Breaking
Sun. Nov 24th, 2024

‘வில்பத்து சரணாலய’ வழக்கின் தீர்ப்பு வெளிவரும்போது, அதன் உண்மை நிலை வெளிப்படுவதோடு, இதனுடன் தன்னை தொடர்புபடுத்தி கூறப்பட்ட அபாண்டங்கள் அனைத்தும் பொய்யானவை என்பதும் வெளிச்சத்துக்கு வரும் என முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

‘வில்பத்து’ வனவள பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணி துப்புரவு செய்யப்பட்டு, மீள்குடியேற்றம் மற்றும் சட்டவிரோத நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தும், முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியுதீன் உட்பட இவற்றுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறும் கோரி, சூழல் நீதிக்கான மையம் தாக்கல் செய்த வழக்கின் மேலதிக விசாரணை இன்று காலை (19/02/2020) இடம்பெற்றது. இந்த வழக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 03 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படும் என நீதிமன்றில் அறிவிக்கப்பட்டது.

இந்த வழக்கின் பிரதிவாதிகளில் ஒருவரான முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியுதீன், நீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்தபோது மேலும் கூறியதாவது,

“1990 ஆம் ஆண்டு முசலிப் பிரதேசத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள், யுத்தமுடிவின் பின்னர், தாம் வாழ்ந்த பிரதேசங்களில் மீளக்குடியேற்றப்பட்டபோது, இந்தக் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. குறிப்பாக, முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலைக்குளி, மறிச்சுக்கட்டி, கரடிக்குளி ஆகிய கிராமங்களில் மீளக்குடியேறிய மக்கள் மீது இந்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட போது, வில்பத்துவை காடழித்துத்தான் வீடுகள் கட்டிக்கொடுத்ததாக, இனவாதிகள் என்மீது மிக மோசமான குற்றச்சாட்டுக்களை சுமத்தினர்.

இனவாத சூழலியலாளர்களும் இனவாத தேரர்களும் இந்த மக்கள் குடியேறிய பிரதேசங்களுக்கு வந்து, பிழையான தரவுகளையும் ஒளிப்படங்களையும் எடுத்து, தென்னிலங்கையில் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டனர். அப்பட்டமான பொய்களை திரும்பத்திரும்ப ஊடகங்கள் வாயிலாகவும் தென்னிலங்கை மேடைகளிலும் கூறி, என்மீது வீண்பழி சுமத்தினர். அப்பாவித் தென்னிலங்கை மக்களை நம்பச்செய்து, என்னை காடழிக்கும் ஒருவராகக் காட்டுவதற்கு பிரயத்தனங்களை மேற்கொண்டனர். இப்போதும் அதே பிரச்சாரத்தையே மேற்கொண்டு வருகின்றனர்” என்று கூறினார்.

இந்த மனு ஏற்கனவே விசாரிக்கப்பட்டு முடிவடைந்த பின்னர், தீர்ப்பு வழங்குவதற்கு திகதி குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நீதிபதி மஹிந்த அமயவர்தன தீர்ப்பு வழங்குவதற்கு தான் விரும்பவில்லையென, மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைவர் யசந்த கோடாகொடவுக்கு அறிவித்திருந்தார். இதனையடுத்து இந்த வழக்கினை மீண்டும் ஆரம்பத்திலிருந்தே, வேறு நிதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு, மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைவர் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், பிரதிவாதியான முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியுதீனின் தலையீட்டினால் இடம்பெற்றுள்ள இந்த மீள்குடியேற்றத்தில், 1500 குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *