பிரதான செய்திகள்

அம்பாறை முஸ்லிம் அரசியல்வாதிகளே! இறக்காமம் மீது இரக்கம் காட்டுங்கள்.

(ஏ.எச்.சித்தீக் காரியப்பர்)

அம்பாறை நகரை அண்டியவுடன். அங்கே அதிக எண்ணிக்கையிலான சனத் தொகையுடன் காணப்படும் முஸ்லிம் கிராமம் என்றால் அது இந்த இறக்காமம்தான். மக்கள் தொகை சுமார் 20,000. வாக்காளர் எண்ணிக்கை 100,36. ஆனால், இவர்கள் ஏதோ வகையில் பாவப்பட்ட ஜென்மங்கள் போல்தான் வாழ்கின்றனர்.

தமிழ் நாட்டில் வாழும் தலித் இன மக்கள் போன்றே இறக்காமம் முஸ்லிம்களும் ஒதுக்கப்பட்டுள்ளனர். ஆனால், தலித் மக்களுக்காக குரல் கொடுக்க தமிழ் நாட்டில் அரசியல் கட்சிகள் உள்ளன. இறக்காமம் மக்களுக்கு அந்த அதிர்ஷ்டமே இல்லை.

தேர்தல் காலத்தில் மட்டும் மாவிலை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு கல்யாண வீடு போன்று அரசியல் கட்சிகளால் கலகலப்பாக மாற்றப்படும் இந்த இறக்காமம் எல்லாம் முடிந்த பின்னரே இழவு விழுந்த வீட்டின் நிலைமைக்குப் போய்விடுகிறது.

உங்களது 100,36 வாக்குகளையும் எங்களுக்குத் தாருங்கள். உங்களுக்கு எல்லாம் செய்து தருவோம் எனக் கூறி, ஏமாற்றி அவர்களது வாக்குகளை கொள்ளையிட்டு வெற்றி பெற்ற பின்னர் எந்த அரசியல்வாதியும் எந்த அரசியல் கட்சியும் திரும்பிப் பார்க்காத இடமாக இன்று இறக்காமம் மாறியுள்ளது.

பொருளாதாரம், அபிவிருத்தி, கல்வி என அனைத்துத் துறைகளிலும் பின்னடைந்தே காணப்படும் இந்தப் பிரதேச மக்களின் வாழ்க்கை முழுக்க, முழுக்க வித்தியாசமானது. இளைஞர், யுவதிகளின் நிலைமைகள் ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடும் போது விசித்திரமானது.

சில அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள் இறக்காமம் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக மட்டும் இந்தப் பிரதேசத்துக்கு விஜயம் செய்து சில்லறையான சில வாக்குறுதிகளை வழங்குவதும் அதனை நம்பி இளைஞர், யுவதிகள் ஏமாறுவதும் இறக்காமத்தில் இன்று மாமூலான விடயம்.

இந்த நாட்டிலேயே பணியாற்றி தேசத்துக்கும் மக்களுக்கும் சிறந்த சேவைகளை ஆற்றக் கூடிய திறமைமிக்க இறக்காமத்தைச் சேர்ந்த பல நூறு இளைஞர்கள் இன்று மத்திய கிழக்கு நாடுகளில் தங்களது தகுதி, திறனுக்கு ஏற்ற தொழில்களின்றி வெறும் கூலிகளாக மன வேதனையுடன் பணி புரியும் பாவமும் பழியும் இந்த அரசியல்வாதிகளை நிச்சயம் என்றோ தண்டித்தே ஆகும்.

தேர்தல் காலத்தில் இங்கு வரும் அரசியல்வாதிகளை நம்பி தொழிலுக்கான அப்பிளிகேஷனைக் கொடுத்து விட்டு இன்று கிடைக்கும் நாளை கிடைக்கும் என்று நம்பி, எதுவுமே கிடையாத நிலையில், இவர்களை நம்பி தங்களது தொழில் முயற்சிகளையும் கைவிட்டு தொழில் பெறும் வயதையும் கடந்த நிலையில் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று மிக மோசமான நிலையில் பணியாற்றும் நிர்ப்பந்தத்துக்கு இறக்காம் இளைஞர்கள் இன்று தள்ளப்பட்டுள்ளனர் என்றால் அதற்கான தார்மிகப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டியவர்கள் யார்?

இவ்வாறான இளைஞர்கள் நாடு திரும்பி தனது சொந்த மண்ணில் தொழில் ஒன்றை சுயமாக செய்ய முயற்சித்தாலும் ஆயிரம் தடைகள்… உதாரணத்துக்கு ஒரு வர்த்தக நிலையத்தை அல்லது ஹோட்டலை ஆரம்பித்தால் கூட போட்ட பணத்தை இழக்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பொருட்கள் வாங்கவும் ஒருவரும் இல்லை.. தேநீர் அருந்தக் கூட எவரும் இல்லாத நிலைமை அங்கு காணப்படுகிறது. இதற்கான காரணம் அந்தப் பிரதேசம் நகர மயமாக்கல் இன்றி இன்னும் பழைய கால “கோப்பிக் கடை” நிலைமையில் உள்ளதுதான்.

இளைஞர்களின் சக்தியும் உழைப்பும் இங்கு கடலில் பெய்யும் மழை போன்று வீணடிக்கப்படுகின்றன. இவ்வாறான இளைஞர்கள் திருமணம் என்ற பந்தத்தில் புகுந்தாலும் பெண் வீட்டார் தயவிலேயே வாழும் நிலை பெரும்பாலும் காணப்படுகிறது.

மேலும் பாடசாலைகள் உட்படலான பலவற்றில் காணப்படும் பௌதீக வள பற்றாக்குறைகள், அரச சேவைகளைப் பெற்றுக் கொள்வதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அங்கு வாழக் கூடிய சாதாரண மக்களின் அன்றாட, அடிப்படை பிரச்சினைகள் என்பனவற்றுக்கும் தீர்வற்று அனைத்தும் இமயமலை போன்று உயர்ந்துதான் காணப்படுகின்றன.

அந்த மக்களுக்கான அடிப்படை வசதிகள் சரியாக செய்து கொடுக்கப்படவில்லை. அவ்வாறு ஏதாவது ஓர் அரசியல் கட்சி செய்ய முயற்சித்தால் மற்றொரு கட்சி தடுக்கும் அரசியல் சிந்து விளையாட்டு மேடையாக இந்த இறக்காமம் இன்று மாறியுள்ளது.

இறக்காமத்தில் இரவு நேரங்களில் பயணிக்கும் போது இருண்டு கிடக்கும் பல இடங்களை அவதானித்தால். நடுநிசி மயான அச்சமே தோன்றுகிறது. அப்போது நாய்கள் குரைத்தால் அங்கு பேய்களும் வாழ்கின்றனவோ என்ற அச்ச உணர்வு ஏற்படுகிறது. பகலில் சூரியனும் இரவில் நிலாவும் கொடுக்கும் வெளிச்சம் மட்டுமே இந்த மக்களுக்கு துணை நிற்கிறது.

இன்று இனவாத சக்திகளினது பிரதான தளமாக மாறியுள்ள இறக்காமம் நாளை முற்று முழுதான சிங்கள குடிப்பரம்பலைக் கொண்ட ஒரு நகரமாக மாற்றியமைக்கப்படக் கூடிய சாத்தியங்கள் நிறையவே தென்படுகின்றன.

எனவே, முஸ்லிம் அரசியல்வாதிகள் இறக்காமம் தொடர்பில் கரிசனையுடன் செயற்பட்டு அந்த மக்கள் வாழ்வை மேம்மைப்படுத்தி அவர்களின் மண்ணையும் பாதுகாப்பதற்கு உடனடியாக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

இறக்காமம் என்ற மண்ணுக்கு கோடி, கோடியாக எவரும் கொட்டத் தேவையில்லை. இலட்சம், இலட்சமாக ஒதுக்கினாலும் போதும் அந்த மக்களின் அபிலாஷைகளை நிவர்த்தி செய்து விடலாம்.

Related posts

வவுனியா பாரதி முன் மாதிரித்தோட்டம் பயனாளிகளிடம் கையளிக்கப்படவுள்ளது.

wpengine

தேசிய கல்வியற் கல்லூரிகளின் ஆசிரியர் நியமனம்

wpengine

தாஜுதீன் படுகொலை : என்னை தாக்க முற்பட்டவர்களை விசாரணை நடத்துக

wpengine