Breaking
Mon. Nov 25th, 2024

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் தான் தூங்கியதாக ஊடகங்களில்  வெளியான செய்திகளை முற்றிலும் மறுப்பதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

குறித்த செய்தியில் எந்த உண்மைத்தன்மையும் இல்லை என தெரிவித்து,  ஊடகங்களுக்கு அனுப்பப்பியுள்ள  மறுப்பறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரவித்துள்ளார்.

கடந்த 02/06/2016அன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில், இணைத்தலைவர்களான வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன், அமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் ஆகியோரின் தலைமையில் மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம்  இடம்பெற்றது.

குறித்த கூட்டத்தில் முல்லைத்தீவு வைத்தியசாலை காணி தொடர்பாக நீண்டகாலமாக இடம்பெற்று வரும் சர்ச்சைகள் குறித்து, நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டு அதற்கான உரிய தீர்வும் பெறப்பட்டது.

பின்னர் அடுத்த நிகழ்ச்சி நிரல் பற்றி கலந்துரையாடப்பட்ட போது, திடீரென குரல் கொடுத்த மஸ்தான் எம்.பி, காணிப் பிரச்சினைக்கு என்ன நடந்தது? என வினவியதால் கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகளும், அரசியல் முக்கியஸ்தகர்களும் பெரிய சத்தத்துடன் கொல்லெனச் சிரித்தனர்.

அப்போதுதான் தெரிய வந்தது, இவ்வளவு நேரமும் இணைத்தலைவர் மஸ்தான் எம்.பி தூங்கி வழிந்திருக்கிறார் என்றும், பொறுப்பான கூட்டம் ஒன்றில், பொறுப்பு வாய்ந்த தலைவர் ஒருவரின் இலட்சணமா இது? என பல தேசிய இலத்தரனியல் மற்றும் அச்சு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

சம்பவம் தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் அவரால் அனுப்பப்பட்டுள்ள ஊடக மறுப்பறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கூட்டத்தில் நீண்ட நேரமாக முல்லைத்தீவு வைத்தியசாலை காணிப்பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடப்பட்டுக் கொண்டிருந்தவேளை தான் அங்கிருந்த வைத்தியர் ஒருவருடன் சிறிது நேரம் அது தொடர்பிலான மேலதிக தகவல்களை கேட்டுக்கொண்டிருந்ததால் சற்று குறித்த கலந்துரையாடலில் கவனம் செலுத்த முடியாமல் போனதாகவும், அதனாலேயே தான் அவ்வாறு கேட்டதாகவும், அதற்கு தான் வருந்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஊடகங்களில் வெளியான அளவிற்கு சபை அதிரும் வகையில்  அங்கு எதுவுமே இடம்பெறவில்லை எனவும் அங்கிருந்த ஏனைய இணைத்தலைவர்களும் வருகை தந்திருந்தவர்களும் தனக்கான கௌரவத்தை வழங்கினார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சில இணைய ஊடகங்களில் பா.உ மஸ்தான் முன்னிலையில் சட்ட விரோத மாடு கடத்தல் என செய்திகளும் வெளிவந்துள்ளன இவைகள் அனைத்தும் முற்று முழுதாக உண்மைக்கு புறம்பான செய்திகளாகும் என்றும் இவ்வாறான செய்திகள் தமக்கு மன வருத்தத்தை அளிப்பதாகவும் அவர் தனது மறுப்பறிக்கையில்  குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பில் எந்த ஊடகமும் தன்னை தொடர்புகொண்டு கேட்கவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும் தான் அரசியலுக்கு வேண்டுமானால் புதிதாக இருக்கலாம் என்றாலும் சமூக சேவைகளில் நாங்கள் பழமை வாய்ந்தவர்கள்தான் அதனாலேயே எந்த அரசியல் பின்புலமும் இல்லாத என்னை மக்கள் தேர்ந்தெடுத்தனர்  என்றும் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை தொடர்ந்தும் தாம்  நிறைவேற்றுவதாகவும் அவர் தெரவித்துள்ளார்.

ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் மதிக்கப்படவேண்டியவர்கள். எம்மை சமூகத்தில் அடையாளப்படுத்துவதும் அதனை இல்லாமல் செய்வதும் அவர்களது எழுத்துக்களில் தங்கியுள்ளது. ஆனாலும் சில அரசியல்வாதிகளின் பின்னுள்ள ஊடக பிச்சை வாங்கிகளால் எழுதப்படும் சில குறிப்புக்களால் இவ்வாறான தவறுகள் இடம்பெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் இனிவரும்காலங்களில் தன்மீதான இவ்வாறான பொய்ப்பிரச்சாரம் செய்யும் காழ்ப்புணர்ச்சி கொண்ட  அரசியல் அடிமை ஊடகவியலாலர்கள் மீது கடும் சட்ட  நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தாம் அரசியலுக்கு வந்தமை விஸ்தரிக்கப்பட்ட சமூக சேவைக்காகவும்,சமூகத்தில் நடக்கும் அநீதிகளை தட்டிக்கேட்கவும், நேர்மையான அரசியல் செய்யவுமே என ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள மறுப்பறிக்கையில்  அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கே.காதர் மஸ்தான் (பா.உ)
அபிவிருத்துக்குழு இணைத்தலைவர் 
(வவுனியா,மன்னார்,முல்லைத்தீவு)
முன்னைய செய்தியுடன் தொடர்புடைய செய்தி 
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *