(ஏ.எச்.சித்தீக் காரியப்பர்)
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் வர்த்தகத்துறை அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் அவர்கள், நிதி மோசடி, சொத்துக் குவிப்பு, அரச நிலங்களைக் கையகப்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்படலாம் என்ற யூகங்கள் இரண்டொரு தினங்களாக நிலவி வருகின்றன.
சில சிங்கள ஊடகங்களால் சோடிக்கப்பட்ட, அடிப்படையற்ற இந்த தகவலில் எவ்வித உண்மையும் இல்லை. அமைச்சர் ரிஷாத்தை கைது செய்வதற்கான அனுமதியை பொலிஸார் கோரியதாகவோ அதற்கான அனுமதியை சட்டமா அதிபர் திணைக்களம் வழங்கியதாகவே எந்த உறுதியான தகவலும் இல்லாத நிலையில் இவ்வாறானதொரு புரளி தென்னிலங்கையின் சிங்கள கடுங்கோட்பாளர்களான முஸ்லிம் விரோதிகளால் கிளப்பப்பட்டுள்ளது.
இதனையே சில சிங்கள ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டிருக்கவும் முடியும். அதுவே இன்று தமிழிலும் வெளிவந்துள்ளதாக தெரிய வருகிறது. (அவ்வாறான செய்தியை சில தமிழ் ஊடகங்கள் வெளியிட்டிருந்தாலும் அது தவறல்ல. இவ்வாறான ஒரு தகவல் சிங்கள ஊடகங்களில் வெளிவந்துள்ளன என்பதனை எடுத்துக் காட்டுவதாகவும் அது அமையலாம் அல்லவா)
ஆனால், குறித்த செய்தியானது முழுக்க, முழுக்க தவறானது. பொய்யானது என்பதனை நான் இது தொடர்பில் இன்று அறிந்து, பெற்றுக் கொண்ட தகவல்கள் ஊடாக (இன்றுவரை) உறுதிப்படுத்திக் கொண்டுள்ளேன்.
வில்பத்து மற்றும் மரக் கடத்தல். போன்ற அநியாய குறற்சாட்டுகளை சிங்கள இனவாத சக்திகளும் சிங்கள தேசப் பிரேமிகளும் பசுமைப் புரட்சியாளர்களும் அமைச்சர் ரிஷாத் மீது சுமத்தி, அனைத்தும் பொய்யாகி தோற்றுப் போன நிலையில் அவர் கைதாகிறார் என்ற இன்னொரு அபாண்டத்தை தற்போது அவிழ்த்து விட்டுள்ளனர் என்பதே உண்மை. இதேவேளை, இந்த விடயத்தில் சில கனிஷ்ட முஸ்லிம் அரசியல்வாதிகளும் இவ்வாறானவர்களுக்கு துணை நின்று பொய்யை விற்பனைப்படுத்தவும் பிரசாரப்படுத்தவும் ஊக்கமளிக்கிறார்கள் என்ற உண்மையையும் இங்கு வெளிப்படையாக கூறிக் கொள்ள விரும்புகிறேன்.