Breaking
Sun. Nov 24th, 2024

சர்வதேச கண்காணிப்பு வலையமைப்புக்குள் மீண்டும் இலங்கை வந்து விட்டது’ என்ற பட்டவர்த்தனமான உண்மையை அரசாங்கம் கண்ணை கட்டி, கணக்கு வித்தை காட்டி சிங்கள மக்களிடம் மறைக்க முயல்கிறது. சிங்கள மக்களுக்கு இதை எடுத்து கூற, முன்னாள் நல்லிணக்க துறைசார் அமைச்சர் என்ற முறையில் நான் கடமைப்பட்டுள்ளேன்.

இலங்கையை கண்காணித்து, இலங்கை பற்றிய வாய்மொழி அறிக்கையை எதிர்வரும் செப்டம்பர்/அக்டோபரிலும், எழுத்து மூல அறிக்கையை அடுத்த வருடம் பெப்ரவரி/மார்ச்சிலும் சமர்பிக்கும்படியும், அதையடுத்து, இலங்கை திருந்தாவிட்டால் பொறுப்பு கூறல் தொடர்பாக அடுத்து எடுக்கப்பட வேண்டிய காத்திரமான நடவடிக்கைகளை அடுத்த வருடம் செப்டம்பர்/ அக்டோபரில் சிபாரிசு செய்யும்படியும், ஐநா மனித உரிமை ஆணைக்குழு (UNHRC) தீர்மானம், ஐநா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தை (OHCHR) கோரியுள்ளது என்பதை இலங்கை ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச கவனத்தில் கொள்ள வேண்டும் என முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினறுமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி பாராளுமன்ற உறுப்பினர் மனோ மேலும் கூறியதாவது, அரசாங்கம் இன்று கண்ணை கட்டி, கணக்கு வித்தை காட்டுகிறது. தமக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளையும், வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளாத நாடுகளையும் கூட்டிக்காட்டி ஐநா தீர்மானம் தோற்றுவிட்டது என கூறுகிறது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பெற்ற வாக்குகள் சுமார் 69 இலட்சம். அவருக்கு எதிராக வாக்களித்த, வாக்களிக்காத, ஒட்டுமொத்த பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் தொகை சுமார் 90 இலட்சம். ஆகவே, “வாக்களிக்காதவர்களும் நம்மவரே” என்ற அரசாங்கத்தின் கணக்கின்படி, கோட்டாபய ராஜபக்ச உண்மையில் தோல்விதான் அடைந்துள்ளார். ஆகவே அவர் அரசியலை விட்டு வீட்டுக்கு போக வேண்டுமோ? என்ற கேள்வியை வெளிவிவகார அமைச்சர், எனது கொழும்பு மாவட்ட நண்பர் தினேஷ் குணவர்தனவிடம் கேட்க விரும்புகிறேன்.

இலங்கை அரசாங்கம் கனவு கண்டுக்கொண்டு, ஊரை ஏமாற்றிக்கொண்டு இருக்கும் வேளையில், ஐநா செயற்பட போகிறது. அதற்கான பலமும், அதிகாரமும் இந்த தீர்மானம் மூலம் ஐநா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்துக்கு (OHCHR) கிடைக்கிறது. ஐநா மனித உரிமை ஆணைக்குழுவில் (UNHRC) அங்கம் வகிக்கும், வகிக்காத சுமார் 40 இணை அனுசரணை நாடுகளால் கொண்டு வரப்பட்ட இலங்கை பற்றிய இந்த தீர்மானம், இலங்கையை கண்காணிக்கும் பொறுப்பை மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்துக்கு (OHCHR) வழங்குகிறது.

முதற்கட்டமாக பன்னிரெண்டு (12) விசேட ஊழியர்கள், இலங்கை கண்காணிப்பு தொடர்பில், ஐநா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தில் நியமிக்கப்பட உள்ளார்கள். மேலும் இலங்கை தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்க சுமார் 29 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை அலுவலகம் ஐநா பொதுசபையை கோரியுள்ளது.

இதன்மூலம், சாட்சியம், தகவல் ஆகியவற்றை சேகரிக்கும், கண்காணிக்கும் நடவடிக்கைகளை, அலுவலகம் ஆரம்பிக்கும். பாதிக்கப்பட்டோருக்கான உதவியுடன் பொறுப்பு கூறல், நீதி விசாரணை, மனித உரிமை மீறல், சர்வதேச மனித உரிமங்கள் மீறப்படல் ஆகியவை தொடர்பில் கண்காணிப்பு முன்னெடுக்கப்படும்.

எனவே பொறுப்பு கூறல், நீதி விசாரணை, தண்டனை, நஷ்டஈடு, காணாமல் போனோர் அலுவலகம் சுயாதீனமாக செயற்படல், அரசியல் தீர்வு, மாகாணசபை தேர்தல், பன்மைத்துவம் ஏற்பு ஆகியவை தொடர்பில் ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவின் அரசாங்கம் இனியும் சர்வதேசத்துடன் பேட்டை ரவுடியை போன்று முரண்பட முடியாது. அத்தகைய பிற்போக்கு அரசியல் விளையாட்டுக்கு இனி கால அவகாசமும் இல்லை. அதற்கு இது உள்நாட்டு மைதானமும் இல்லை.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *