(சுஐப் எம். காசிம்)
இலங்கை முஸ்லிம்களுக்கு இன்னல்களும், பிரச்சினைகளும் ஏற்படும் போது, அரபுவுலக நாடுகளும், முஸ்லிம் நாடுகளும் கைகொடுத்து உதவுமென்று நாம் நம்பிக்கை கொண்டிருப்பது மடைமைத்தனமானதெனவும், றோகிங்யோ முஸ்லிம்களின் அவலங்கள் நமக்கு நல்ல படிப்பினையாக அமைந்துள்ளதெனவும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
திஹாரிய ஈமானிய அரபுக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா நேற்று காலை (15.10.2017) திஹாரியில் இடம்பெற்ற போது,
பிரதம அதிதியாக கலந்துகொண்ட அமைச்சர், பட்டம் பெறும் மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் நினைவுச்சின்னங்களையும் வழங்கினார்.
அரபுக்கல்லூரி அதிபர் மௌலவி என்.எல். நிஸ்தார் (இஹ்ஷானி) தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர் உரையாற்றும் போது கூறியதாவது, முஸ்லிம் நாடுகள் வளமாகவும், பலமாகவும் இருக்கின்ற அதேவேளை, உலக நாடுகளில் சிறுபான்மையாக வாழும் நமது சமூகத்தவர்களுக்கு, பிரச்சினைகள் ஏற்படும் போது அவர்கள் தட்டிக்கேட்பார்கள் என்று எவரும் எதிர்பார்க்கவேண்டாம். அவ்வாறான ஆளுமையும், துணிவும் இந்த நாடுகளுக்கு இருந்திருந்தால், றோஹிங்யோவில் குத்தப்பட்டும், குதறப்பட்டும், குற்றுயிராக அகதிகளாக விரட்டி அடிக்கப்பட்டுகொண்டிருக்கும் முஸ்லிம்களுக்கு என்றோ, விடிவு கிடைத்திருக்கும்
அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற சதிகாரர்களின் ஆலோசனைகளுடன் இன்று உலகமெல்லாம் அழிவுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
முஸ்லிம் நாடுகளுக்கிடையே திட்டமிட்டு பிளவுகளும், பிரிவினைகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன. அதேபோன்று ஒரே நாட்டுக்குள்ளே பிரச்சினைகள் உருவாக்கப்பட்டு சமூகங்களை மோதவிடும் மிகப்பெரிய கைங்கரியம் இன்று இடம்பெற்று வருகின்றது.
இந்தவகையில், இலங்கை முஸ்லிம்களாகிய நாம் மிகவும் கவனமாகவும், நிதானமாகவும் நடந்து கொள்ளவேண்டும். மார்க்க ரீதியிலோ கொள்கை ரீதியிலோ பிளவுண்டு நமது ஒற்றுமைக்கு நாமே வேட்டுவைத்து நமக்கிடையே மோதிக்கொள்வதை தவிர்த்துக்கொள்ளவேண்டும்.
சமூதாய ஒற்றுமையை குலைக்க எவரும் துணையோக கூடாது.
சமூகம் சார்ந்த பல்வேறு கட்சிகள் அரசியல் செய்கின்ற போதும் சமூதாயத்திற்கு பிரச்சினை என்று வரும் போது, அவர்கள் தமது பேதங்களை மறந்து ஒன்றுபட்டு செயலாற்றியிருப்பது கடந்தகால வரலாறு. தற்போதும் அவ்வாறுதான் செயல்படுகின்றனர். இலங்கைப் பிரஜை ஒருவர் எந்தக் கட்சியிலும் உறுப்புரிமை கொண்டிருக்கலாம், எவருக்கும் வாக்களிக்கலாம், தான் விரும்பிய எவருக்கேனும் பிரச்சாரம் செய்யமுடியும். ஒருவரின் வாக்குரிமை உட்பட அடிப்படை உரிமைகளில் கைவைக்க எந்தச்சட்டத்திலும் இடமில்லை.
