Breaking
Sat. Apr 20th, 2024

சில விடயங்களை ஆறப் போடாமல் எந்தளவு விரைவாக நிறைவேற்றிக்கொள்ள முடியுமோ அந்தளவு விரைவாக நிறைவேற்றிக் கொள்வது சிறப்பானதாகும்.ஆறிய கஞ்சு பழங் கஞ்சு என்பார்கள்.அதிலும் குறிப்பாக தற்போது இலங்கை அரசியலமைப்பின் உத்தேச வரைவு தொடர்பான ஆலோனைகளைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் தேசிய அரசினால் ஸ்தாபிக்க குழுக்களின் நடவடிக்கைகள் தீவிரமாக சென்று கொண்டிருக்கின்றன.இன்னும் சில நாட்களில் இக் குழுக்களின் பரிந்துரைகள் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது.

இதனை உத்தேச அரசியலமைப்பு தொடர்பான வரைவுகளில் மிக முக்கியமானதாக நோக்கலாம்.ஏன்? தற்போது திருத்தம் நடைபெறவுள்ள அரசியலமைப்புக்கான முதற் படியாக நோக்கினாலும் தவறில்லை.இதில் முஸ்லிம்கள் தங்களது  கருத்துக்களையும்,ஆலோசனைகளையும் இயன்றளவு உட்புகுத்தி நாடாளுமன்ற,மக்கள் ஆணையைக் கோரவுள்ள அரசியலமைப்பின் ஒரு ஒத்திகையாக அமைத்திருக்க வேண்டும்.இது மக்கள் கருத்துக்களை உள் வாங்கி அமைக்கப்பட்ட அறிக்கை என்ற விம்பம் தோற்றுவிக்கப்பட்டுள்ளதால் இதற்கு நாடாளுமன்றத்தினால் கனத்த மதிப்பளிக்க வேண்டிய நிர்ப்பந்தமும் உள்ளது.இது விடயத்தில் முஸ்லிம்கள் கரிசனையற்று காலம் கடத்திவிட்டு அவர் இவர் தலையில் பழியைப் போடுவது ஏற்கத்தகுந்த விடயமுமல்ல.

இக் குழுவின் பரிந்துரைகளில் முஸ்லிம் மக்கள் தங்களுக்குத் தேவையான விடயங்களை உள்ளடக்க முயற்சிப்பது முஸ்லிம்களின் தலையாய கடமையாகும்.முஸ்லிம் மக்கள் சார்பாக ஒரு சில குழுக்கள் தங்களது பரிந்துரைகளை முன் வைத்துள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும்.இருப்பினும் நல்ல பாம்பு படம் எடுப்பதும் தண்ணீர்ப் பாம்பு படம் எடுப்பதும் ஒன்றாகி விட முடியாது.

சில குழுக்கள் தங்களது ஆலோசனைகளை முன் வைத்துள்ள போதும் அவைகள் முஸ்லிம் சமூகத்திடையே பெரிய பேசு பொருளாக மாறாமை எனது மேலுள்ள கருத்தை துல்லியமாக நிறுவுகிறது.முஸ்லிம் சமூகத்திடையே அரசியல் ரீதியான பெரும் பான்மை ஆதரவைத் தக்க வைத்துள்ள மு.கா,அ.இ.ம.கா ஆகியனவும் இஸ்லாமிய ரீதியாக இலங்கை முஸ்லிம்களின் பெரும் பான்மையானோரின் ஆதரவைப் பெற்ற அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவும்  இவ் விடயத்தில் அதிகம் கரிசனை காட்டிருந்தால் அது அதிக பெறுமானத்தை வழங்கிருக்கும்.

