Breaking
Tue. Nov 26th, 2024
இஸ்ரேலில் அமைந்துள்ள அமெரிக்க தூதுவராலயத்தை, புனித பூமியான ஜெரூஸலத்துக்கு மாற்ற அந்நாட்டின் புதிய ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் மேற்கொள்ளும் முயற்சிக்கு, இலங்கை முஸ்லிம்கள் தமது எதிர்ப்பினை ஜனநாயக ரீதியில் வெளிப்படுத்த வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள் விடுத்தார்.

அதேவேளை, இந்த விடயம் தொடர்பாக சிவில் அமைப்புக்கள், இயக்கங்கள் தமது நிலைப்பாட்டை இலங்கையில் அமைந்துள்ள அமெரிக்க தூதுவராலயத்துக்கு தெரியப்படுத்துவதன் மூலம் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது:

பாலஸ்தீன மக்கள் கடந்த காலங்களில் எதிர்நோக்கிய பல்வேறு பிரச்சினைகளின் போதும் இலங்கை முஸ்லிம்கள் அது தொடர்பில் விழிப்புணர்வுடன் இருந்து அதற்கு எதிராக குரல் எழுப்பியிருந்தனர். அந்தவகையில், தற்போது அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனல்ட் டிரம்ப், இஸ்ரேலில் அமைந்துள்ள அமெரிக்க தூதுவராலயத்தை புனித பூமியான ஜெரூஸலத்துக்கு மாற்ற திட்டமிட்டுள்ளதுடன் அதற்கான முயற்சிகளை சர்வதேசத்தின் எதிர்ப்பினை மீறி அவர் மேற்கொண்டு வருகின்றார்.

உலக முஸ்லிம்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே இவ்வாறான திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இது குறித்து இலங்கை முஸ்லிம்கள் கவனமாகவும் ; நிதானமாகவும் செயற்பட வேண்டும். இருப்பினும். இந்த நடவடிக்கைக்கு எதிராக தமது நிலைப்பாட்டை ஜனநாயக ரீதியில் வெளிப்படுத்த வேண்டும்.

தமது எதிர்ப்புக்களை எழுத்து மூலமோ அல்லது வேறு வகையிலோ இலங்கையில் அமைந்துள்ள அமெரிக்க தூதுவராலயத்துக்கு அனுப்பி வைப்பதன் மூலம் இந்த விடயத்தில் இலங்கை முஸ்லிம்களின் வகிபாகத்தை எடுத்துக்காட்ட முடியும்.

இந்த விடயம் குறித்து சிவில் அமைப்புக்களும், இயக்கங்களும் தமது எதிர்ப்புக்களை வெளிப்படுத்துவதுடன், அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்பின் தீர்மானத்தின் பாதிப்புக்கள் என்ன என்பது தொடர்பில் சமூகத்தை தெளிவுபடுத்த வேண்டும்.

இஸ்ரேலின் தலைநகரான டெல் அவிவ்வில் 1960 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா தூதுவராலயம் இயங்கி வருகின்றது. இதனை ஜெரூஸலத்துக்கு மாற்றுவதன் மூலம் ஜெரூஸலத்தை இஸ்ரேலின் தலைநகராக்கும் முயற்சிக்கு டிரம்ப் தனது முழு ஆதரவினையும் வழங்கி வருகின்றார்.

கிழக்கு மற்றும் மேற்கு ஜெரூஸலத்திலுள்ள இஸ்ரேலின் ஆதிக்கத்தை சர்வதேசம் ஏற்றுக்கொள்ளவில்லை. இதன் காரணமாக அங்கு எந்தவொரு நாடும் தமது தூதுவராலயங்களை அமைக்கவுமில்லை. அவ்வாறு அமைத்திருந்தால் அது சர்வதேச சட்டத்தையும், ஐ.நா. பாதுகாப்பு சபையின் 478ஆவது தீர்மானத்தை மீறிய செயலாக அமையும்.

ஆனால், அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் அனைத்தையும் மீறி அங்கு அமெரிக்க தூதுவராலயத்தை அமைக்க முற்படுவது சர்வதேச சட்டத்தை மீறுவது மட்டுமல்லாது, பாலஸ்தீனர்களின் உரிமையையும், சுதந்திரத்தையும் மீறும் செயலாகும்.

1967ஆம் ஆண்டு முதல் இஸ்ரேல் அரசு, ஜெரூஸலத்தை யூத நகராக தனிப்பட்ட ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர முயற்சிக்கின்றது. பாலஸ்தீனர்களின் சனத்தொகையை குறைப்பதற்காக அங்கு யூத செயற்பாடுகளையும் அதிகரித்துள்ளது.

அமெரிக்கா தடைகளை மீறி ஜெரூஸலத்தில் தூதுவராலயம் அமையும் பட்சத்தில், பாலஸ்தீனத்தில் வலது சாரி யூதர்களின் அத்துமீறிய குடியேற்றங்கள் அதிகரிக்கும். அதேவேளை, புனித அல் அக்ஸா வளாகத்துக்குள் யூத ஆக்கிரமிப்புக்கள் மென்மேலும் அதிகரிக்கும். இதனால், அப்பிரதேசத்தில் அச்சநிலை தொடரும் – பிரச்சினைகள் அதிகரிக்கும். என அவர் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *