Breaking
Thu. Apr 25th, 2024

சுஐப் எம்.காசிம் –

காரணம் அறிந்து காரியம் செய்யின் கை கூடும். எவ்வளவு காலத்துக்கு இது கை கூடும்? எப்போது இது கை நழுவும்? இந்த வரையறைகள், விதிமுறைகள் மீறப்பட்டுள்ள காலமிது.

ஜே. ஆர் அறிமுகப்படுத்திய அரசியலமைப்பும் இவ்வாறு 19 தடவைகள் திருத்தப்பட்டதே! காரணம் அறிந்துதானா? அல்லது காலத் தேவைக்கு ஏற்பவா? இல்லை யாரேனும் தேவைக்காகவா? இது போதாதென்று இருபதாவது திருத்தமும் வரப்போகிறதே!

19 ஆவது திருத்தம் பற்றிப் பேசப்பட்டளவுக்கு நம் நாட்டில் எதுவும் பேசப்படவில்லை. அந்தளவு அரசியலில் தாக்கம் செலுத்திய திருத்தமிது. 215 எம்.பிக்களின் ஆதரவுடன், 2015 ஆகஸ்டில் முன்வைக்கப்பட்ட இத்திருத்தம், இப்போது பலருக்கும் வேண்டாவெறுப்பாயிற்று. ஒன்றுக்கொன்று புரிதலில்லாது, ஒன்றுடனொன்று தொடர்பில்லாத “19” நாட்டின் சட்டம், நிர்வாகத்தை எப்படிக் குழப்புகிறது?

முப்படைகளின் தளபதியாக ஜனாதிபதி இருக்கலாம். ஆனால், எப்படைகளுக்கும் தளபதிகளை நியமிக்க முடியாது, மட்டுமல்ல அத்தளபதிகளை பதவி நீக்கவும் இயலாது. ஏன், இப்படைகளுக்குப் பொறுப்பாகவுள்ள பாதுகாப்பு அமைச்சையும் இவரால் வகிக்க முடியாது. பிரதமரை நியமிக்கலாம். ஆனால், நீக்க முடியாது. இன்னும் அமைச்சர்களை நியமிப்பது, நீக்குவது இவையும் இவரால் இயலாது. மேலும், நீதிமன்றத்தின் விசாரணைக்கும் ஜனாதிபதியை உட்படுத்த முடியும்.

நிர்வாகம், சட்டத்துறைகளில் ஜனாதிபதியின் அதிகாரங்கள், தலையீடுகளை இந்த “19” தவிர்த்துள்ளமை இதில் தெரிகிறது. ஆனாலும், முப்படைகளின் தளபதியான ஜனாதிபதிக்கு ஒரு தளபதியையும் நியமிக்க முடியாமல் முட்டுக்கட்டையும் போடப்பட்டுள்ளதே. இது குழப்பமில்லையா? என்கின்றனர் விமர்சகர்கள்.

அரசியலின் முக்கிய மூன்று துறைகளான நீதி, நிர்வாகம், சட்டத்துறைகளில் ஜனாதிபதியை தூரப்படுத்திய இந்த “19” பாராளுமன்றத்துக்கு எந்த அதிகாரத்தை வழங்கியுள்ளது? அதிலும் குழப்பம்தான்! அரசியலமைப்பு சபையிலுள்ள பத்துப்பேரும் அனைத்தையும் தீர்மானித்தால் தேர்தல் எதற்கு? பாராளுமன்றம் எதற்கு? சட்டத்துறைக்கு (பாராளுமன்றம்) இல்லாத அதிகாரம் இப்பத்துப் பேருக்குமா?. இல்லை, இதிலுள்ள ஏழு பேர் பாராளுமன்றப் பிரதிநிதிகள் என்பதால், மக்கள் ஆணை மதிக்கப்படுவதாகவே கருதப்படுகிறது.

52 நாள் அரசில்தான், 19 இன் சுயரூபங்கள் பல கோணங்களில் விஸ்வரூபமாகின. பாராளுமன்றம் இயற்றும் சட்டம், வழக்காறுகள், மரபுகள்தான் தீர்ப்புக்களுக்கு வழிகோல வேண்டுமென்று கோரப்பட்ட இந்த 52 நாட்களில், இவை எவற்றிலும் தீர்வுகள் இருக்கவில்லை. ஆனால், பெரும்பான்மை உள்ள ஒரு அரசாங்கத்தை பதவி விலக்கி, புதிய பிரதமருக்கு பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க அவசாசம் வழங்கப்பட்டமை போன்ற பல, இந்த 19 இல் பிரச்சினைகளாகவே உள்ளன.

இதற்காகத்தான் இருபது வருகிறது. குறைக்கப்பட்டது போன்று ஜனாதிபதி, பாராளுமன்றத்தின் ஆயுட்காலங்கள் ஐந்துதான். மீண்டும் இதை நீடிக்க சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்வது சிரமம் என்பதால், அப்படியே இது விடப்பட்டுள்ளது. ஆனால், தகவலறியும் சட்டமூலத்தை இல்லாமலாக்கி, ஒரு வருடத்துக்குள் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரத்தை மீண்டும் இயலுமாக்கியுள்ளது இந்த இருபது. இன்னும் ஐந்து வருடங்களுக்கு அரசாங்கம் அமைக்க இயலாத ஐக்கிய தேசியக் கட்சி, பாராளுமன்றக் கலைப்புக் குறித்து சிந்திக்கப்போவதில்லை. ஆனால், சிறுபான்மை சமூகங்களுக்கும் கட்சிகளுக்கும் இதில் சிந்திக்கப் பல விடயங்கள் உள்ளன.

‘நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை’ பாதுகாக்கப்பட்டிருக்கிறது. பாராளுமன்றத்தில் பலம் இல்லாவிடினும் ஜனாதிபதியின் நட்பு, உறவுகளை வைத்தாவது எதையாவது சாதிக்கலாம் என்ற நம்பிக்கை, இந்த முறையில்தானே உள்ளது. பாராளுமன்ற தெரிவுக்கான 12 வீத வெட்டுப்புள்ளியை ஐந்து வீதமாக்கியது, ஜனாதிபதியின் உறவை வைத்துத்தான் என்பதற்கு 1989 தேர்தல் சாட்சி. அவசரமாகத் தேவைப்படும் பாதுகாப்புக்கள், நியமனங்கள், உதவிகளுக்கும் ஜனாதிபதியின் உத்தரவுகள்தான் உதவியிருந்தன. இப்பதவியில் ஜனநாயகத் தன்மை குறைவாக இருந்தாலும் நம்பகத்தன்மை உள்ளதாகக் கருதலாம்.

வரவுள்ள புதிய அரசியலமைப்பில் எமக்குள்ள பிரச்சினைகள் என்ன? “ஒரே நாடு, ஒரே சட்டம்”. சிறுபான்மை சமூகங்கள் இச்சட்டம் பற்றித்தான் அலட்டிக்கொள்கின்றன. திருமணச் சட்டம், சமயச் சடங்குகள், அரசியல் நடைமுறைகளை இது கட்டுப்படுத்தலாம். மதத்தின் பெயரிலான, சமூக அடையாளமுள்ள, மொழி, பிரிவினைவாத கட்சிகள் ஒரு காலத்தில் தடுக்கப்படலாம். ஆணைப் பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்றக் கூடிய நிறைவேற்று அதிகாரம், மூன்றிலிரண்டு பெரும்பான்மை உள்ள அரசு எதைச் செய்தாலும் எவராலும் எதுவும் பேச முடியாது. “ஒரே நாடு, ஒரே சட்டம்” என்று வந்தால், மாகாண சபைகள் நினைத்தவாறு சட்டம் இயற்ற முடியாமல் போகும். அல்லது இவற்றின் சட்டமியற்றும் அதிகாரம் பிடுங்கப்படும். இல்லாவிடின் இச்சபைகளே இல்லாமலாக்கப்படலாம். இதற்காகத்தான் இந்தியா இதில் கூடிய கவனம் எடுத்துள்ளது.

இந்தக் கவனம் தலையீடாக மாறுமா? மாறினாலும் மாகாண சபைகள் காப்பாற்றப்படுமா? இவையெல்லாம், ராஜதந்திர வியூகங்களில் தங்கியுள்ளன. கொழும்பு துறைமுக நகரை நிர்மாணிக்கும் சீனாவின் நிர்மாணப் பொறியியல் கூட்டுத்தாபனத்திற்கு, அமெரிக்கா விதித்துள்ள தடைகளில் ஏற்படவுள்ள ராஜதந்திர விரிசல்கள்தான் இவற்றை தீர்மானிக்கும். “அதிகாரப்பகிர்வுக்கான அடையாளமாக அறிமுகமாக்கப்பட்ட மாகாண சபை முறைமைகளில் எதுவுமில்லை. பொருளாதார அபிவிருத்திகளூடாக தமிழர் பிரச்சினையைத் தீர்க்கலாமென ஜனாதிபதியே கூறுகையில், எதற்கு இச்சபைகள்? இச்சபைகளை புலிகளே ஏற்கவில்லை. போரும் முடிந்து, புலிகளும் ஒழிந்த பின்னர் யாருக்காக இது?” பெரும்பான்மைவாதிகளின் நிலைப்பாடு இதுதான். இதைச் சமாளித்துத்தான் அரசாங்கம் இதுபற்றிச் சிந்திக்கும்.

முஸ்லிம் திருமணச் சட்டம் பற்றி இப்போது மட்டும் பேசப்படவில்லை. கடந்த ஆட்சியிலும் இது அலசப்பட்டது. ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர், எழுந்த விழிப்புக்களே இதை அவசரப்படுத்துகின்றன. இப்போது ராஜப‌ஷக்களின் மிகப்பலமான அரசாங்கத்தில், இது நடந்தே தீருமென முஸ்லிம்கள் அஞ்சுகின்றனர். நீதியமைச்சர் முஸ்லிமாக இருக்கையில், விடயத்தைப் பக்குவமாக அணுகி, உண்மையில் இதிலுள்ள யதார்த்தங்களை வென்றெடுக்கலாம்.

பருவமடைதல் என்பது பாலியல் ரீதியாக மட்டுமென ஏன் பார்க்கப்படுகின்றது? சமூகப்பருவம், சமையல் பருவம், குடும்பத் தலைவிக்கான பருவம், பொது விவகாரங்கள் தொடர்பிலான அறிவுப்பருவம் என்பவற்றையும் கருத்திற்கொண்டு, திருமண ஏற்பாடுகள் இடம்பெறுவது சிறப்பானதுதான்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *