Breaking
Tue. Sep 17th, 2024

(ஊடகப்பிரிவு)

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முயற்சியில் முன்னெடுக்கப்படும் வாழ்வாதாரத் திட்டங்களை முறியடிக்க பல்வேறு வழிகளில் சதித் திட்டங்கள் தீட்டப்படுகின்றன என்று மக்கள் காங்கிரஸின் தேசிய மகளிர் அணித்தலைவி டாக்டர். ஹஸ்மியா உதுமாலெப்பை தெரிவித்தார்.

 

அம்பாரை மாவட்டத்தின் அக்கரைப்பற்று மற்றும் ஒலுவில் பிரதேசங்களில் கடந்த வியாழக்கிழமை (28) மக்கள் காங்கிரஸின் மகளிருக்கான பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. அந்தவகையில், குடியிருப்பு பிரதேச சபையின் மக்கள் காங்கிரஸ் கிளைக் காரியாலயத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது,

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனினால் இலங்கை முழுவதும் நாடாளாவிய ரீதியில் வாழ்வாதாரத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை நாம் எல்லோரும் அறிந்த விடயமே. இந்த வாழ்வாதாரத் திட்டங்கள் மக்களைச் சென்றடையக் கூடாதென, அதனை முறியடிக்கும் வகையில் சில கட்சித் தலைவர்கள் சதித் திட்டங்களைத் தீட்டி வருகின்றனர். எமது அமைச்சரினால் வழங்கப்படும் வாழ்வாதாரங்கள் இறைவனின் பெயரால் வழங்கப்பட்டு வருகின்றன.

எனவே, சதிகாரர்களின் சூழ்ச்சிகள் ஒருபோதுமே பழிக்காது. எத்தனை தடைகள் வந்தாலும் அவற்றுக்கு அஞ்சி மக்களுக்கான வாழ்வாதார நலத்திட்டங்களை வழங்குவதை எமது மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஒருபோதும் நிறுத்தமாட்டார் என்பதை ஆணித்தரமாகக் கூறிக்கொள்கின்றேன் என்றார்.

இதேவேளை, அக்கரைப்பற்று நகர சபைக்குட்பட்ட பிரதேசத்தில் உள்ள வறிய குடும்பங்களுக்கான பாடசாலை உபகரணங்கள், மத்திய குழு உறுப்பினர் பாசித் மற்றும் மகளிர் அணியின் இணைப்பாளர் ஷஹீட் ஹாஜியார் தலைமையில், தேசிய மகளிர் அணித்தலைவி டாக்டர். ஹஸ்மியாவினால் வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன், நடைபெற்ற ஒவ்வொரு கூட்டத்திலும் அந்தந்த பிரதேசத்துக்குரிய மகளிர் அணித்தலைவிகள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கான நியமனக் கடிதங்கள் அந்தப் பிரதேச மக்கள் காங்கிரஸின் அமைப்பாளர்கள் முன்னிலையில் வழங்கி வைக்கப்பட்டது.
அந்தவகையில், குடியிருப்பு பிரதேசத்துக்கான மகளிர் அணித் தலைவியாக ஹம்சா பேகம் தெரிவு செய்யப்பட்டு, அமைப்பாளர் என்.டீ.நியாஸ் முன்னிலையில் நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.

அக்கரைப்பற்று நகரசபை பிரிவுக்கு பாத்திமா சமீரா, ஒலுவில் பிரதேசத்துக்கு ஜன்னத்துல் நஸ்மிலா ஆகியோர் மகளிர் அணித் தலைவிகளாகத் தெரிவு செய்யப்பட்டு, கல்முனைத் தொகுதி அமைப்பாளரும், அமைச்சரின் பாராளுமன்ற விவகாரப் பணிப்பாளருமான ஏ.ஆர்.எம். ஜிப்ரி மற்றும் அப்பிரதேச அமைப்பாளரும் வேட்பாளருமான அஸ்ஹர் ஆகியோரின் முன்னிலையில் நியமனம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள், ஊர்ப்பிரமுகர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களும் கலந்துகொண்டனர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *