சஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டமைப்பில் இணைந்து தேர்தலில் போட்டியிடவுள்ளோம். தற்போது யானையா, அன்னமா அல்லது வேறு சின்னமா என்ற பிரச்சனை தான் உள்ளது என முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் தெரிவித்தார்.
வவுனியா, குருமன்காடு கலைமகள் விளையாட்டு மைதானம் அருகில் நேற்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தை திறந்து வைத்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சஜித் பிரேமதாசவை பொதுவேட்பாளராக நிறுத்திய போது எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி அந்த கூட்டமைப்போடு இணைந்து அவரது வெற்றிக்காக இரவு பகலாக உழைத்தோம்.
குறிப்பாக தமிழ் பேசும் மக்களின் பூரண ஒத்துழைப்பை பெற்றுக் கொடுப்பதிலே பல கட்சிகளோடு சேர்ந்து எமது கட்சியும் முக்கிய பாத்திரத்தை வகித்தது. அந்தவகையில் தற்போது ஒரு பாராளுமன்ற தேர்தலை நாங்கள் எதிர்பார்த்து இருக்கின்றோம்.
இந்த பாராளுமன்ற தேர்தலில் சிறுபான்மை சமூகம் ஒன்றுபட்டு, தமக்காக பேசக்கூடிய தமக்கான பிரதிநிதிகளை தமக்காக வேலை செய்பவர்களை பெற்றுக் கொள்வதற்கான நல்ல தருணம் வந்திருக்கின்றது.
இந்த தேர்தலில் எமது கட்சி வன்னி மாவட்டத்தில் சஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டமைப்பில் போட்டியிடுவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம். அந்த கூட்டமைப்பின் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் தாங்கள் எங்களது இறுதி அறிவிப்பை வெளியிடுவோம்.
பல கட்சிகள் தற்போது ஒன்று சேர்ந்துள்ளன. தற்போது சின்னப் பிரச்சனை மட்டுமே உள்ளது. யானையா அல்லது அன்னமா அல்லது வேறு சின்னமா என்பது தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெறுகிறது.
வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலை ஒற்றுமையாக நாடு பூராகவும் முகம் கொடுப்பதற்கு மனோ கணேசன் தலைமையிலான கட்சியும், இராதாகிருஸ்ணன் தலைமையிலான கட்சியும், திகாம்பரம் தலைமையிலான கட்சியும், ரவூவ் ஹக்கீம் தலைமையிலான கட்சியும், எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியும், ஐக்கிய தேசிய கட்சியும், பல சிவில் அமைப்புக்களும், பொது அமைப்புக்களும் ஒண்றிணைந்து பாரிய கூட்டமைப்பாக போட்டியிடவுள்ளோம்.
இந்த நாட்டில் பெரும்பான்மை, சிறுபான்மை என்ற பேதமில்லாமல் எல்லோரும் சமத்துவமாக, சகோதரத்துவமாக வாழக் கூடிய ஒரு கூட்டமைப்பை உருவாக்கி அந்தக் கொள்கையோடு நாடு முழுக்க போட்டியிட இருக்கின்றோம்.
வன்னி, மட்டக்களப்பு, அனுராதபுரம், திருகோணமலை போன்ற மாவட்டங்களில் எமது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களைனப் பெற்றுள்ளது. அந்த மாவட்டங்களில் கடந்த காலங்களைப் போல் போட்டியிடவும் சில மாவட்டங்களில் தனித்தும் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளோம்.
தனித்து போட்டியிடுவது ஊடாக கூட்டமைப்பின் விருப்பத்தோடு வெற்றி பெறுவதற்கான வியூகத்தை அமைத்திருக்கின்றோம். இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை சிறுபான்மை சமூகம் இந்த நாட்டில் ஏனைய சமூகத்தோடு சேர்ந்து வாழுகின்ற ஒரு நல்ல நிலையை உருவாக்கின்ற தேர்தலாக பார்க்கின்றோம்.
இனவாத, மதவாத சக்திகளை தோற்கடிப்பாதற்காக எமது கூட்டமைப்பு ஒன்றுபட்டு செயற்படும். கடந்த தேர்தலில் 5 பாராளுமன்ற உறுப்பினர்கனைளப் பெற்றது போல் இம்முறை 7 இற்கும் 10 இற்கும் இடைப்பட்ட இடங்களில் போட்டியிடவுள்ளோம்.
இதனால் வரப்போகும் அரசாங்கத்தை தீர்மானிக்கும் சக்தியாக நாங்கள் விளங்குவோம் எனத் தெரிவித்தார்.