இவ்வருட இறுதிக்குள் மின்சாரத்தை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கையை 100 சதவீதம் பூர்த்திசெய்ய எதிர்பார்ப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (05) முற்பகல் தெரிவித்தார்.
கெரவலபிட்டியவில் நிர்மாணிக்கப்படும் இலங்கையின் முதலாவது திரவ இயற்கை எரிவாயு (LNG) மின் உற்பத்தி நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டிருந்த போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தேசிய மின் கட்டமைப்பில் 350 மெகாவொட் மின்சாரத்தை இணைக்கும் இம்மின் உற்பத்தி நிலையத்தின் முதல் கட்டம் 21 மாதங்களுக்குள் நிறைவுசெய்ய எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்போது உற்பத்தி செய்யப்படும் 220 மெகாவொட் மின்சாரம் மற்றும் 12 மாதங்களில் நிறைவுசெய்யப்படவுள்ள இரண்டாம் கட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் 130 மெகாவொட் மின்சாரமும் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்படவுள்ளது.
முதலாவது திரவ இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டதை தொடர்ந்து பிரதமர் ஆற்றிய முழுமையான உரை வருமாறு,
´நாம் நாட்டின் ஆட்சியை பொறுப்பேற்று குறுகிய காலப்பகுதியிலேயே கொரோனா தொற்றுக்கு முகங்கொடுக்க நேரிட்டது. பலம் பொருந்திய நாடுகளைவிட நாம் அந்நிலைமைய சிறப்பாக நிர்வகித்தோம். அதனுடன் நின்றுவிடாது நாம் எதிர்காலத்தில் ஏற்படும் சவால்களுக்கும் மிகுந்த பொறுப்புடன் முகங்கொடுப்போம்.
கடந்த நல்லாட்சி அரசாங்கம் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளவில்லை. நாம் ஆரம்பித்த அபிவிருத்தி திட்டங்களை நிறுத்தினர். சுமார் 5 ஆண்டு காலமாக நாட்டின் அபிவிருத்தி பின்னோக்கி சென்றது.
நாட்டினதும், நாட்டு மக்களதும் நலனுக்காக நாம் மீண்டும் அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்துள்ளோம். எரிசக்திக்கு முக்கியத்துவமளித்தே இன்று உலகம் தீர்மானம் மேற்கொள்கிறது. அந்தளவிற்கு எரிசக்தி எமது வாழ்விற்கு முக்கியமானதாகும்.
மின்சக்தி துறையில் ஏற்படக்கூடிய நெருக்கடியை முன்கூட்டியே அறிந்திருந்தமையாலேயே நீர் மன்சக்தி மீது மாத்திரம் தங்கியிராது நுரைச்சோலை நிலக்கரி மின் நிலையத்தை நிறுவினோம். அதற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்த போதிலும், கடந்த காலத்தில் ஏற்பட்ட வரட்சி நிலைமையை சமாளிக்க அது பேருதவியாக அமைந்தது.
நாம் அத்துடன் நின்றுவிடவில்லை. காற்றாலை மின் உற்பத்தி, வெப்ப மின் உற்பத்தி நிலையம் மற்றும் அண்மையில் திறந்துவைக்கப்பட்ட திண்மக்கழிவு மின் உற்பத்தி நிலையம் மற்றும் சூரிய சக்தி மூலமும் மக்களுக்கு குறைந்த செலவில் மின்சாரம் வழங்க நாம் பணியாற்றி வருகின்றோம்.
உலகின் உயரிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இன்று நிர்மாணிக்கப்படுவது 350 மெகாவொட் திறன் கொண்ட திரவ இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையமாகும்.
இலங்கையில் மின்சக்தியை உருவாக்க நாங்கள் எப்போதும் புதிய வழிமுறைகளை பின்பற்றியுள்ளோம். முதலாவது நிலக்கரி மின் உற்பத்தி நிலையம், முதலாவது வெப்ப மின் நிலையம், முதலாவது காற்றாலை மின் உற்பத்தி நிலையம், சமீபத்தில் முதலாவது திண்மக்கழிவு மின் உற்பத்தி நிலையத்தையும் திறந்தோம்.
இன்று, இந்த மின் உற்பத்தி நிலையம் இலங்கையில் முதலாவது திரவ இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையமாக ஆரம்பிக்கப்படுகிறது. நாம் பேச்சில் அன்றி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதிலேயே முதன்மையாக விளங்குகிறோம். எமது அரசாங்கமும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவே பழகியுள்ளது. அதுவே நமக்கு சக்தியைத் தருகிறது.
இந்த மின் உற்பத்தி நிலையத்தின் முதலாவது கட்டம் 21 மாதங்களுள் நிறைவுசெய்யப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. முதல் கட்டத்தின் ஊடாக 220 மெகாவொட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படவுள்ளது.
இலவச கல்வியால் ஊக்குவிக்கப்பட்ட சிறந்த உள்ளூர் பொறியியலாளர்கள் மீது நம்பிக்கை கொண்டு அவர்களுக்கு முழு பொறுப்பையும் வழங்குவதன் மூலம் மட்டுமே அதை நிறைவேற்ற முடியும். இரண்டாவது கட்டம் ஓராண்டிற்குள் நிறைவுசெய்யப்படும். இரண்டாவது கட்டத்தின் ஊடாக 130 மெகாவொட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் 4 ஆண்டுகளுக்குள் இந்நாட்டின் மின்சக்தி தேவையை முழுமையாக வழங்குவதற்கு நாம் நடவடிக்கை மேற்கொள்வோம்.
இன்று கெரவலபிட்டியவில் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பற்ற திரவ இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையத்தின் ஊடாக நாட்டில் நிலவும் மின்சாரத்திற்கான கேள்வியில் 13 சதவீதம் பூர்த்திசெய்யப்படும். இதுதான் ஒரு நாட்டின் வளர்ச்சி என்பதாகும். நாம் அபிவிருத்தியின் போது முக்கிய தேவைகளை அடையாளம் காண்பது அவசியமாகும்.அவ்வாறன்றி ஒவ்வொருவரது தனிப்பட்ட தேவைக்கேற்ப தேசிய வேலைத்திட்டங்களை மேற்கொள்ள முடியாது.
நாம் நாட்டை பொறுப்பேற்று குறுகிய காலத்தில் 03 மின் உற்பத்தி நிலையங்களை நாட்டிற்காக அர்ப்பணித்துள்ளோம். இடைநடுவே நிறுத்தப்பட்ட வேலைத்திட்டங்கள் எவையும் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக நிறுத்தப்படமாட்டாது. அவை அனைத்தையும் அதனைவிட சிறப்பாகவும் துரிதமாகவும் நிறைவு செய்வதே எமது நோக்கமாகும்.
இதன் மூலம் மின் கட்டணத்தை குறைத்து பொதுமக்களுக்கு நிவாரணத்தை பெற்றுக் கொடுக்க முடியும். வேகமான அபிவிருத்தியின் இயக்கி எரிசக்தி என்பதை நாம் உலகுக்கு நிரூபித்துள்ளோம். தடையற்ற மின் விநியோகத்தை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என நான் கருதுகிறேன்.
இலங்கை மின்சார சபையை மக்களுக்கு நெருக்கமாக்குவதற்கு இதுபோன்ற திட்டங்கள் பெரும் உதவியாக அமையும். அதற்கு நாம் தயார்.
நாம் இதுவரை நாட்டில் 99.8 சதவீதமானோருக்கு மின்சாரத்தை பெற்றுக் கொடுத்துள்ளோம். இன்னும் சுமார் 84000 பேர் வரையிலானோரே எஞ்சியுள்ளனர். நாம் இவ்வாண்டு இறுதிக்குள் நாட்டில் மின்சாரத்தை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டத்தை 100 சதவீதமாக பூர்த்தி செய்ய எதிர்பார்த்துள்ளோம்.
கடந்த காலத்தில் எவ்வளவு மின்வெட்டுகள் இடம்பெற்றன என்பது எமக்கு நினைவிருக்கிறது. ஆனால் அதைப் பற்றி அவர்களுக்கு எவ்வித உணர்வும் இருப்பதாகத் தெரியவில்லை.
எதிர்காலத்தின் வேகமான வளர்ச்சிக்கு எரிசக்தி அவசியம் என்பதனாலேயே தொழில்நுட்பத்தின் ஊடாக மின்சாரம் தொடர்பான அனைத்து பிரச்சினைகள் தொடர்பிலும் பாவனையாளர்களுக்கு விழிப்பூட்டுவதற்கான வசதிகளை ஏற்படுத்த தொடங்கினோம்.
மனிதனின் அடிப்படை தேவைகளின் பட்டியலில் முதல் நான்கு இடங்களுக்குள் மின்சாரமும் ஒன்றாக தீர்மானிக்கப்பட்டுள்ள சந்தரப்பத்தில் எமது டலஸ் அழகப்பெரும அமைச்சர் மின்சார வேகத்தில் பணியாற்றுவது எமக்கு பெரும் பலமாகும்.
´மஹிந்த சிந்தனை´ ஐ யதார்த்தமாக்கி ´சுபீட்சத்தின் நோக்கு´ திட்டத்தின் ஊடாக சேவையாற்றும் ஒரு நாட்டை உருவாக்குவதே எமது ஒரே நோக்கமாகும்´ என பிரதமர் குறிப்பிட்டார்.
குறித்த நிகழ்வில் மின்சக்தித்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும, சூரிய சக்தி காற்று மற்றும் நீர் உற்பத்தி இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க, இராஜாங்க அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, நிமல் லன்சா, மின்சக்தித்துறை அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா, இலங்கை மின்சார சபையின் தலைவர் பொறியியலாளர் விஜித ஹேரத், லக்தனவி நிறுவனத்தின் தலைவர் பொறியியலாளர் யூ.டீ.ஜயவர்தன உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.