அரசியலமைப்பு சட்டத்தில் இது தெளிவாக கூறப்பட்டுள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கு நமது சமூகம் பாரிய பங்களிப்பை நல்கியுள்ளது. உலமாக்கள் கல்விமான்கள், தாய்மார்கள், பெட்டிக்கடை வியாபாரிகள், தேநீர்க் கடை வியாபாரிகள், நாட்டாண்மை என்ற பேதங்களின்றி, எல்லோரும் ஒன்றுபட்டு கடந்த ஆட்சியை மாற்றுவதற்கு தமது முழு நேர பங்களிப்பையும் நல்கி மாற்றத்தை உருவாக்கியதை எவரும் இலகுவில் மறந்துவிடமுடியாது.
அதுமட்டுமன்றி, சொத்துக்கள், பணம் மற்றும் நேர காலம் பாராமல் அனைத்தையும் நாம் செலவழித்திருக்கின்றோம். தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் ஆட்சிக்கு வருவோம் என கனவிலும் நினைத்திராத இப்போதைய ஆளுங்கட்சிக்காரர்கள் ஆட்சிக் கட்டிலுக்கு வருவதற்கு நாம் வழங்கிய பங்களிப்பை அவர்கள் கொச்சைப்படுத்தக்கூடாது.
எனினும், இரண்டு வருடகாலமாக ஆட்சியாளர்களின் நடவடிக்கையில் முஸ்லிம் சமூகத்திற்கு குறிப்பிடத்தக்க நன்மைகள் கிடைக்காமை வேதனையளிக்கின்றது.
இருந்தபோதும் நாம் அனைவரும் இணைந்து, இத்தனை கஷ்டங்களுக்கு மத்தியில் கொண்டுவந்த இந்த ஆட்சியை புரட்டவேண்டுமெனவும் ஆட்சியிலிருந்து நாம் வெளியேறவேண்டுமென்றும்; நம்மில் சிலர் குரல் எழுப்புவதை காணக்கூடியதாக இருக்கின்றது. இந்தக்கோரிக்கை சமூகத்திற்கு எத்தகைய பயனை அளிக்கும் என்பதை நாம் சிந்திப்பதற்கும் கடமைபட்டிருக்கின்றோம்.
அரசியலமைப்பு மாற்றத்தைக் கொண்டுவரவேண்டுமென்று துடியாய்த் துடிக்கும் இந்த அரசு சகல சமூகத்தவருக்கும் பாரபட்சமின்றி செயற்படவேண்டும் என நாம் வலியுறுத்துகின்றோம்.
மத்ராசாக்களின் வளர்ச்சியை நாம் குறைவாகவோ, குறையாகவோ எடைபோடக்கூடாது. அவற்றின் வளர்ச்சியும் உலமாக்களின் எண்ணிக்கை அதிகரிப்பும் அவர்களது நல்ல செயற்பாடுகளும் இஸ்லாமியர்களின் மத்தியிலிருந்த பல மூடநம்பிக்கைகளை தகர்த்துள்ளது. இஸ்லாமிய விரோத செயற்பாடுகளை இல்லாமலாக்கியுள்ளது.
மொத்தத்தில் நமது சமூகத்தில் கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது பாரிய மாற்றத்தை உணருகின்றோம் உலமாக்கள் வெறுமனே, மார்க்க பிரசங்கிகளாகவும் வழிகாட்டுபவர்களாகவும், போதனை செய்பவர்களாகவும் இருக்கவேண்டுமென்ற நிலை மாறி அவர்கள் துறைசார் விடயங்களில் நிபுணத்துவம் பெறுவது காலத்தின் கட்டாயமாகும். இதுவே சமூகத்திற்கு மிகவும் ஆரோக்கியமான நன்மைகளை ஏற்படுத்துமென உறுதியாக நம்புகின்றோம். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் தொழில் அதிபர் முஸ்லிம் ஹாஜியார் உட்பட கல்விமான்கள், வைத்தியர்கள், தர்மகர்த்தாக்கள் என பலர் கலந்துகொண்டனர்.