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறானவர்களுக்கு ஞானசார தேரரை அஸ்கிரிய பீடங்களின் கருத்தை மீறி உரிய நீதியின் அடிப்படையில் கைது செய்வது பெரிய விடயமல்ல. அது மாத்திரமன்றி ஞானசார தேரரை அடக்குவதும் பெரிய விடயமல்ல. அஸ்கிரிய பீடமானது இலங்கை நாட்டின் அதி உச்ச மரியாதைக்குரிய ஒரு இடமாகும். அதன் குறித்த கருத்து தொடர்பில் கருத்துக்களை வெளியிடும் அனைவரும் மிகவும் கவனமாகவும் மரியாதையாகவும் கருத்துக்களை வெளியிட வேண்டும். சமூக வலைத் தளங்களை பயன்படுத்தும் ஒரு சிலர் அவர்கள் மீது அரசியல் சாயம் பூச விளைவதெல்லாம் பொருத்தமானதல்ல. அவர்களுக்கு இலங்கையில் வழங்கப்படும் மரியாதைக்கு அப்படி ஒரு தேவை இருக்கும் என்பதை எதிர்பார்க்க முடியாது. குறித்த அஸ்கிரிய பீடத்தை பௌத்த மதத்தை சேர்ந்த எவரும் அவ்வளவு இலகுவில் விமர்சித்து விட மாட்டார்கள். அப்படி இருக்கையில் இவ்விடயத்தில் சிறிதேனும் உடன்பாட்டு ரீதியான கலந்துரையாடல்களை அமைக்காது இவ்வாட்சியாளர்கள் எதிர்த்து கருத்து வெளியிட்டுள்ளமையானது இந்த அரசானது இவ் அரசியலமைப்பை எப்படியாவது நிறைவேற்றியாக வேண்டும் என்ற மிகப் பெரும் அழுத்தத்தில் இருப்பதை அறிந்துகொள்ளச் செய்கிறது. அல்லாது போனால் இவர்களது தெளிவுபடுத்த முயற்சிக்கின்றோம் என்ற வகையிலான வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தியிருப்பார்கள். அதற்கெல்லாம் அவர்களுக்கு நேரமில்லை என்பதையும் மிக விரைவில் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும் என்பதையும் சுட்டிக் காட்டுகிறது.

அஸ்கிரிய பீடமானது தற்போதைய அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கு வழங்கப்பட்ட முன்னுரிமை இல்லாதொழிக்கப்படும் என அஞ்சியே அதனை கொண்டுவருவதை தடுக்க முயற்சிக்கின்றது. இதன் மூலம் அவர்களே தற்போதைய அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கு முன்னிலை வழங்கப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்கிறார்கள். இலங்கை அரசியலமைப்பின் படியும் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இன்று உலகில் முன்னேற்றம் கண்ட நாடுகளை அவதானிக்கும் போது அவைகள் பெரும் பாலும் மத ரீதியான புரிந்துனர்வுகளுடன் வாழும் நாடாக இருக்கும் அல்லது மதத்தில் அதீத பற்றற்ற போக்குடையவர்களாக இருப்பர். இதற்கு காரணம் அந் நாட்டில் தான் திறமைகள் மதிக்கப்படும். இலங்கை நாட்டில் நான்கில் ஒரு பங்கினர் சிறுபான்மை மக்களாக இருப்பதால் அவர்களை புறக்கணித்த பாதை ஒரு போதும் வெற்றி பெறாது. ஒரு குறித்த வியாபரத்தை நான்கு பேர் சேர்ந்து செய்வதற்கு திட்டமிடுகின்றனர். அவர்கள் நான்கு பேரும் ஒரு மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தால் அவர்களுக்கிடையிலான தொடர்ச்சியான செயற்பாட்டுக்காக அவர்கள் தாங்கள் கடைப்பிடுக்கும் மதத்தை அடிப்படையாக கொள்ளலாம். அதில் ஒருவர் வேறு மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் அவர்களுக்கிடையில் தொடர்ச்சியான செயற்பாட்டுக்கான பாதை ஒரு மதத்தை அடிப்படையாக கொண்டிருந்தால் ஒரு போதும் செய்ய முடியாது. இது போன்று தான் இலங்கை நாட்டின் செயற்பாடுமாகும். இலங்கை நாடு முன்னேற்றப்பாதையில் பயணிக்க வேண்டுமாக இருந்தால் சிறுபான்மையின மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானதாகும் என்பதை இலங்கை பெரும்பான்மையின மக்கள் புரிந்து செயற்பட வேண்டும்.

