பிரதான செய்திகள்

அம்பாறை முஸ்லிம்கள் கடமைக்கு செல்லவில்லை! தொழுகை நடாத்த ஏற்பாடு

அம்பாறை நகரில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து அங்கு அரச திணைக்களங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுகின்ற முஸ்லிம் ஊழியர்களில் இரண்டாவது நாளாகவும் கடமைக்கு சமூகமளிக்கவில்லை.

கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு அம்பாறை நகரில் ஜூம்ஆப் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் என்பன பெரும்பான்மையின இளைஞர்களினால்
தாக்கப்பட்டு, வாகனங்களும் எரியூட்டப்பட்டிருந்தன.

இதனைத் தொடர்ந்து அம்பாறை நகரில் ஏற்பட்ட பதற்றத்தினால் அங்கு தொழில் நிமித்தம் தங்கியிருந்த முஸ்லிம்கள் வெளியேறியிருந்தனர்.
அதேவேளை அம்பாறை நகரம் உள்ளிட்ட சிங்கள பிரதேசங்களில் அமைந்துள்ள மாவட்ட கச்சேரி, பிரதேச செயலகங்கள், உள்ளூராட்சி மன்றங்கள், கல்வி மற்றும் சுகாதார திணைக்களங்களிலும் தனியார் நிறுவனங்களிலும் பணியாற்றுகின்ற அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களை சேர்ந்த முஸ்லிம் ஊழியர்களில் பெரும்பாலானோர் அச்சம் காரணமாக செவ்வாய்க்கிழமை கடமைக்கு சமூகமளிக்கவில்லை.

இன்று பதற்றம் தணிந்து சுமூக நிலை ஏற்பட்டுள்ள போதிலும் அவர்கள் நேற்று இரண்டாவது நாளாகவும் கடமைக்கு சமூகமளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை சம்பவ இடத்திற்கு சென்றிருந்த பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸை அங்கிருந்து வெளியேறிச் செல்லுமாறு பெரும்பான்மையின இளைஞர்கள் திரண்டு வந்த காணொளியை பார்க்கின்றபோது அங்கு தமக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது? என முஸ்லிம் ஊழியர்கள் அங்கலாய்க்கின்றனர்.

இதேவேளை சேதப்படுத்தப்பட்ட பள்ளிவாசல் மற்றும் ஹோட்டல் அமைந்துள்ள வீதி மூடப்பட்டு, பொது மக்களின் போக்குவரத்துகள் தடை செய்யப்பட்டுள்ளதுடன் அப்பகுதியின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் அரசாங்கம் உறுதியளித்தமைக்கு அமைவாக மாவட்ட அரசாங்க அதிபரின் நேரடிக் கண்காணிப்பில் குறித்த பள்ளிவாசலை துரிதமாக புனரமைப்பு செய்து நாளை வெள்ளிக்கிழமை ஜூம்ஆத் தொழுகையையும் அதனைத் தொடர்ந்து ஐவேளைத் தொழுகைகளையும் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்படுகிறது.

திங்கட்கிழமை நள்ளிரவு தாக்குதலின் பின்னர் குறித்த பள்ளிவாசலில் தொழுகை நடைபெறவில்லை என்பதும் அங்கு பணியாற்றுவோரும் பள்ளி அறைகளில் தங்கியிருந்தோரும் வெளியேறியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

15வயது பௌத்த பிக்கு பாலியல் பலாத்காரம்! ஒருவர் கைது

wpengine

25 ஆயிரம் தொழில் வாய்ப்பு! மன்னாரில் தொழில் பயிற்சி

wpengine

வீடுகள் வழங்குவதில் அநீதி இழைக்கப்படுகிறதா? வாருங்கள் கே .கே. மஸ்தான்

wpengine