Breaking
Sun. Nov 24th, 2024

( ஏ.எச்.சித்தீக் காரியப்பர்)

அமைச்சரவையில் மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ள நிலையில், முக்கிய முஸ்லிம் கட்சிகளின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்களிடையிலான ஆதங்கங்களும் நெஞ்சுத் துடிப்புகளும் அதிகரித்துக் காணப்படுகின்றன.

விசேடமாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்களிடையிலேயே இவ்வாறான நிலைமைகள் இப்போது அதிகரித்துக் காணப்படுகின்றன.

ஹக்கீமுக்கு தரம் குறைந்த அமைச்சு வழங்க வேண்டுமென்று ஒரு சாரார் விரும்புவதுடன் அவருக்கு இந்த அமைச்சே கொடுக்கப்பட வேண்டுமென்றும் கற்பனையில் ஓர் அமைச்சை உருவாக்கி அதற்குப் பெயரிட்டு முகநூல்களில் பதிவிட்டிருந்ததனையும் நான் அவதானித்திருந்தேன்.

அதே போன்று தான் அமைச்சர் ரிஷாத்தின் அமைச்சுப் பொறுப்பும் குறைக்கப்பட்டு அவருக்கும் தரம் குறைந்த அமைச்சே கொடுக்கப்பட வேண்டுமென புதிய அமைச்சு ஒன்றை உருவாக்கி அதற்கும் பெயரிட்டு மற்றொரு சாரார் முகநூல்களில் பதிவிட்டிருந்தனர்.

ஆனால், இரு தரப்பினரும் அவ்வாறு செய்வது, விமர்சிப்பது தவறு. ஏனெனில் தேசிய அரசியலில் கௌரவ அமைச்சர்கள் ஹக்கீம், ரிஷாத் இருவரும் எமக்கு பலமிக்கவர்கள்தான். சில விடயங்களில் யானைக்கும் அடி சறுக்குவது உண்மைதான். ஆனால், எப்போதும் அடி சறுக்கும் ஒன்றாக அதனை நாம் கருத முடியாது அல்லவா?

நாளை (25) நடைபெறவுள்ளதாகக் கூறப்படும் அமைச்சரவை மாற்றங்களின் போது முஸ்லிம் அமைச்சர்களின் பொறுப்புகளில் பெரியதான மாற்றங்கள் நடைபெறமாட்டா என்றே எனக்கு கூறப்பட்டது.

கௌரவ அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு தொடர்ந்தும் வர்த்தக வாணிபத்துறை அமைச்சை வழங்குவதுடன் அந்த அமைச்சின் கீழ் இயங்கும் ஓரிரு நிறுவனங்களை வேறு அமைச்சுகளின் கீழ் கொண்டு வரவும் வேறு சில அமைச்சுகளின் கீழ் செயற்படும் பிரிவுகளை ரிஷாதின் அமைச்சின் கீழ் கொண்டு வரவுமான திட்டம் நேற்று வரை காணப்பட்ட நிலையில் இறுதியில் அதுவும் கைவிடப்பட்டுள்ளதாக அறிகிறேன்.

இந்த நிலையில் பிந்திய தகவலாக அமைச்சர்களான கௌரவ ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன் ஆகியோரின் அமைச்சுகளில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படமாட்டா என்ற உறுதியான தகவல் எனக்குக் கிடைத்துள்ள அதேவேளை, அவ்வாறான மாற்றங்கள் இறுதிக்
கட்டத்தில் மேற்கொள்ளப்படுமாயின் அவர்களுக்கு வழங்கப்படும் அமைச்சுகள் பலவீனமான அமைச்சுகளாக நிச்சயம் அமையப் போவதில்லை என்பதனையும் இங்கு பொறுப்புடன் பதிவிடுகிறேன்.

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் விவகாரம்
———————————————————————
இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வை அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக நியமிப்பதில் உடன்பாடு காணப்பட்டுள்ள நிலையில், அமைச்சரவை எண்ணிக்கை என்ற விடயம் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.ஏதாவது ஒரு வழியில் அவருக்கு ஓர் அமைச்சைக் கொடுப்பதற்கான பிரயத்தனங்கள், நான் இந்தச் செய்தியை பதிவிடும் வரை நடைபெற்றுக் கொண்டிருந்தன, நாளைய அமைச்சரவையில் இந்த மாற்றம் இடம்பெறாவிட்டாலும் தாமதித்துக் கூட நிச்சயம் நடைபெறும்.

அமைச்சர் கபீர் ஹாசிம் விவகாரம்
—————————————————————–

அமைச்சர் கபீர் ஹாசிமின் பெறுப்புகளில் சில விடுவிக்கப்படவுள்ளன அல்லது அவரது அமைச்சு மாற்றம் செய்யப்படலாம்.

இறுதியாக, நான் கௌரவ அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன், கபீர் ஹாசிம் இராஜாங்க அமைச்சர், ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் தொடர்பில் மட்டுமே இங்கு தெரிவித்துள்ளேன். ஏனைய எமது முஸ்லிம் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் தொடர்பில் எதனையும் கூறவில்லை என்பதனைக் கருத்தில் கொள்ளுமாறு இங்கு ஊன்றித் தெரிவித்துக் கொள்கிறேன். நான் குறிப்பிடும் “ஊன்றி” என்ற சொல்லின் கனதியை சரியாகப் புரிந்து கொள்ளுங்கள்.

எது எப்டியிருப்பினும் நாளைக் காலை கூட இன்றைய நிலைவரங்கள் தலை கீழாக மாறலாம் என்பதனையும் இங்கு தெரிவித்துக் கொளள் விரும்புகிறேன்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *