” ரோசமற்றவன் ராசாவிலும் பெரியவனாம் ” என்றதொரு பழமொழியுண்டு. ஒருவன் தனது சுய மரியாதையை இழக்க தயாராக இருந்தால், அவன் பல விடயங்களை மிக இலகுவாக சாதித்துக்கொள்ள முடியும். இருப்பினும் பலரும் அதனை விரும்புவதில்லை. தன் மானத்தை இழந்து காரியங்களை சாதித்துக்கொள்ளும் ஒருவராக யாருமே நஸீர் ஹாபிஸை எதிர்பாக்கவில்லை. அவரது தற்போதைய செயற்பாடொன்று, அவர் அந்த வகையை சார்ந்தவரே என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
சில நாட்கள் முன்பு தொழிற்பயிற்சி அதிகார சபையின் தலைவராக பிரதமரால் நஸீர் ஹாபிஸ் நியமிக்கப்பட்டிருந்தார். தற்போது தொழிற்பயிற்சி அதிகார சபை அமைச்சர் றிஷாதின் கீழ் வந்துள்ளது. அமைச்சர் றிஷாத் அதன் அமைச்சராக வந்ததும் நஸீர் ஹாபிஸ் ஜென்டில் மேனாக (gentleman) இராஜினாமா செய்வார் என்றே பெரிதும் சிலாகிக்கப்பட்டது. இருந்தும் பலரதும் நம்பிக்கைக்கு மாற்றமாக அவர் அமைச்சர் றிஸாதின் கீழ் பணியாற்ற, தனக்கு எவ்வித கூச்சமுமில்லை என்ற வகையில் தனது செயற்பாட்டை அமைத்துள்ளார். இதன் பிறகு அவரை தலைவராக ஏற்றுக்கொள்ளும் நிலை வந்தாலும், அவர் ஏற்றுக்கொள்வார் என்பதையும் இவ்விடயம் சுட்டிக்காட்டுகிறது.
ஒரு நிறுவன தலைவரானவர் அதற்குரிய அமைச்சரால் நியமிக்கப்படுவார். அவர் அமைச்சரின் மகுடிக்கு ஆடியுமாக வேண்டும். அமைச்சர் றிஷாதின் போட்டிக்கட்சியான மு.காவின் பிரதி தலைவரான நஸீர் ஹாபிஸ் அமைச்சர் றிஷாதின் சொல் கேட்டு, அடி பணிந்து செயற்படுவது முதலில் அவருக்கு கேவலம். இரண்டாவது அவரின் கட்சியான மு.காவுக்கு பலத்த அவமானம். நஸீர் ஹாபிஸ் ஒரு மாகாணத்தின் முதலமைச்சராக இருந்தவர். இதன் பிறகு அவர் அணிந்து கொள்ள வேண்டிய பதவிகள் அதற்கு சமனானதாக இருத்தல் வேண்டும். அதுவே அவர், தனது நிலையிலிருந்து சற்றும் கீழிறங்கவில்லை என்பதை வெளிப்படுத்தும்.
ஆனால், தற்போது அவருடைய நிலையானது, தான் அங்கம் வகிக்கும் கட்சியின் நேரடி எதிரி கட்சியான அ.இ.ம.கா தலைவரின் சொல் கேட்டு நடந்து பதவியொன்றின் மூலம் தனது கௌரவத்தை பேணிக்கொள்ள வேண்டிய நிலையிலுள்ளார். இது அவர் எந்தளவு பதவி ஆசையில் உள்ளார் என்ற விடயத்தை, பதவியில்லாமல் இருக்க முடியாது என்ற விடயத்தையும் துல்லியமாக்குகின்றது.
இவருடைய இப் பதவி நீடிப்பின் பின்னணியில் பிரதமரின் செல்வாக்கு இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. யார், என்னதான் சொன்னாலும் அமைச்சர் றிஷாதின் கீழ் நஸீர் ஹாபிஸ் பணியாற்றுவது கேவலமானது தான். தனது பிரதி தலைவர் ஒருவரை அ.இ.ம.காவின் தலைவரின் கீழ் பணியாற்ற அனுமதித்திருப்பதானது, தனது கட்சியின் ஒரு சிறு பங்கை அமைச்சர் றிஷாதிடம் ஒப்படைத்தது போனெனலாம். இத்தனை பெரும் அமைச்சை வைத்துள்ள அமைச்சர் ஹக்கீமுக்கு, தன் அமைச்சின் கீழ் ஒரு தலைவர் பதவி வழங்க முடியாதா?
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.