(சுஐப் எம் காசிம்)
வவுனியா பம்பைமடு பிரதேசத்தில் தொடர்ச்சியாகக் கொட்டப்பட்டு வரும் குப்பைகளால் அந்தப்பிரதேசத்தில் வாழும் மக்களின் பாதிப்பைக் கருத்திற்கொண்டு குப்பைகளை மீள் சுழற்சி செய்து உரமாக்கும் திட்டத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் முயற்சியால் ரூபா 200 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளுக்கிணங்க உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா இந்த நிதி ஒதுக்கீட்டை வழங்கியுள்ளதாக வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கமலேஸ்வரன் தெரிவித்தார்.
வவுனியா பம்பைமடுவில் குப்பைகள் குவிந்து கிடக்கும் மேட்டுப் பிரதேசத்திற்கு நேற்று (17) காலை உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் அதிகாரிகள் மற்றும் வவுனியா மாவட்ட அரச அதிகாரிகள் சகிதம் களத்துக்கு விஜயம் செய்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நேரில் நிலைமைகளை ஆராய்ந்தார்.
“வவுனியா மாவட்டத்தில் சேரும் அன்றாடக் குப்பைகள் இந்த இடத்தில் தொடர்ந்தும் கொட்டப்பட்டு வருவதால் நாங்கள் பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றோம். துர் நாற்றங்கள் எழுவதால் சுவாசிக்க முடியாது பெரிதும் சிரமப்படுகின்றோம். இதனால் சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்பட்டு நோய்களுக்கு ஆளாக வேண்டி நேரிடுகின்றது. எனவே இந்தக் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுங்கள்” இவ்வாறு சாளம்பைக்குளம் மற்றும் அயற் கிராம மக்கள் அமைச்சர் ரிஷாட்டிடம் மீண்டும் வேண்டுகோள் விடுத்தனர்.
இதனைச் செவிமெடுத்த அமைச்சர் உயர் அதிகாரிகளுடன் களத்திலே நின்று நடாத்திய ஆலோசனையின் பிரகாரம் குப்பை மேட்டுக்கு அப்பால் உள்ள 10 ஏக்கர் நிலத்தில் மீள் சுழற்சி மேற்கொள்ளும் செயற்திட்டத்தை மேற்சொன்ன நிதியொதுக்கீட்டில் ஒரு வருட காலத்துக்குள் நடைமுறைப்படுத்துவதென முடிவெடுக்கப்பட்டது. அதன் மூலம் வவுனியா மாவட்டக் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு கூட்டுப் பசளையாக்கும் திட்டத்தை மேற்குறிப்பிட்ட நிதியொதுக்கீட்டில் ஒரு வருட காலத்துக்குள் பூர்த்தி செய்யுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
அத்துடன் குறிப்பிட்ட காணியை விடுவித்தல், சூழல் ஆய்வு அறிக்கை பெறுதல், தொழில்நுட்ப உதவி மற்றும் மாகாண சபை அமைச்சுடன் இந்த திட்டத்திற்கான ஒருங்கிணைப்புப் பணிகள் ஆகியவற்றை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.
சுமார் ஒரு வாரத்துக்குள் இந்த பணிகளை ஆரம்பிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறும் பணித்தார்.
தற்போது குப்பை கொட்டப்பட்டு வரும் இடத்துக்கு மாற்றீடாக தற்காலிகமாக வேறு இடங்களை பயன்படுத்தலாமா என ஆலோசிக்குமாறும் அமைச்சர் வேண்டினார்.
அத்துடன் குப்பைகள் கொட்டும் இடத்துக்கருகாமையில் அமைக்கப்பட்டு கடந்த 2 வருடங்களாக மூடப்பட்டுக்கிடக்கும் மனிதக்கழிவுகளை உரமாக்கும் பொறிமுறைத்தொகுதியைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்ப்யும் அமைச்சர் வலியுறுத்தினார்.