Breaking
Thu. Nov 21st, 2024
(எம்.ரீ. ஹைதர் அலி)
காத்தான்குடி கடற்கரை ஓரமாக இருக்கின்ற காத்தான்குடி மெரீன் வீதியின் செப்பனிடப்படுகின்ற பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்த நிலையிலே இன்று பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் அழைப்பிதல் ஒன்றினை எங்களுக்கு பார்க்க கிடைத்தது. அந்த வகையிலே மக்களுக்கு தெளிவுகளை கூற வேண்டிய கடமைப்பாடு எங்களுக்கு இருக்கின்றது.

காத்தான்குடி மெரீன் வீதி என்பது கிழக்கு மாகாண சபைக்கு உட்பட்டதாகவும் வீதி அபிவிருத்தி தினைக்களத்தினுடைய பராமரிப்பில் இருக்கின்ற வீதியுமாகும். இவ்வீதியினை முற்று முழுதாக செப்பனிடுவதற்குரிய எல்லா வகையான ஆயத்தங்களையும் நாங்கள் ஏற்பாடுகளையும் செய்து முதற்கட்டமாக மாகாண சபை நிதியினூடாக ரூபா 1 கோடி நிதி ஒதுக்கப்பட்டு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு 5 மீட்டர் அகலமான கொங்றீட் வீதியாக மாற்றுவதற்குரிய வேலைகள் இடம் பெற்று கொண்டிருக்கின்றன.
தொடர்ச்சியாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியோடு ஐ றோட் (I Road) திட்டத்தினூடாக அவ்வீதி காபட் வீதியாக அபிவிருத்தி செய்யப்பட இருக்கின்றது. இவ்வாறு இருக்கையில் எங்களுக்கு காணக்கிடைத்த அழைப்பிதழில் குறித்த விதியானது அபிவிருத்தி செய்யப்படுவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்படுள்ளது. ABC கலவையினை இட்டு அதன்மேல் கொங்றீட் கற்கள் போடப்பட்டு தார் ஊத்துகின்ற பணியே தவிர அதனை காபட் வீதியாகவோ அல்லது கொங்றீட் வீதியாகவோ மாற்றுகின்ற வேலைதிட்டம் கிடையாது என்பதனை சுட்டிக்காட்ட விரும்புவதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாரூக் தெரிவித்தார்.
மேலும் தனது கருத்தினை தெரிவித்த பொறியியலாளர் ஷிப்லி பாரூக் ஐ றோட் திட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு இன்னும் 7 அல்லது 8 மாத காலம் இருக்கின்ற காரணத்தினால் அந்த காலகட்டத்திற்குள் இவ்வாறான பராமரிப்பு என்கின்ற விடையத்தின் கீழ் ABC கலவையினை கொண்டு பள்ளங்கள் நிரப்பப்பட்டு கற்கள் இட்டு தார் ஊத்தப்படுகின்ற போது மக்கள் பாவனைக்கு அந்த வீதியானது இலகுவாக அமையும் என நம்புகிறோம். அதனை நாங்கள் ஒரு பொழுது எதிர்க்க போவதும் கிடையாது. இன்ஸாஅல்லாஹ் மிக விரைவில் அதனை நாங்கள் முற்று முழுதாக காபட் வீதியாக மாற்றுகின்ற அந்த செயற்பாடு ஆரம்பிக்கப்படும் என்பதனை நம்பிக்கையுடன் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.
அதே நேரத்தில் நாங்கள் 6 கோடி 10 இலட்சம் செலவில் டெலிகொம் வீதியினை அபிவிருத்தி செய்வதற்கும் மஞ்சன்தொடுவாய் ஹிஸ்புல்லா வீதியினை அபிவிருத்தி செய்வதற்காக 3 கோடி 60 இலட்சம் ரூபாய்களுக்கான ஒப்பந்தங்களையும் செய்திருந்தோம். துரதிஸ்டவசமாகவும், அரசியல் காற்புணர்ச்சியின் காரணமாகவும் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவிருந்த நிலையிலும் வீதியினை அபிவிருத்தி செய்யக்கூடாது என்ற அழுத்தத்தின் ஊடாக டெலிகொம் வீதி அல்லது மஞ்சன் தொடுவாய் வீதி என இரண்டில் ஒன்றை மாத்திரம்தான் அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற அழுத்தம் கொடுக்கப்பட்டு நாங்கள் ஒப்பந்தங்கள் செய்திருந்தும் மஞ்சன்தொடுவாய் ஹிஸ்புல்லா வீதியினை இடை நிறுத்தி வைக்குமாறு எங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.
இது மாத்திரமல்லாமல் கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்பும் காத்தான்குடி பாத்திமா பாலிகா பெண்கள் பாடசாலைக்காக 55 இலட்சம் ரூபாய்களை நாங்கள் கொண்டு வந்திருந்தும் கூட குறிப்பிட்ட பாடசாலை கட்டிடம் அமைய இருந்த அரச காணியானது தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான காணி என கபளீகரம் செய்து அதற்கான பொய்யான காணி உறுதி முடிக்கபட்டது மட்டுமல்லாமல் குறித்த கட்டிடம் அமைய இருந்த காணிக்கு பூட்டுக்களை போட்டு தடையினை ஏற்படுத்தி இருப்பதனால் எங்களுக்கு அதனை சட்ட ரீதியாக அனுக வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. சட்ட ரீதியான முறையில் கையாளும் பட்சத்தில் அதற்கு அதிக காலம் எடுக்கும் என்ற படியினால் அதற்கான நிதி திரும்பி விட அதிக வாய்ப்பிருக்கின்ற காரணத்தினால் குறித்த 55 இலட்சம் ரூபாய்களையும் வேறு பணிகளுக்காக செலவிட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகி இருக்கின்றோம்.
அபிவிருத்தி பணிகளை யார் கொண்டு வந்தாலும் அரசியல் காழ்புணர்ச்சிக்கு அப்பாற்பட்டு நாங்கள் அதனை அனுமதிக்கின்ற மனோ நிலையினை வளர்த்து கொள்ள வேண்டும். ஓவ்வொரு வயதினையும் தாண்டி செல்கின்ற பொழுது நல்ல சிந்தனை உள்ளவர்களாகவும் எங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். அப்படி அன்றி குரோத மனப்பாங்கையும் குறுகிய மனப்பான்மையுடன் சிந்திக்கின்ற தன்மையிலிருந்து தங்களை முடியுமான வரை மாற்றிக்கொள்ள வேண்டும்.
எவராக இருந்தாலும் காத்தான்குடியினை அபிவிருத்தி செயவதற்கு முன்வருபவர்களுக்கு நாங்கள் எப்பொழுதும் உறுதுணையாக இருக்க தயாராக இருக்கின்றோம். இந்த மன நிலையினை மற்றவர்களும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என ஆசைப்படுகின்றோம்.
குறித்த மெரீன் வீதி அபிவிருத்தி செய்யப்படுகின்ற நல்ல திட்டத்திற்கு வெறுமனே அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக அதனை முடக்குகின்ற அல்லது இல்லாமல் செய்கின்ற விடயத்திற்கு அப்பாற் சென்று அதனை நல்ல முறையில் அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவை இருக்கின்றது. ஆகவே குறித்த விடயத்தினை உணர்ந்து செயற்படுவதுடன் அதனை அரசியலாக மாற்றாது அபிவிருத்தியாக பார்ப்பதே சிறந்த விடயம் என்பதனை தனது அறிக்கையில் தெளிவாக உணர்த்தியுள்ளார் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாரூக்.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *