பிரதான செய்திகள்

அபாயகரமான சமிக்கை எம்முன் கண்சிமிட்டி நிற்கிறது முன்னாள் அமைச்சர் அஸ்வர்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

கண்டிப்பது எமது கடன். ஆனால் தண்டனை விதிப்பது அரசாங்கத்தின் கடன். கண்டிப்பதை நாம் சரிவரச் செய்து வருகின்றோம். ஆனால் தண்டனை விதிப்பதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்கின்றது. இதனை அரசாங்கத்தில் உள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் தவறவிட்டு வருவது மிகவும் பயங்கரமான, அபாயகரமான ஒரு சமிக்ஞையாக எம்முன் கண்சிமிட்டி நிற்கின்றது என  முன்னாள் முஸ்லிம் விவகார அமைச்சரும் முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபருமான ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார்.

தொடராக முஸ்லிம் வர்த்தக ஸ்தாபனங்கள் மீது நடத்தப்படுகின்ற தாக்குதல் குறித்து விடுத்துள்ள அறிக்கையிலே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

சர்வதேச  யஹுதிப் பட்டாளத்தின் ஒரு பிரிவினர் இன்றும் இலங்கையில் தமது இறக்கைகளை விரித்திருக்கின்றார்கள் என்ற உண்மையை நாங்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அதன் சாயல்தான் முஸ்லிம் உடைமைகள், பள்ளிவாசல்கள் மீது நடத்தும் அட்டூழியங்கள் இப்பொழுது தொடராகப்படர்கின்றது. எனவே முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்படுகின்ற இந்த அநியாயத்தின் சூத்திரதாரர்களைக் கண்டுபிடித்து உடன் தண்டனை விதிக்க வேண்டியது இந்த அரசாங்கத்தினுடைய தலையாய கடமையாகும். இதனை முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் மேலும் காலதாமதம் செய்யாமல் தமது கடமையைச் சரிவரச் செய்வதற்கு உடனடியாக முன்வரவேண்டும் என நான் கண்டிப்பாகக் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.

இந்தப் புனித மாதத்தில் இப்படியான சம்பவங்கள் நடைபெறுவதை இந்த அரசாங்கம் தடுக்காமல் இருப்பது எமக்கு மட்டுமல்ல சர்வதேச முஸ்லிம் சமுதாயத்தின் கண்டனத்துக்கும் உரித்தாகின்றது. எனவே, இனரீதியாக பிரச்சினையைத் தூண்டி இந்த அரசாங்கத்தை அழிப்பதற்கு பலர் முயற்சி செய்து வருவதாக ஓர் அமைச்சர் கூறியுள்ளார். முஸ்லிம் மக்கள் மீதும் புனித தளங்கள் மீதும் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களைப் பார்க்கும் போது இன்று அரசாங்கத்தில் உள்ள இனவாதிகள்தான் இதற்கு பொறுப்பானவர்கள் என்பதை முஸ்லிம் அமைச்சர்கள் அறிய வேண்டும்.

எனவே இனவாதத்தைத் தூண்டுகின்ற ஓர் அரசாங்கத்தின் உறுப்பினர்களாக இருப்பது எவ்வளவு மடமைத்தனம் என்பதை இன்று முஸ்லிம் சமுதாயம் நன்கு உணர்ந்திருக்கின்றது.

எனவே பேச்சளவில்  தங்களுடைய கண்டனத்தை தெரிவிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல் செயலில் இறங்க வேண்டும் என மீண்டும் கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன்.

முஸ்லிம் மக்கள் சென்ற தேர்தலில் அளித்த வாக்குகளுக்கு அவர்களது பிரச்சினைளை நிறைவேற்றிக் கொடுப்பதற்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும்  கடமைப்பட்டுள்ளார்கள்.

சாக்குப்போக்கு சொல்லுவதன் மூலமும் உள்ளிருந்து கண்டங்களை விடுப்பதன் மூலம் மட்டும் நிறுத்திக்கொள்ளாது வெளியே இறங்கி கண்டனக் கணைகளை  நேரடியாக அரசின் பக்கம் திருப்புவதற்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இன்னும் காலந்தாழ்த்தாமல் முன்வரவேண்டும்.

அப்படி இல்லையேல் ஒட்டுமொத்தமாக அனைவரும் இராஜினாமாச் செய்து எதிரே வருகின்ற மஹிந்த ராஜபக்ஷவினுடைய அரசாங்கத்தில் சேர்ந்து முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக வேண்டி திட்டம் ஒன்றை தீட்டுவதற்கு அனைவரும் ஒன்று திரள வேண்டும் என மீண்டும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன் – என்றும் தெரிவித்துள்ளார்.

Related posts

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் பட்டதாரிகள் – பொலிஸார் இடையில் மோதல்

wpengine

திறப்பு விழாவில் அமைச்சர் றிஷாட்வுடன் பேசிய முன்னால் ஜனாதிபதி

wpengine

இந்தியாவிற்கு இலங்கையர்கள் செல்வது தடுக்கப்படும் நிலை ஏற்படும்!

wpengine