Breaking
Sun. Nov 24th, 2024

தாயை பறிகொடுத்த துயரத்திலும், ஏக்கத்திலும் அனாதைகளாகிப் போன ஆனந்த சுதாகரனின் குழந்தைகளின் நலனைக் கருத்திற்கொண்டு, சிறையில் வாடும் ஆனந்த சுதாகரனை கருணை அடிப்படையில், பொதுமன்னிப்பு வழங்கி, உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அத்துடன், பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி நாடு திரும்பியவுடன், அவரை சந்தித்து இதுதொடர்பில் அமைச்சர் பேசவும் உள்ளார்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது,

கடந்த யுத்த காலத்தின் போது, அரசுக்கெதிராக ஆயுதம் தூக்கிப் போராடியவர்கள் மாத்திரமின்றி, அப்பாவித் தமிழர்களும் சிற்சில காரணங்களுக்காக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். திட்டமிட்டு தவறு செய்தவர்களும், எதுவுமே அறியாமல் தப்பு செய்தவர்களும் இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் வாடுகின்றனர்.

யுத்த முடிவுக்குப் பின்னரான சமாதானம் ஏற்பட்ட பின்னர், விடுதலைப் புலிகளின் அநேகருக்கு அரசு பொதுமன்னிப்பு வழங்கி, புனர்வாழ்வளித்து விடுதலை செய்தது. அவர்கள் தற்போது தமது இயல்பு வாழ்க்கையை ஆரம்பித்து, சமூகத்தின் பிரஜைகளாக வாழ்ந்து வருகின்றனர்.

அந்தவகையில், கிளிநொச்சியைச் சேர்ந்த தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரும், ஏதோ காரணங்களுக்காக கடந்த பத்து வருடங்களாக சிறையில் வாடுகின்றார். அவரது மனைவியும் தற்போது இறந்துவிட்ட நிலையில், எதுவும் அறியாத 09 வயதுடைய ஆண் பிள்ளையும், 11 வயதான பெண் பிள்ளையும் தாயும், தந்தையுமின்றி அனாதைகளாக்கப்பட்டு நிற்கதியாகியுள்ளனர்.

எனவே, இந்தக் குழந்தைகளின் துயர் கருதி, அவர்களது தந்தையை விடுதலை செய்ய நடவடிக்கை எடுங்கள் என்று அமைச்சர் ரிஷாட், ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *