(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்)
அமைச்சர் ஹக்கீம் விடுத்துள்ள பெருநாள் வாழ்த்து செய்தியில் இவ்வரசாங்கத்தின் நீதியின் மீது அவருக்கு நம்பிக்கையுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
*அவரது பெருநாள் வாழ்த்து செய்தியில்*
“ இவ்வாறான சூழ்நிலையில் கடந்த ஆட்சிக்காலத்தில் போலல்லாது, நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் நீதியும், நியாயமும் நிலைநாட்டப்படும் என்ற எதிர்பார்ப்பில் அல்லாஹ்வின் மீதுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையில் இந் நாட்டு முஸ்லிம்களாகிய நாங்கள் இக்கட்டான நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்” என குறிப்பிட்டிருந்தார்.
மிக அண்மையில் ஞானசார தேரர் நீதி மன்றம் சென்று அவருக்கு பிணை வழங்கிய விடயமானது இவ்வாட்சியின் நீதித்துறை மீதுள்ள நம்பிக்கையை பூரணமாக இல்லாமளாக்கியுள்ளது. இல்லை.. இல்லை.. அதில் நீதித் துறையானது நீதியைத் தான் நிலை நாட்டியுள்ளதென அமைச்சர் ஹக்கீமால் கூற முடியுமா?
பிணை வழங்க வேண்டுமென்றே செயற்பட்ட நீதித் துறை மீது நீதியை நிலை நாட்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளதாக, எவ்வாறு அமைச்சர் ஹக்கீமால் கூற முடியும்?
குறித்த வாழ்த்து செய்தியில் முஸ்லிம்கள் இக்கட்டான சூழ் நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பதாக அவராகவே ஏற்றுக்கொள்கிறார். கடந்த ஆட்சி காலத்தை போலல்லாது இவ்வாட்சியானது நீதியை நிலை நாட்டும் என்ற நம்பிக்கை இருந்தால் ஏன் இந்த இக்கட்டான சூழ் நிலை? ஏன் இந்த முன்னுக்கு பின் முரணான கருத்து?
இந்த வாழ்த்து செய்தியில் கடந்த அரசாங்கத்தை போலல்லாது இவ்வாட்சியின் கீழ் நீதி நிலைநாட்டப்படும் என்ற எதிர்ப்பார்ப்பை அமைச்சர் ஹக்கீமுக்கு வழங்கிய ஒரு விடயத்தையாவது கூற முடியுமா? அமைச்சர் றிஷாத் இவ்வரசை படு மோசமாக விமர்சிக்கின்றார். அப்படி இருந்தும் அது போதாதென்று அவர் மீது சில சொல் அம்புகள் வீசப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவ்வாறு சொல் அம்புகளை வீசுபவர்களின் கண்களுக்கு இது புலப்படத்தான் மர்மம் என்ன?
இந்த விடயமானது அமைச்சர் ஹக்கீம் இவ்வாட்சியாலர்களின் கால்களில் விழுந்து கிடக்கின்றார் என்ற விடயத்தை தெளிவாக்குகின்றது. இவைகளை கண்டும் எமது முஸ்லிம் சமூகம் அமைச்சர் ஹக்கீமின் உண்மை முகத்தை அறிந்து கொள்ளவில்லையென்றால் அவர்களை போன்ற ஏமாளிகள் யாருமே இருக்க முடியாது.