இலங்கை மக்களின் பெரும் மரியாதைக்குரிய அஸ்கிரிய பீடங்களை எதிர்த்து இவ்வாட்சியாளர்கள் அரசியலமைப்பின் ஒரு சிறிய விடயத்தில் கூட மாற்றம் கொண்டுவர முடியாதென்பது யதார்த்தம். அஸ்கிரிய பீடத்தை எதிர்த்து கருத்து வெளியிட்டவர்கள் தாங்கள் மக்கள் ஆணையை ஏற்றே இதனை செய்ய முயற்சிக்கின்றோம் என்ற நியாயத்தை கூறி வருவதை அவதானிக்க முடிகிறது. கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் இலங்கை அரசியலமைப்பின் ஒரு சில பாகங்களில் மாற்றம் கொண்டுவருவோம் என்று கூறியவர்கள் இன்று முழு அரசியலமைப்பையும் மாற்றப்போவதாக கூறுகின்றனர். இது எப்படி மக்களிடம் கூறிய, மக்கள் அங்கீகாரம் வழங்கிய அரசியலமைப்பாக கருத முடியும். இவர்கள் இவ்வரசியலமைப்பை சர்வதேசம் மற்றும் டயஸ்போறாக்களின் அழுத்தத்தின் காரணமாகவே கொண்டுவர சிந்திக்கின்றனர். திடீரென அரசியலமைப்பை மாற்றும் ஞானம் பிறந்தமையே இதனை தெளிவாக அறியச் செய்கிறது. இலங்கை நாடானது புதிய புரட்சிகர பாதையில் செயற்படும் வகையிலான அரசியலமைப்பு மாற்றப்பட வேண்டிய தேவை உள்ளது. இருப்பினும் அதனை நோக்காக கொண்ட அரசியலமைப்பு மாற்றம் கொண்டுவரப்போவதான கதைகளை சிறிதும் காணக்கிடைக்கவில்லை. இருப்பினும் அவர்கள் வீதிக்கு இறங்கினால் இவ்வரசு காடேற வேண்டும். இதன் மூலம் இவ்வரசானது பௌத்த மக்களின் எதிர்ப்பையும் சம்பாதித்து கொண்டிருக்கின்றது. ஏற்கனவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பக்கம் பேரின வெள்ளம் கரை புரண்டோடிக் கொண்டிருக்கின்றது. அந்த நிலையில் இப்படியான சம்பவங்களும் அரங்கேறினால் இவ்வாட்சியாளர்கள் மேலும் தங்களுக்கான சவாலை அதிகரிப்பார்கள். இதனை நிறைவேற்றுவதில் இவர்கள் கொள்ளும் சவாலானது சர்வதேசத்தில் இலங்கை நாட்டை சவாலுக்குட்படுத்தும் என்பதே இங்கு கவனிக்கத்தக்க முக்கிய விடயமாகும்.

அரசியலமைப்பு மாற்ற முயற்சியானது இலங்கை மக்களின் அங்கீகாரத்தை நோக்கிச் செல்லும். இது மக்கள் அங்கீகாரத்தை பெறுவதானது இவ்வரசை மக்கள் பூரணமாக ஏற்றதாகவும் பொருள்கொள்ளச் செய்யும். இதன் காரணமாக இதனை தோற்கடிப்பதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அணியினர் மிகவும் மும்முரமாக செயற்படுவார்கள் என்பதில் ஐயமில்லை. இன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஸ அணியினருக்கு அஞ்சி இவ்வரசானது தேர்தலையே பிற்போட்டு வரும் விடயம் வெளிப்படையானது. இப்படியான நிலையில் அரசியலமைப்பு மாற்றமானது மக்கள் அங்கீகாரத்தை அவ்வளவு இலகுவில் பெற்றுவிடமாட்டது. இன்றைய அரசியலமைப்பு மாற்ற முயற்சியின் பல விடயங்களில் பேரின மக்களை திசை திருப்ப ஏதுவான விடயங்கள் அமையப்பெற வாய்ப்பு அதிகமுள்ளது. இவற்றின் விளைவுகளால் இவ்வரசியலமைப்பு அவ்வளவு இலகுவில் மக்கள் அங்கீகாரம் பெற்று விடமாட்டாது. இன்று இவ்வரசியலமைப்பில் தமிழ் மக்கள் தங்களுக்கான சில விடயங்களை எதிர்பார்த்து நிற்கின்றனர். அவைகள் அவர்களுக்கு கிடைக்காது போகின்ற போது அவர்கள் நிச்சயம் அதனை எதிர்ப்பார்கள். தமிழ் அரசியல் தலைவர்கள் மிகவும் நுணுக்கமாக வெளிப்படையில் தெரியாதவாறு தங்களுக்கு தேவையான தீர்வுகளை பெற்றுக்கொள்ள காய்களை நகர்த்துவதாக அறிய முடிகிறது. இதனை புரிந்துகொள்ளும் மனோ நிலை தமிழ் மக்கள் இருப்பதாக தெரியவில்லை. அதே போன்று முஸ்லிம் மக்களும் கொண்டு வரப்படும் அரசியலமைப்பு தொடர்பில் தங்களுக்கு ஏதேனும் பாதிப்பு நேர்ந்து விடுமோ என அஞ்சியே இருக்கின்றனர். இதன் காரணமாக முஸ்லிம் மக்கள் இந்த அரசியலமைப்பு மிகவும் பரிசீலனை செய்தே ஆதரிப்பார்கள். கொண்டு வர முயற்சிக்கப்படும் அரசியலமைப்பில் மிக நுணுக்கமான பார்வை செலுத்த வேண்டிய தேவை முஸ்லிம்களுக்கு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

எது எவ்வாறு இருப்பினும் மிகப் பெரும் பல சவால்களை கடந்து இவ்வரசியலமைப்பு அவ்வளவு இலகுவில் நிறைவேறிவிடாது என்பதே யதார்த்தம். கொண்டுவரப்படும் அரசியலமைப்பு தோல்வியை தழுவுவதற்கான சந்தர்ப்பமே அதிகமுள்ளது. அவ்வாறு கொண்டு வரப்படும் அரசியலமைப்பு தோல்வியை தழுவுமாக இருந்தால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மிக இலகுவாக இவ்வாட்சியை தனது கைக்குள் கொண்டு வந்து விடுவார். இவ்வாட்சியானது அரசியலமைப்பு மாற்றம் ஒன்றை கொண்டு வந்து தனது ஆப்பு வைத்துக்கொள்ளுமா என்ற வினாவுக்கான விடைகளை மிக விரைவில் பெற்றுக்கொள்ளலாம்.

குறிப்பு: இக் கட்டுரை இன்று 20-07-2017ம் திகதி வியாழக் கிழமை கிழமை நவமணிப் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது. இக் கட்டுரை தொடர்பில் ஏதேனும் விமர்சனங்கள் இருப்பின் akmhqhaq@gmail.com எனும் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன். இது அச்சு ஊடகத்தில் வெளியிடப்படும் எனது 84வது கட்டுரையாகும்.

 

Related posts

இலங்கையின் தனித்துவ டிஜிட்டல் அடையாள அட்டைத் திட்டம் – 450 மில்லியனை வழங்கிய இந்தியா!

Editor

பஹ்ரெனில் இலங்கை பெண்ணுக்கு நடந்த கொடுமை

wpengine

நிதி மோசடியில் ஈடுபட்ட போலி வைத்தியர் பொரளையில் கைது!

Editor