ஆரம்பத்தில் உத்தேச அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் மக்கள் கருத்தறியும் செயற்றிட்டத்தின் இறுதி அறிக்கை ஏப்ரல் மாத இறுதியளவில் சமர்ப்பிக்கப்படுமென அக் குழுவின் தலைவர் சட்டத்தரணி லால் விஜயநாயக்க தெரிவித்திருந்தார்.தற்போது அது காலதாமதப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.இது விடயத்தில் முஸ்லிம் கட்சிகள் என்ன செய்து கொண்டிருகின்றன? என்ற வினாவிற்கான விடையைத் தேடினால் முஸ்லிம் கட்சிகளின் பொடு போக்குகளை அறிந்துகொள்ள முடியும்.அண்மையில் மட்டக்களப்பில் மு.கா ஒரு சில விமர்சனங்களுக்கு மத்தியில் ஒரு கலந்துரையாடலை அமைத்திருந்தது.

இது தொடர்பில் அ.இ.ம.காவும் ஒரு வரைபொன்றை தயார் செய்து கொண்டிருப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் பரவி இருந்தன.இவ் இரண்டு செய்திகளும் மக்களுக்கு “இன்னும் இவ்விரு கட்சிகளும் இவ் யாப்பு மாற்ற விடயத்தில் ஒரு தீர்க்கமான முடிவிற்கு வரவில்லை” என்ற விடயத்தைக் கூறுகிறது.இவ்விரு அணியினரும் தங்களது வரைபுகளை முழுமைப்படுத்த சில மாதங்கள் தேவைப்படும்.இன்னும் அரசியலமைப்பு வரைவுகளை முழுமைப்படுத்தாதவர்களால்,எவ்வாறு இக் குழுக்களின் பரிந்துரைகளில் தங்களது கருத்துக்களை உள் வாங்கச் செய்திருக்க இயலும்? இது மாத்திரமல்ல தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களிடையே குழுவொன்று அமைக்கப்பட்டு அரசியலமைப்பு சீர்திருத்த விடயம் கையாளப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இவர்கள் முழுமை பெறாத அரசியலமைப்பு வரைபை வைத்துக்கொண்டு எதனைச் செய்யப் போகிறார்கள்.முழுமை பெறாத அரசியலமைப்பு என்பதன் அர்த்தம் இன்னும் இவர்கள் இது தொடர்பில் ஒரு தெளிவான முடிவிற்கு வரவில்லை என்பதாகும்.தெளிவான சிந்தனைகளும் நிறுவல்களும் இல்லாத பேச்சுக்களின் கனதிகள் எப்போதும் குறைவுதான்.உழுகிற நாளில் ஊருக்குப் போய்,அறுக்குற நாளில் அரிவாள் கொண்டு வந்தால் என்ன தான் இலாபம் அடைய முடியும்?

இவ்விரு கட்சிகளும் அரசியலமைப்பு மாற்றம் தொடர்பில் தங்களிடையே பல சுற்று கலந்துரையாடல்களை அமைத்துள்ளதாக கூறுகின்ற போதும் அதனை வெளிக்கிழம்பாது இரகசியமாக பேணியுள்ளமையே இவ்விரு கட்சிகளுக்குமிடையேயான மிகப் பெரிய ஒற்றுமையாகும்.இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியலமைப்பு தொடர்பான சில பரிந்துரைகள் பேரின வாதிகளிடையே மிகப் பெரிய பேசு பொருளாக உருவெடுத்துள்ளது.இது தொடர்பில் வட மாகாண சபை நிறைவேற்றிய பிரேரணை நீதி மன்றம் செல்லுமளவு நிலமை மோசமடைந்துள்ளது.இது போன்ற செய்திகள் முஸ்லிம் கட்சிகள் கூறும் இரகசியக் கலந்துரையாடலுக்கு வலுச் சேர்க்கின்றது.

