Breaking
Sun. Nov 24th, 2024

(முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது)

நேற்று 21.10.2016 அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பொதுக்கூட்டம் சாய்ந்தமருதில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் குறித்த கட்சியை சாராத இன்னுமொரு சிங்கள பேரினவாத கட்சியின் முகவரான உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார். அவரது வருகையினை ஒரு சாதாரணமான நிகழ்வாக எடுத்துக்கொள்ள முடியாது.

முஸ்லிம் காங்கிரசின் கோட்டையான சாய்ந்தமருதில் முஸ்லிம் காங்கிரஸ் தவிர்ந்த வேறு கட்சிகள் கூட்டம் நடாத்தினால் அதற்கு மக்கள் செல்வதில்லை. கூட்டம் நடாத்துபவர்கள் வெற்றுக் கதிரைகளுக்கு முன்பாக பேசி அவமானப்பட்டு செல்லுவதே வழமையாகும். இதனை தவிர்க்கும்பொருட்டு சாய்ந்தமருதுக்கான தனியான பிரதேசசபை என்ற விளம்பரத்துடன் தங்களது அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கூட்டத்துக்கு மக்களை திரட்டுவதற்காக மிகவும் திட்டமிட்ட முறையில் பைசர் முஸ்தபா அழைக்கப்பட்டிருந்தார்.

இவ்வாறு மக்களை திரட்டி சாய்ந்தமருதில் மக்கள் வெள்ளத்துடன் பாரிய கூட்டம் நடாத்தியாதாக ஊடகங்களில் காண்பிப்பதன்மூலம், சாய்ந்தமருதில் முஸ்லிம் காங்கிரஸ் கோட்டை தகர்ந்துவிட்டது என்று பிரச்சாரம் செய்து, அதனை ஏனைய பிரதேசத்துக்கும் தாக்கத்தினை ஏற்படுத்தி, முஸ்லிம் காங்கிரசினை அழித்து, தனது அகில இலங்கை மக்கள் காங்கிரசினை வளர்ப்பதற்கான துரும்பாகவே அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸ் மீதும், அதன் தலைவர் மீதும் பைசர் முஸ்தபாவுக்கு நீண்டகாலமாக பகைமை உணர்வு இருந்து வருகின்றது. முஸ்லிம் காங்கிரசை அழிக்க முயட்சிக்கின்ற சக்திகளில் பைசர் முஸ்தபாவும் ஒருவர். ரவுப் ஹக்கீமை கண்டி மாவட்டத்தில் தோல்வியடைய செய்வதற்காகவே இவருக்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற பதவி வழங்கப்பட்டு கண்டி மாவட்டத்தில் களமிறக்கப்பட்டார். இதனை அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்கள் தனக்கு சாதகமாக பயன்படுத்த முற்பட்டுள்ளார்.

ரவுப் ஹக்கீம், பைசர் முஸ்தபா ஆகிய இருவரும் கண்டி மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடுவதனால் பைசர் முஸ்தபாவினை விட அதிகமான விருப்பு வாக்குகள் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்கள் பெறுவதனாலும், அது தனது வெற்றிக்கு சவாலாக இருப்பதனாலும், தேர்தல் காலங்களில் இருதரப்பு ஆதரவாளர்களுக்கிடையில் கைகலப்புகள் ஏற்பட்டதுமே இந்த பொறாமைக்கான இன்னுமொரு காரணமாகும்.

தமிழ் மொழியினை சரளமாக உச்சரிக்க தெரியாத பைசர் முஸ்தபா அவர்கள் அவரது சிறுபராயத்திலிருந்து பழகியது சிங்கள சமூகத்துடனேயே, இதனால் இவருக்கு சமூக பற்றுதலோ, முஸ்லிம்களின் தேசியம், அரசியல் உரிமை, தனித்துவம், முஸ்லிம்களுக்கான தனித்துவ கட்சி போன்ற எந்தவித கொள்கைகளும் கிடையாது.

இவரது அரசியல் பிரவேசமானது ஆறுமுகம் தொண்டமானின் இலங்கை தொழிலாளர் காங்கிரசாகும், அக்கட்சியின் சேவல் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட்டு பின்பு தொண்டமானுக்கு குழிபறித்துவிட்டு, ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்தார். அதன் பின்பு ஐக்கிய தேசிய கட்சி அதிகாரமின்றி இருந்ததனால் மகிந்த ராஜபக்சவுடன் சேர்ந்தார். பின்பு மகிந்த ராஜபக்சவை விட்டு விலகி மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியுடன் சேர்ந்தார். சேர்ந்து ஒரு வருட காலத்துக்குள் இப்போது ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனாவுடன் அவரது அரசியல் பயணம் நடைபெறுகின்றது. மைத்ரி அதிகாரத்தில் இருக்கும்வரைக்கும் பைசர் முஸ்தபா மைத்ரியுடன் இருப்பார். இதுதான் அவரது அரசியல் கொள்கையாகும்.

கடந்த வருடமும், இவ்வருடமும் சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சிமன்ற கோரிக்கையினை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்களின் தலைமையில், சாய்ந்தமருது பள்ளிவாசல் நிருவாகிகள் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர்களின் பங்களிப்புடன் பைசர் முஸ்தபாவினை உள்ளூராட்சி அமைச்சர் என்றவகையில் அவரது அமைச்சுக்கு பலதடவைகள் சென்று நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்ததனையும், அதற்கு பைசர் முஸ்தபா அவர்கள் தான் விரைவில் சாய்ந்தமருதுக்கு தனியான சபையினை வழங்குவதாகவும் அறிவித்திருந்ததனையும் யாவரும் அறிவர்.

ரவுப் ஹக்கீமின் கோரிக்கையை ஏற்று சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றத்தினை வழங்கினால், மக்கள் செல்வாக்கு இன்னும் பெருகிவிடும். அதனால் தான் அழிக்க நினைக்கும் முஸ்லிம் காங்கிரசினை தானே வளர்ப்பதாக அமைந்துவிடும். அதனால்தான் முஸ்லிம் காங்கிரசின் கோரிக்கையினை அலட்சியம் செய்துவிட்டு மக்கள் மத்தியில் முஸ்லிம் காங்கிரசினால் சாய்ந்தமருதுக்கு தனியான சபையினை பெற்றுகொடுக்க முடியவில்லை என்று கோஷமிடுகின்ற முஸ்லிம் காங்கிரசின் எதிரிகளுடன் பைசர் முஸ்தபாவும் இணைந்துள்ளார்.

ஒரு வர்த்தமானி அறிவித்தல்மூலம் தனியான சபை வழங்குவதுக்குரிய அனைத்து அதிகாரத்தினையும் கொண்டுள்ள உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களுக்கு முஸ்லிம் காங்கிரசை விமர்சிக்க என்ன தகுதி இருக்கின்றது? தனது தவறுகளை மூடி மறைப்பதற்காக மற்றவர்கள் மீது பழி போடுகின்றார்.

உண்மையில் சாய்ந்தமருதுக்கு தனியான சபை வழங்குவது ஒன்றும் பெரிய விடயமல்ல. ஆனால் அவர் சூழ்ச்சிக்காரர்களுடன் சேர்ந்துகொண்டு, இதனை ஒரு பிரச்சினையாக மக்களுக்கு காண்பித்து முஸ்லிம் காங்கிரசினை அழிப்பதற்கான காய்நகர்த்தல்களை மேற்கொண்டு வருகின்றார் என்பது அவரது நேற்றைய உரையின்மூலம் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கின்றது.

எனவே, பொதுக்கூட்டத்துக்கு மக்களை திரட்டுவதற்காக பைசர் முஸ்தபா என்னும் பெயர் விளம்பரப்படுத்தப்பட்டது. இந்த அரசியல் சித்துவிளையாட்டுக்களை அறிந்திராத பாமர மக்கள், உள்ளூராட்சி மாகானசைபைகள் அமைச்சர் வந்து தங்களுக்கு தனியான சபையினை பிரகடனம் செய்யப்போகின்றார் என்ற நம்பிக்கையில் பொதுக்கூட்டத்தினை பார்க்க சென்றார்கள். ஆனால் அந்த அப்பாவி மக்களுக்கு கிடைத்தது பிரதேசசபையல்ல. வெறும் ஏமாற்றமே. 14656360_1452356491447208_7227950542423116478_n

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *