Breaking
Mon. Nov 25th, 2024

(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை)

அண்மையில் கொண்டு வரப்பட்ட இருபதாம் சீர் திருத்தம் தொடர்பில் வடக்கும் கிழக்கும் முற்றிலும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்துள்ளன. வடக்கு இருபதாம் சீர் திருத்தத்துக்கு எதிராகவும் கிழக்கு ஆதரவாகவும் செயற்பட்டுள்ளது. இங்கு சில விடயங்களை ஒப்பீட்டளவில் சுட்டிக்காட்டுவது பொருத்தமாக அமையும் என கருதுகிறேன்.

வடக்கு மாகாண சபை இருபதாம் சீர் திருத்தத்தை முற்றாக நிராகரித்திருந்தது. இதன் போது மீள ஏதேனும் திருத்தம் வந்தால் பார்ப்போம் என்ற பதிலையும் அளித்திருந்தது. கிழக்கு மாகாண சபையானது இருபதாம் சீர் திருத்தத்தில், அரசால் ஏலவே முன் மொழியப்பட்ட வரைபின் திருத்தம் உத்தியோக பூர்வமாக வெளியாகாத நிலையில் அதனை ஐக்கிய தேசிய கட்சியிடம் இருந்து பெற்று நிறைவேற்றிக்கொடுத்துள்ளது. இந்த திருத்தப்பட்ட வரைவை எடுப்பதும், ஆராய்வதும் வடக்கு முதலமைச்சருக்கு கடினமான விடயமல்ல. அது முறையல்ல.

உத்தியோகபூர்வமாக இது தான் திருத்தப்பட்ட வரைவு என எதுவும் வெளியாக நிலையில் அதனை ஏதோ ஒரு வழியில் பெறுவது, அது தொடர்பில் விழிப்புணர்வுடன் செயற்பட பயன்படுத்தலாமே தவிர, அது தொடர்பில் தீர்க்கமான முடிவை எடுப்பது அறிவுடமையாகாது. ஒரு உயரிய சபையில் உத்தியோக பூர்வமற்ற விடயங்களை பற்றி பேசி முடிவெடுக்க முடியாது. அது முறையுமல்ல. இப்படி வந்தால் ஆதரிப்போம், அப்படி வந்தால் எதிர்ப்போம் என கூறி விளையாடுவதானால் கிழக்கு மாகாண சபையில் உள்ள உறுப்பினர்கள் வேலை வெட்டி இல்லாதவர்களாக இருக்க வேண்டும். எத்தனையோ பேர் எத்தனயோ முன் மொழிவுகளை முன் வைப்பார்கள். அத்தனைக்கும் இப்படி வந்தால் ஆதரிப்போம் என கிழக்கு மாகாண சபையினால் கூற முடியுமா?

இங்கு மு.கா, அரசை ஏதோ ஒரு வழியில் திருப்தி செய்ய வேண்டும். அதற்கு இந்த வரைபை பயன்படுத்தியுள்ளது. ஏற்கனவே அரசால் முன் மொழியப்பட்ட வரைபை நிறைவேற்றினால், சிறுபான்மையின மக்களின் கடும் எதிர்ப்பை சம்பாதிக்க நேரிடும். அதற்கு ஒரு போதும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஆதரவளித்திருக்காது. இவற்றுக்கு தீர்வு மிக உன்னிப்பாக சிந்திக்காதவர்களை ஏமாற்றக் கூடிய பிந்திய திருத்தப்பட்ட வரைபை நிறைவேற்றிக்கொடுப்பதாகும். இதன் மூலம் அரசை திருப்தி செய்வதோடு மக்களையும் ஏமாற்றிக்கொள்ள முடியும். இந்த நிலைப்பாட்டில் உள்ளவர்கள் நிச்சயம் ஏலவே கொண்டுவரப்பட்ட இருபதாம் சீர் திருத்தம் திருத்தப்படாமல் வந்திருந்தாலும் ஆதரித்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. அதற்கும் முயன்றதாக கதைகள் உள்ளன.

இன்னும் சில மாதங்களில் இலங்கை அரசியலமைப்பின் திருத்தப்பட்ட வரைவுகள் வெளி வரவுள்ளன. ஒரு சிறிய மாற்றம் பாரிய விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய இவ் விடயத்தை, இவர்களை நம்பி இவற்றை ஒப்படைக்க முடியுமா என்பதை முஸ்லிம்கள் சிந்தித்துக்கொள்ள வேண்டும்.

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் வடக்கு முதலமைச்சர் முரண்பட்டுள்ள விடயம் யாவரும் அறிந்ததே. இந்த விடயத்தின் மூலம் வடக்கு மாகாண சபையானது முதலமைச்சர் விக்னேஸ்வரனின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளமை தெளிவாகிறது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *