அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்னர் சர்ச்சைக்குரிய அந்த வணக்கஸ்தலம் தொடர்பான சுப்ரீம் கோர்ட் முன்னர் அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் பிரதிவாதிகள் வரிசையில் உள்ளது.
இதற்கிடையில், அயோத்தியில் சர்ச்சைக்குரிய இந்த இடத்தில் மீண்டும் மசூதி கட்டுவதை தவிர்க்கும் வகையிலும், இதனால் மேலும் பிரச்சனைகள் உருவாவதை தவிர்க்கும் வகையிலும் என்ன செய்யலாம்? என்பது தொடர்பாக சமீபத்தில் உத்தரப்பிரதேசம் மாநில ஷியா வக்ப் வாரியம் சுப்ரீம் கோர்ட்டில் கருத்து தெரிவித்திருந்தது.
சர்ச்சைக்குரிய இடத்தில்தான் மசூதி அமைய வேண்டும் என்ற கோரிக்கையை கைவிட்டு, அருகாமையில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதியில் புதிய மசூதி கட்டுவது தொடர்பாக பரிசீலிக்கப்பட வேண்டும் என்ற அந்த கருத்துக்கு அகில இந்திய மஜ்லிஸ்-இ-இட்டெஹாதுல் முஸ்லிமீன் இயக்கத் தலைவரும், ஐதராபாத் தொகுதி எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் அடுத்தடுத்து கருத்து வெளியிட்டுள்ள ஓவைசி, ‘ஒரு மவுலானா (இஸ்லாமிய மார்க்க அறிஞர்) சொல்கிறார் என்பதற்காக மசூதிகளை இழந்துவிட முடியாது. மசூதிக்கு அல்லாதான் எஜமானர்; மவுலானா அல்ல. ஷியா, சன்னி, பரேல்வி, சூஃபி, டியோபன்டி, சலாஃபி, போர்ஹி இப்படி முஸ்லிம்களில் எந்தப் பிரிவினர் வேண்டுமானாலும் மசூதிகளை நிர்வகித்து வரலாம்.
ஆனால், இவர்களில் யாரும் மசூதிகளின் உரிமையாளர்கள் அல்ல. இறுதிநாட்களின் அல்லாஹ் வழங்கும் தீர்ப்பின்மீது நம்பிக்கையும் பயமும் வைத்திருக்கும் மக்கள், தாங்கள் பாதுகாப்பாக தொழுகை நடத்துவதற்காக மசூதிகளை கட்டியுள்ளனர். இந்த மசூதிகளுக்கு அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உள்பட யாரும் உரிமை கொண்டாடவோ, தாரைவார்க்கவோ முடியாது’ என குறிப்பிட்டுள்ளார்.