இவ் அரசியலமைப்புத் தொடர்பான விடயங்கள் காதோடு காது வைத்தாப் போல் முடிக்குமொரு விடயமல்ல.எப்போதாவது ஒரு நாள் நாடாளுமன்ற,மக்கள் சந்தைக்கு வந்தேயாக வேண்டும்.மேலும்,இவ்வாறான கலந்துரையாடல்களின் முடிவுகள் தான் சர்ச்சையை ஏற்படுத்தவல்லதே தவிர இது தொடர்பில் முஸ்லிம் கட்சிகள் கலந்துரையாடல்களில் ஈடுபடுகிறது என்ற செய்தி எந்த பாதாகமான விளைவுகளையும் ஏற்படுத்த வாய்ப்பில்லை.இது பேரின வாதிகளையும்,தமிழ்த் தலைமைகளையும் சற்று அவதானமாக இருக்கக் கூறும் செய்தியாக அமையும் என்பதும் சற்று ஆளச் சிந்திக்கவேண்டிய ஒரு விடயமாகும்.இன்று தெருக் கடையில் தேநீர் அருந்துவதையும் சாதரணமாக வீதியில் செல்வதையும் புகைப்படம் எடுத்து பிரபலம் தேட முயற்சிக்கும் முஸ்லிம் அரசியல் வாதிகள் இவ்வாறான விடயங்களை மறைத்துச் சென்றதாக கூறுவதை ஏற்க சற்று மனம் தயங்குகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகள் வெளிப்படையாக இருப்பதால் தற்போது பல்வேறு விமர்சனங்களைத் தோற்றுவித்துள்ளது.இதில் தோன்றும் விமர்சனங்களுக்கான தெளிவுகளை ஊட்டி தங்களது காரியங்களைச் சாதிக்கும் முகமாகாத் தான் தமிழ்த் தலைமைகள் இவ்வாறான கைங்கரியத்தில் ஈடுபடுகின்றதோ தெரியவில்லை.தமிழ் தலைமைகள் பல விடயங்களை காதும் காதும் வைத்தாப் போல் முடித்துக் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகாரப் பரவலாக்கல் சம்பந்தமான விடயங்களில் தேசிய அரசினால் ஸ்தாபிக்கப்பட்ட குழுவிற்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக அக் குழு வெளிப்படையாக குறிப்பிட்டுள்ளது.இதற்குள் த.தே.கூவின் செயற்பாடுகளில் அவ்வளவு திருப்தி இல்லை என அதன் பங்காளிக் கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எப்பின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் த.தே.கூவின் மீது தொடர்ச்சியாக குற்றச் சாட்டுக்களை முன் வைத்து வருகிறார்.சுரேஷ் பிரேமசந்திரனின் கருத்து சரியா பிழையா என்ற வாதத்தை புறந்தள்ளி முஸ்லிம் தலைமைகளுடன் ஒப்பிடும் போது இது தொடர்பில் த.தே.கூவின் செயற்பாடுகள் மெச்சத்தக்கவை என்பதை எதுவித சிறு தயக்கமுமின்றிக் கூறலாம்.

அண்மையில் மிகவும் வெளிப்படையாக தமிழ்ப் பேரவை ஒரு அரசியலமைப்பு உத்தேச வரைபை வெளியிட்டிருந்தது.தற்போது அவ் அமைப்பு இந்திய,ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் ஐ.நாடுகள் சபையின் பிரதிநிதிகளிடம் தங்கள் வரைவுகளை கையளிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.இந்த தமிழ் பேரவையைப் பொறுத்த மட்டில் அரசியல் பின்புலம் கொண்டியங்கினாலும் சிவில் அமைப்புக்களால் இயக்கப்படுவதான தோற்றப்பாடே உள்ளது.முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் சார்பாக புறக்கணிக்கத்தக்களவான பரிந்துரைகள் முன் வைக்கப்பட்டாலும் அவைகள் குறித்த அமைப்பினரிடம் சமர்பித்ததோடு சாதனை புரிந்ததாக நினைத்துக்கொண்டிருக்கின்றனர்.

அதற்கு அடுத்த எட்டை அவ் அமைப்புக்கள் கூட சிந்தித்ததாக அறிய முடியவில்லை.இவ்வாறான சமூகத்தினுள் உதித்த முஸ்லிம் அரசியல் வாதிகள் இது விடயத்தில் பொடு போக்காக இருப்பதை குற்றம் சுமத்தவும் முடியாது.தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ள இலங்கை அரசுக்கு எத்தனையோ அழுத்தங்கள் வழங்கப்படுகின்ற போதும் தமிழ் தலைமைகளும்,சிவில் அமைப்புக்களும் சிறிதேனும் அசமந்தப் போக்கை கடைப்பிடிக்காது தங்களது காரியத்தில் கண்ணாகவே இருக்கின்றார்கள்.இது விடயத்தில் தாங்கள் தான் இலங்கை முஸ்லிம்களின்  தலைமையென மார் தட்டுவோரின் செயற்பாடுகளை தமிழ் தலைமைகளின் செயற்பாடுகளுடன் ஒப்பு நோக்கும் போது மிகுந்த மன வேதனையளிகின்றது.இவ் அரசியலமைப்பு மாற்றம் தொடர்பில் முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பின் கவனத்தை இலங்கை நாட்டின் மீது திருப்பியுள்ள அமைச்சர் றிஷாத்தை வாழ்த்தாமல் இருக்க முடியாது.

இது தொடர்பில் அ.இ.ம.காவும் ஒரு வரைவை வரைந்துள்ளதாகவும் இதன் பின்னர் புத்தி ஜீவிகள்,மக்கள் கருத்துக்களை உள் வாங்குவதோடு பல கட்சிகளுடன் கலந்துரையாடி பெற்றுக்கொள்ளும் இறுதி வரைவை அமைச்சர் றிஷாத்திடம் கையளிக்கபோவதாக அக் கட்சியின் அரசியல் விவகார,சட்டப்பணிப்பாளர் சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் தெரிவித்துள்ளார்.மு.காவும் தற்போதே மக்கள் கருத்தறியும் செயற்பாட்டை ஆரம்பித்துள்ளது.இதனை இன்னுமொரு விதத்தில் கூறப்போனால் இப்போதே இது தொடர்பில் இவர்கள் கரிசனை கொள்கிறார்கள் எனக் கூறலாம்.இவர்கள் கூறியுள்ள பிரகாரம் பார்த்தல் இதற்கு பல மாதங்கள் தேவை என்பதால் புதிய அரசியலமைப்பு  இறுதி வாக்கெடுப்புக்கு வருவதற்கு முன்னராவது முடிப்பார்களா என்றே நினைக்கத் தோன்றுகிறது.

சுடுகுது மடியைப் பிடி எனும் பிரகாரம் செய்தால் மாத்திரமே இவர்கள் கூறிய பிரகாரம் அவர்களது உத்தேச அரசியலமைப்பு வரைபை உரிய நேரத்தில் முழுமைப்படுத்த முடியும்.இவ் விதத்தில் செய்யப்படும் வரைவின் தரம் கேள்விக்குட்படுத்தக் கூடியதாக இருக்கும்.தேசிய அரசினால் மக்கள் கருத்தறியும் நோக்கில் ஸ்தாபிக்கப் குழுவானது முழு இலங்கையின் ஒவ்வொரு மாவட்டங்களாக சென்று இன மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் பல்வேறு குழுக்கள்,கட்சிகளின் கருத்துக்களை உள் வாங்கிய அறிக்கை சமர்பிக்கும் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது.முஸ்லிம் கட்சிகள் இப்போதே ஆரம்பிப்பது இவர்களது பொடு போக்குத் தனத்தை துல்லியமாக்குகின்றது.

இது தொடர்பில் மட்டக்களப்பில் இடம்பெற்ற மு.காவின் கலந்துரையாடலில் கூட பல்வேறு விமர்சனங்கள் தோற்றுவிக்கப்பட்டிருந்தன.இதில் த.தே.கூவின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரனின் வருகை பலத்த விமர்சனங்களை தோற்றுவித்திருந்தது.இதனை வைத்து மு.கா தமிழ்த் தலைமைகளிடமும் புலம் பெயர் அமைப்புக்களிடமும்  சோரம் போயுள்ளதான கதைகள் எழுந்து அதன் பாட்டில் பயணித்துக்கொண்டிருக்கின்றன.மு.கா சார்புத் தகவலின் படி இந் நிகழ்விற்கு சுமந்திரன் ஓர் அதிதியாக அழைக்கப்பட்டு அதிதி உரையாற்றியதாக கூறுகின்றனர்.இதனை நாம் பல கோணங்களில் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.இவ் அரசியலமைப்பு மாற்றம் தொடர்பில் இன வேறுபாட்டிற்கு அப்பால் கருத்துக்களை வழங்கும் ஒரு வளவாளர் என்ற அடிப்படையில் நோக்கினால் இந் நிகழ்விற்கு சுமந்திரன் மிகவும் பொருத்தமானவர் என்பதை மறுக்க முடியாது.தேர்தல் முறை மாற்றத்தைப் பொறுத்தமட்டில் அது முஸ்லிம்களுக்கே அதிகம் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.இதில் பேரினக் கட்சிகளிடம் உதவியை எதிர்பார்க்க முடியாது.முஸ்லிம் கட்சிகளின் உதவி சிறிது அவசியப்படும் த.தே.கூவிடம் இது விடயத்தில் மு.க உதவியை எதிர்பார்த்து இவ்வாறான காரியங்களைச் செய்கின்றதோ தெரியவில்லை.இந் நிகழ்வு வெளிப்படையான ஒரு நிகழ்வாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் சுமந்திரனின் கருத்துத் திணிப்பு அங்கே அரங்கேறிருக்காது என்பதை விளங்கிக்கொள்ளலாம்.கருத்துத் திணிப்பே எமக்குப் பிரச்சினையை ஏற்படுத்தவல்லது.

இந் நிகழ்வு அரசியலமைப்பில் முஸ்லிம்களின் பிரச்சனைகளை கையாழ்தல் தொடர்பானதான விடயங்களை மையப்படுத்தியதால் தமிழ் மக்களின் விடயங்களில் இடைவெட்டும் விவகாரங்களை அங்கு சமூகம் தந்திருந்த ஏனைய வளவாளர்கள் வெளிப்படுத்த இயலாத ஒரு நிர்ப்பந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பார்கள்.குறிப்பாக வட கிழக்கு இணைப்பு,அதிகாரப்பரவலாக்கம் போன்ற விடயங்களில் இன ரீதியான விடயங்களை மையப்படுத்தியும் ஆய்வுக்குட்படுத்த வேண்டிய தேவை உள்ளமை குறிப்பிடத்தக்கது.இவ்வாறான இடை வெட்டும் கருத்துக்களை தவிர்க்கும் பொருட்டே மு.கா இவ்வாறானதொரு கைங்கரியத்தை மேற்கொண்டதோ தெரியவில்லை.இவ்வாறன கோணங்களில் சிந்திக்கும் போது சுமந்திரனின் வருகை பிழையானது என்ற பொருளை வழங்குகிறது.

தேர்தல் முறை மாற்றம் போன்ற ஒரு குறித்த தலைப்பில் இந் நிகழ்வை அமைத்திருந்தாலும் அதில் பிழை காண வாய்ப்பில்லை.பொதுவாக ஒரு விடயத்தை விவாதத்திற்கு உட்படுத்தி எடுக்கும் தீர்மானங்கள் மிகவும் தரம் வாய்ந்ததாக இருக்கும்.இந் நிகழ்வில் வளவாளர்களை தங்களது கருத்துக்களை கூறினாலும் தர்க்க ரீதியான விடயங்கள் இடம்பெறாமை இதிலுள்ள குறைபாடாகும்.

அந் நிகழ்விற்கு சமூகமளித்தோரின் தொலைபேசிகளை வெளியில் வைத்துவிட்டு வாருங்கள் என மு.காவின் தலைவர் கூறியதான குற்றச் சாட்டொன்றுமுள்ளது.இது தொடர்பில் மு.காவின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் கூட மு.காவின் தலைவர் பிற்போக்குவாத தலைவர் எனவும்  கட்சிக்குள் உட் கட்சி ஜனநாயகமுமில்லை எனவும் அறிக்கை ஒன்றை பறக்க விட்டிருந்தார்.இந் நிகழ்விற்கு மு.காவிற்கு வெளியிலும் பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் மற்றும் கொழும்பு பல்கலைக்கழக அரசியல் துறை விரிவுரையாளர் ஹக்கீம்  உட்பட பல வளவாளர்கள் கலந்து கொண்டதோடு ஊடகவியலாளர்கள் கூட அழைக்கப்பட்டிருந்தனர்.எனவே,இங்கு கலந்துரையாடப்படும் கருத்துக்கள் வெளியில் போகுமென்ற சிந்தனையில் இக் கருத்தை அமைச்சர் ஹக்கீம் கூறியுள்ளதாக நோக்க முடியாது.தொலைபேசிகளின் தொந்தரவுகைத் தவிர்க்கும் முகமாகவே இக் கருத்தைக் கூறியிருக்கலாம் என்பதை ஊகிக்க முடிகிறது.இந் நிகழ்வை நடாத்த எத்தனையோ இடங்களுள்ள போது மட்டக்களப்பை மு.கா தேர்ந்தெடுத்ததிலும் சில விடயங்கள் உள்ளன.

காத்தான்குடியை தளமாக கொண்டியங்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அரசியலமைப்பு மற்ற விடயத்தில் பல்வேறு கலந்துரையாடல்களை அமைத்து வருகிறது. பாராளுமன்றத்தை அரசியலமைப்பு பேரவையாக மாற்றுவது தொடர்பான விவாதத்தில் 24-02-2016ம் திகதி உரையாற்றிய அமைச்சர் ஹக்கீம் காத்தான்குடியில் அரசியயலமைப்பு மாற்றம் தொடர்பில் சிவில் அமைப்புக்கள் நிறைவேற்றிய தீர்மானங்களை வரவேற்பதாக கூறி இருந்தார்.அரசியலமைப்பு மாற்ற விவகாரத்தில் காத்தான்குடி மக்கள் சற்று விளிப்படைந்துள்ளதால் அங்கு மு.கா தங்கள் பங்குக்கும் ஏதாவது செய்தாக வேண்டிய நிர்ப்பந்தமுள்ளது.

மு.கா மூன்று கட்டங்களில் இவ் அரசியலமைப்பு விடயங்களை கையாள முடிவு செய்துள்ளதாக அறிய முடிகிறது.இதனடிப்படையில் முதலாம் கட்ட நடவடிக்கையாக ஒரு வரைவை மேற்கொண்டுள்ளதாகவும்,இரண்டாம் கட்ட நடவடிக்கையாகவே மட்டக்களப்பில் இடம்பெற்றது போன்று சில செயலமர்வுகளை ஏற்பாடு செய்யவுள்ளதாகவும்,மூன்றாம் கட்ட நடவடிக்கையாக உயர்பீட உறுப்பினர்களுக்குள் கலந்துரையாடல் அமைக்கவுள்ளதாகவும் அறிய முடிகிறது.மு.கா இவ்வாறு தயாரிக்கப்படும் இறுதி வரைவின் கருப்பொருளை  மாத்திரம் (concept) பகிரங்கமாக வெளியிடுவதோடு அதன் உட்பிரிவுகளை வெளியிடாமல் இவ் விடயத்தை கையாளப்போவதாக மு.கா தரப்பு தகவல்கள் கூறுகின்றன.

மு.காவின் இரண்டாம் கட்ட நடவடிக்கையில் கடந்த மூன்றாம் திகதி இடம்பெற்ற தேர்தல் சீர் திருத்தம் பற்றிய செயலமர்வையும் நோக்கலாம்.இச் செயலமர்வில் அமைச்சர் மனோ கணேசன்,நோர்வேயைச் சேர்ந்த நிபுணர் கரே வொலன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.தேர்தல் முறை மாற்றம் முஸ்லிம் முஸ்லிம்களையும்,மலையக மக்களையுமே அதிகம் பாதிக்க வாய்ப்புள்ளதென்பதால் இவ் விடயத்தில் மு.கா அமைச்சர் மனோ கணேசனையும் ஒன்றிணைத்துப் பயணிப்பது சாலச் சிறந்தது.அமைச்சர் மனோ கணேசனுக்கு தற்போதைய அரசில் மிகுந்த செல்வாக்குள்ளமை குறிப்பிடத்தக்கது.இவற்றோடு நின்று விடாமல் மு.கா சாமான்ய மக்களையும் இது தொடர்பில் விழிப்புணர்வடையச் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.இன்று அரசியலமைப்பு மாற்றம் என்பது அரசியல் வாதிகளுடைய விடயமென பொது மக்கள் ஒதுங்கி ஓரமாக நின்று வேடிக்கையே பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இவ் அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான விடயங்களில் தற்போது அமைச்சர் பௌசி தலமையில் முஸ்லிம் அரசியல் வாதிகள் ஒன்றிணைந்துள்ளதான ஒரு விம்பம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.முதலாவது கலந்துரையாடலுக்கு அமைச்சர் ஹக்கீமும் றிஷாத்தும் கலந்து கொள்ளாமை அவர்கள் அதற்கு வழங்கும் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளலாம்.இருவரும் தங்களது பிரதிநிதிகளையே அனுப்பிருந்தனர்.இக் கூட்டின் முதலாவது அமர்வு இடம்பெற்ற நாளே மு.கா மட்டக்களப்பில் அரசியலமைப்பு தொடர்பான செயலமர்வை நடாத்திருந்தது.

இச் செயலமர்விற்கு மு.கா வழங்கும் தரத்தை இதிலிருந்து மட்டிட்டுக்கொள்ளலாம்.அமைச்சர் பௌசி இலங்கையில் உள்ள முஸ்லிம் அரசியல் வாதிகள் சிரேஷ்டமானவர் என்பதால் அவரைப் புறக்கணிக்காத பதிலை முஸ்லிம் கட்சிகள் வழங்கியுள்ளதாகவே மேலுள்ள செய்திகள் கூறி நிற்கின்றன.இதனை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா போன்ற அரசியலுக்கு அப்பால் மக்கள் செல்வாக்குப் பெற்ற அமைப்புக்கள் ஏற்பாடு செய்திருந்தால் இவ்வாறான புறக்கணிப்புக்களை முஸ்லிம் கட்சிகள் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பார்கள்.

இந்த விடயமானது அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் கீழ் அரசியல் வாதிகளும்,புத்தி ஜீவிகளும் ஒன்றிணைக்கப்பட்டு கையாளப்பட்டிருந்தால் மிகப் பொருத்தமானதாக அமைந்திருக்கும்.அரசியலுக்கும் இஸ்லாத்திற்குமிடையில்  தொடர்பில்லாமலுமில்லை.இது முழுமையாக அரசியல் சார்ந்த விடயமுமல்ல.இவ்வாறான சில வழி காட்டல்களில் இவ்வாறான தலைமைகள் அக்கறை காட்டமையே இஸ்லாத்திற்கும் அரசியலுக்குமிடையிலான தூரத்தையும் அதிகமாக்கிக் கொண்டு செல்கிறது.இது தொடர்பில் முஸ்லிம் சமூகம் சிறிதேனும் விழிப்புணர்வற்றே காணப்படுகிறது.

இலங்கைக்கு எதிராக ஐ.நா சபையின் அறிக்கை வெளிவரும் போது தங்களது இலங்கை நாட்டுப் பற்றை இக் குறித்த அமைப்பிலுள்ள மிக முக்கியமானவர்கள் வெளிநாடுகள் சென்று வெளிப்படுத்திருந்த வராலாறுகள் நாம் அறிந்ததே.அன்று அரசியல் விவாகரங்களில் தலையிட்டவகள் இன்று இவ்வாறான விடயங்களில் மௌனம் காப்பது தான் மர்மமாகவுள்ளது.பாகிஸ்தான்,இலங்கை அணிகளுக்குமிடையிலான கிரிக்கட் போட்டிகளின் போது முஸ்லிம் சமூகத்தை அறிவுறுத்த முடியுமானவர்கள் இதில் அக்கறை இன்றி இருப்பது ஏற்கத்தகுந்ததுமல்ல.

குறிப்பு: இக் கட்டுரை நேற்று செவ்வாய்க்கிழமை 10-05-2016ம் திகதி நவமணிப் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.இக் கட்டுரை தொடர்பில் ஏதேனும் விமர்சனங்கள் இருப்பின்  akmhqhaq@gmail.com எனும் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.

துறையூர் ஏ,கே மிஸ்பாஹுல் ஹக்

சம்மாந்துறை.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *