புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கவுள்ள நிலையில், இந்த அமைச்சரவை ஆச்சரியத்துக்குரிய ஒன்றாக இருக்க வாய்ப்பில்லை என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
காலை 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் புதிய அமைச்சரவை நியமனங்கள் இடம்பெறவுள்ளன. அந்த வகையில், புதிய அமைச்சர்கள் மற்றும் அவர்களுக்கான துறைகள் பற்றிய இறுதிப் பட்டியல் இன்று ஜனாதிபதிடம் கைளிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியினால் இந்த இறுதிப்பட்டியல் கையளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதிய அமைச்சரவையில் பெரியளவிலான மாற்றங்கள் இருக்காது என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
அரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வைத்திருந்த அமைச்சுக்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஏனைய உறுப்பினர்களிடம் பகிர்ந்தளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், விலகிச் சென்றவர்கள் மீண்டும் அமைச்சரவையில் இணைந்து கொள்ளும் சாத்தியங்கள் இல்லை. அவர்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர முடிவு செய்துள்ளனர் என ஜனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த அமைச்சரவை மாற்றத்தின் போது சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு பதவி குறித்து அதிகம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, புதிய அமைச்சரவை மாற்றத்தின் போது சட்டம் ஒழுங்கு அமைச்சை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு வழங்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி விருப்பம் கொண்டிருப்பதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.