(சுஐப் எம்.காசிம்)
சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபை ஒன்றை வழங்குவதற்கு உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா இணக்கம் தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீனின் தலைமையில் நேற்று காலை (22/07/2016) மக்கள் காங்கிரசின் சாய்ந்தமருதுக் கிளை முக்கியஸ்தர்கள், சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் உட்பட அக்கிராமத்தின் சமூகநல இயக்கங்கள் பங்கேற்ற கூட்டத்தில் அமைச்சர் றிசாத் பதியுதீனின் விசேட அழைப்பை ஏற்று அங்கு பிரசன்னமாகிய அமைச்சர் பைசர் முஸ்தபா இந்தத் தெளிவான அறிவிப்பை வெளிப்படுத்தினார்.
மக்கள் காங்கிரசின் பிரதித் தலைவரும், அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் தலைவருமான ஏ.எம்.ஜெமீலின் ஏற்பாட்டில் கைத்தொழில்,வர்த்தக அமைச்சின் கேட்போர்கூடத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
சாய்ந்தமருது மக்களின் பிரச்சினைகளையும் அவர்களுக்கென தனியான உள்ளூராட்சி சபை இல்லாததால் அவர்கள் படும் அவதிகளையும் தான் அறிவதாக தெரிவித்த அவர், பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்தக் கோரிக்கை தொடர்பில் அமைச்சர் றிசாத் பதியுதீன் தன்னிடம் சுட்டிக்காட்டி இதனை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தியுள்ளார் என அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.
“இந்தக் கோரிக்கை நியாயமானது எனவும், மக்கள் நலன் சார்ந்தது எனவும்” தனதுரையில் சுட்டிக்காட்டிய பைசர் முஸ்தபா, உள்ளூராட்சி சபைகளை வரையறுப்பது தொடர்பில் சட்டத்தரணி சந்தன தலைமையில், தன்னால் நியமிக்கப்பட்டுள்ள குழுவுக்கு கோரிக்கை தொடர்பான உரிய ஆவணங்களைக் கையளித்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
அமைச்சர் றிசாத் பதியுதீன் முஸ்லிம் சமூகத்தின் நலனில் அதீத அக்கறை கொண்டவர் எனவும், அவர் தன்னை ஒருபோதும் இந்த விடயத்தில் பிழையாக வழிநடத்தப் போவதில்லை எனவும் தனக்கு உறுதியான நம்பிக்கை இருந்ததனாலேயே அவரது அழைப்பை ஏற்று இங்கு வந்ததாக பைசர் முஸ்தபா தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர் றிசாத் பதியுதீனும், சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபை வழங்க வேண்டியதன் அவசியத்தை தர்க்கரீதியாக முன்வைத்தார்.
அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் சாய்ந்தமருது வரலாறு, தனியான சபை இன்றி அவர்கள் படுகின்ற அவதிகள் குறித்த தொகுப்பு ஆவணம் ஒன்றும் அங்கு கையளிக்கப்பட்டது.
மக்கள் காங்கிரசின் சாய்ந்தமருது மத்தியகுழுவின் தலைவர் ஏ.எல்.எம்.அன்வர் சாய்ந்தமருது வரலாற்றை விளக்கியதுடன், இந்த முயற்சியில் அமைச்சர் றிசாத் பதியுதீன் காட்டிவரும் அக்கறையும், ஆதரவும் அபரிமிதமானது என தெரிவித்ததுடன், அமைச்சர்களான பைசர் முஸ்தபாவும், றிசாத் பதியுதீனும் சாய்ந்தமருது வரலாற்றில் பெயர் பொறிக்கப்படக்கூடியவர்கள் என்றார்.
சாய்ந்தமருது பலநோக்குக் கூட்டுறவுச்சங்கத் தலைவர் எம்.எம்.உதுமாலெப்பை, சாய்ந்தமருது மறுமலர்ச்சி இயக்கத்தின் தலைவர் எஸ்.எம்.கலீல் ஆகியோர் தமது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பைசர் முஸ்தபாவுக்கு நன்றி தெரிவித்ததோடு, இன்று அமைச்சர் றிசாத் பதியுதீன் மேற்கொண்ட முயற்சி தமது பிரதேசத்துக்கு வரலாற்றுத் திருப்புமுனையாக அமைந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.
மக்கள் காங்கிரசின் சாய்ந்தமருது மத்திய கிளையின் செயலாளர் ஐ.எல்.ஏ.ராசிக் உட்பட பலர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.