வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து அமைச்சின் அமைச்சர் பா.டெனிஸ்வரன் தலைமையில் நேற்று 27-05-2016 வெள்ளி காலை 11.30 மணியளவில் மன்னாரில் உள்ள அமைச்சர் உப அலுவலகத்தில் மேற்படிக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இவ் அபிவிருத்தித் திட்டக் கலந்துரையாடலில் குறிப்பாக அமைச்சரின் 2016 ஆம் ஆண்டிற்கான பிரமாண அடிப்படையிலான அபிவிருத்தி நன்கொடை (CBG) நிதியின் கீழ் வழங்கவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பாகவே இது இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலுக்கு அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், அமைச்சின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஈ.சுரேந்திரனாதன், அமைச்சின் பிரதம கணக்காளர் தர்மாம்பிகை அனந்தக்கிருஷ்ணன், வீதி அபிவிருத்தி திணைக்கள மாகாணப் பணிப்பாளர் டி.சிவராஜலிங்கம், வீதி அபிவிருத்தித் திணைக்கள மன்னார் வவுனியா பிரதம பொறியியலாளர் எஸ்.ரகுநாதன், மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் சுகந்தி செபஸ்டியன், அமைச்சின் உத்தியோகத்தர்கள், மன்னார் மாவட்டத்தின் பல பாடசாலைகளின் அதிபர்கள், கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளின் அதிபர்கள், மீன்பிடி சங்கங்களின் பிரதிநிதிகள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், ரோமன் கத்தோலிக்க தேவாலயங்களின் பிரதிநிதிகள், கிறிஸ்தவ தேவாலய பிரதிநிதிகள், இந்து ஆலயங்களின் பிரதிநிதிகள், பள்ளிவாசல் தலைவர்கள் மற்றும் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகிய தெரிவுசெய்யப்பட்ட அனைத்து அமைப்பினரும் கலந்துகொண்டனர்.
குறிப்பாக, பாடசாலைகளின் பௌதீக வழ அபிவிருத்திகளுக்கும், கிராம மட்ட அமைப்புக்களான கிராம/மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களின் அபிவிருத்திக்கும், மின்சார இணைப்பிற்கான உதவிகளும், சுயதொழில் வாய்ப்பிற்கான உதவிகளும், குளப் புனரமைப்பிற்கும், மீன்பிடி சங்கங்களின் பௌதீக வழ அபிவிருத்திகளுக்கும், சமய பேதங்கள் இன்றி மன்னார் மறைமாவட்ட ரோமன் கத்தோலிக்க மதத் தலங்களுக்கும், மன்னார் மாவட்ட போதகர் ஐக்கியத்திற்கும், மன்னார் மாவட்ட மெதடிஸ்த தேவாலயங்களுக்கும், இந்து ஆலயங்களுக்கும், முஸ்லிம் பள்ளிவாசல்களுக்கும் அவற்றின் பௌதீக வழ மேம்பாட்டிற்கும், கணினி மற்றும் பல்லூடக சாதனங்களுக்கும் இன்னும் பல வேலைத் திட்டங்களுக்குமென அமைச்சர் அவர்கள் பல மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கி வேலைத்திட்டங்களை வழங்கியுள்ளமையும் அறியமுடிகின்றது.
இந்த சந்தர்ப்பத்தில் அமைச்சர் தனது கருத்தை தெரிவிக்கும்போது மேற்படித் திட்டங்களுக்கு தெரிவுசெய்யப்பட்ட அமைப்புக்கள் உடனடியாக கால தாமதமின்றி தமது ஒதுக்கீடுகளுக்கான சகல வேலைத்திட்டங்களையும் நிறைவு செய்து பயனடையுமாறும், அதே வேளை அமைச்சின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு மேற்ப்படி வேலைத் திட்டங்களை விரைவாக இரண்டு மாத காலத்திற்குள் நிறைவு செய்து கொடுக்குமாறும் பணிப்புரை வழங்கினார். அத்தோடு இத்திட்டங்களை விரைவாக நடைமுறைப்படுத்தும்போது நிச்சயமாக இன்னும் பல நிதி மூலகங்களை தெரிவு செய்து இன்னும் பல அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்தி நமது மாகாணத்தை அபிவிருத்திப்பாதையில் கொண்டுசெல்ல முடியுமெனவும் அதே வேளை கடந்த கால ஒதுக்கீடுகளில் நிதி ஒதுக்கப்படாத ஏனைய தேவைகள் உள்ள அமைப்புக்களுக்கும் அடுத்த ஆனடுக்ளின் நிதி ஒதுக்கீட்டில் இன, மத பேதமின்றி நிதி ஒதுக்கப்பட்டு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும், இவ்வாறான வேளையிலே அனைத்து மக்களும் சகல பேதங்களையும் மறந்து ஒற்றுமைப்பட்டு நமது மாகாணத்தின் அபிவிருத்தியில் ஒவ்வொரு மக்களும் கரிசனையோடு நடக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.