கட்டுரைகள்பிரதான செய்திகள்

அன்ஸிலுக்கு உதித்த காலம்கடந்த ஞானம்

(முஹம்மட் இத்ரீஸ் இயாஸ்டீன்)
 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலிருந்த சிலரின் அதிகாரங்கள் கைமாறிப் போனதால் அவர்களுடைய வாரிசுகளும் கட்சியுடன் முரண்பட்ட இன்னும் சிலரும்; சேர்ந்து கட்சித் தலைமை கிழக்கு மாகாணத்துக்கு வேண்டும் என்ற தோரணையில் ~கிழக்கின் எழுச்சி| என்ற கோசத்தை ஆரம்பித்தனர். அந்தக் கோசம் பிசுபிசுத்துப்போனதால் வந்த வேகத்திலேயே காணாமல்போனது. இந்நிலையில் பஷீர் சேகுதாவூதும் ஹஸன் அலியும் கட்சித் தலைவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இவர்கள் இருவரும் கட்சியை தூய்மைப்படுத்தப்போகிறோம் என்ற தோரணையிலேயே தங்களது எதிர்ப்பு பிரசாரங்களை ஆரம்பித்துள்ளனர். தேசியப்பட்டியல் கிடைக்காத காரணத்தினால் பஷீர் சேகுதாவூதும், செயலாளர் பதவியும் தேசியப்பட்டியலும், அமைச்சுப் பொறுப்பும் கிடைக்காத காரணத்தினால் ஹஸன் அலியும் தற்போது கட்சிக்கு எதிராக பிரசாரம் செய்துவருகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த வெளிப்படையான உண்மை. ஆனால், இவர்கள் இருவரும் இதன்மூலம் அடையவிருக்கும் எதிர்பார்ப்புகள் வெவ்வேறாக இருக்கின்றன.

ஹஸன் அலி இவ்வாறு பேசுவதில் நியாயம் இருக்கிறது. அதை சிலர் பகைடையாக வைத்து தங்களது அரசியல் நடவடிக்கைளை மேற்கொள்வதாக நிந்தவூரில் நடைபெற்ற கூட்டமொன்றில் ரவூப் ஹக்கீம் தெரிவித்திருந்தார். ஹஸன் அலியின் பதவிகள் பறிக்கப்பட்டதால் அவர் மனவேதனையுடன் இருப்பதை ஹக்கீம் மனதார ஏற்றுக்கொண்டுள்ளார். கட்டாய உயர்பீடக் கூட்டத்தின்போது ரவூப் ஹக்கீமை தலைவராக பிரேரித்த ஹஸன் அலி, நிந்தவூர் கூட்டத்தில் அதனை ஆமோத்திருந்தார்.

இதுவெல்லாம் இருக்கட்டும், அட்டாளைச்சேனை முன்னாள் தவிசாளர் எம்.ஏ. அன்ஸில் ஏன் ஹஸன் அலியுடன் சேர்ந்து கட்சித் தலைமையை வசைபாடவேண்டும் என்று நிறையப் பேருக்கு சந்தேகம் இருப்பது நியாயமே. ஹஸன் அலியும், பஷீரும் பதவி பறிபோனதால் பேசுகிறார்கள். ஆனால், அன்ஸிலுக்கு அப்படியொரு தேவையில்லாத காரணத்தினால், அவர் பேசுவது உண்மையாக இருக்குமா என்று மக்கள் சந்தேகக் கண்கொண்டு பார்ப்பதை அவர் தனக்கு சாதகமாக பயன்படுத்த முயன்று வருகிறார்.

பஷீருடன் சேர்ந்து போராட்டத்தில் குதித்தால் மக்கள் ஆதரவு கிடைக்காது என்ற காரணத்தினால், ஹஸன் அலியுடன் சேர்ந்து அன்ஸிலும் மேடையேறியுள்ளார். கட்சியின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹ_ம் எம்.எச்.எம். அஷ்ரப் எந்த நோக்கத்துக்காக கட்சியை ஆரம்பித்தாரோ, அந்த நோக்கம் இப்போது தூரமாக்கப்பட்டுள்ளதால் ரவூப் ஹக்கீமுடன் முரண்படவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாக அன்ஸில் இப்போது தெரிவிக்கிறார்.

அன்ஸிலின் பார்வையில், கடந்த வருடம் வரை மக்கள் நலனுக்காக பயணித்த கட்சி, இன்று பிழையான வழியில் பயணிக்கிறதா? பிழையான வழியில் பயணிப்பதை உணர்வதற்கு இவ்வளவு காலம் எடுத்தது ஏன்? கட்சியும் அதன் தலைமைத்துவமும் பிழையான வழியில் செல்வதாக நீங்கள் உணர்ந்திருந்தால், அப்போதே இவற்றை போட்டுடைத்திருக்க வேண்டுமே. பல வருடங்களாக கட்சியின் உயர்பீடத்தில் இருந்துகொண்டு வக்காளத்து வாங்கிக்கொண்டிருந்த நீங்கள், இன்று கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்வதன் மர்மம்தான் என்ன?

கடந்த வருடம் பாலமுனையில் நடைபெற்ற கட்சியின் மாநாட்டை நடாத்தும் பொறுப்பு முழுக்க முழுக்க உங்களிடமே ஒப்படைக்கப்பட்டது. அதற்காக கோடிக்கணக்கான ரூபா பணம் கட்சியினால் வழங்கப்பட்டது. அதனை நீங்கள் சிறப்பான முறையில் நடாத்தி முடித்தீர்கள். இன்று நீங்கள் யாருக்காக பேசுகின்றீர்களோ, அந்த ஹஸன் அலி அன்றைய மாநாட்டுக்கு வந்திருக்கவில்லை. அதனை நீங்கள் அன்று பார்த்த விதம் வேறு, இன்று பார்க்கும் விதம் வேறு.

பாலமுனை தேசிய மாநாட்டின் பின்னர் மறுநாள் நடைபெற்ற கூட்டமொன்றில், ~கட்சியில் அனுகூலங்களை அனுபவித்தவர்கள், அதிகாரங்களை அனுபவித்தவர்களுக்கு 15 வருடங்களாக இல்லாதிருந்த பிரச்சினை இப்போது வருகிறதென்றால், அவர்களுக்கு அதிகாரம் இல்லை என்பது மாத்திரம்தான் காரணம் என்று கட்சிக்குள்ளே இருக்கின்ற என் போன்றவர்களுக்கு நன்றாகத் தெரியும்| என்று அன்ஸில் தனதுரையில் தெரிவித்திருந்தார்.

தேசியப்பட்டியல் கிடைக்காத காரணத்தினால்தான் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு என்ற எண்ணக்கரு பிறந்திருப்பதாக பேசிய அன்ஸில், பஷீரையும் ஹஸன் அலியை கடுமையாக சாடிப் பேசினார். தலைவர் எடுக்கின்ற தீர்மானங்கள் அவர்களுக்கு சாதகமாக இல்லையென்றால், தலைவரை ஒரு சர்வாதிகாரப் போக்குடையவர்களாக பார்ப்பதாக அன்ஸில் தனதுரையில் அவர்களிடம் பிழையிருப்பதை மேடையில் பகிரங்கமாக தெரிவித்திருந்தார். அதே பிழையைத்தான் இன்று அவர் செய்துகொண்டிருக்கிறார்.

இவ்வாறு கடந்த வருடம் வரை தலைவருக்கு வக்காளத்து வாங்கிய அன்ஸில், இன்று ஞானம் உதித்தவர்போல அந்தர் பல்டி அடிப்பதன் பின்னணி நிறையப் பேருக்கு தெரியாதுள்ளது. அன்றைய கூட்டத்தில் ஹஸன் அலியையும், பஷீரையும் வசைபாடியவர், இன்று ஹஸன் அலிக்காக பரிந்து பேசுகின்ற நிலைக்கு ஆளாகியுள்ளார். அதேநேரம், அன்று பஷீருக்கு எதிராக பேசியவர், இன்று ஒரு வார்த்தைகூட அவருக்கு எதிராக பேசவில்லை. இதன்மூலம் அவர் பஷீரை எதிரியாக பார்க்கவில்லை என்பதை யூகித்துக்கொள்ளலாம்.

பஷீர் சேகுதாவூதை தவிசாளர் பதவியிலிருந்து இடைநிறுத்தும் தீர்மானம் உயர்பீடக் கூட்டத்தில் எடுக்கப்பட்டபோது, அன்ஸில் கையை உயர்;த்தி ஆதரவு தெரிவிக்காமல் இருந்தார். அப்போது தலைவர் ரவூப் ஹக்கீம், அன்ஸின் பெயரைக்கூறி பஷீரை இடைநிறுத்துவதில் உங்களுக்கு உடன்பாடு இருக்கிறதா என்று கேட்டபோதுதான் அன்ஸில் வேறு வழியின்றி எல்லோரும்போல கையை உயர்த்தினார். இதன்மூலம் பஷீருக்குக்கும் தனக்கும் இருந்த நெருக்கத்தை அவராகவே சபையில் ஒப்புவித்திருந்தார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது முஸ்லிம் காங்கிரஸ் யாரை ஆதரிப்பது என்ற திண்டாட்டத்தில் இருந்தமைக்கான காரணம் அன்ஸிலுக்கு நன்றாகவே தெரியும். கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் கட்சியை இரண்டாக பிளந்து ஒரு அணியை மஹிந்த பக்கம் இழுத்துச் செல்வதற்கு ஆயத்தமாக இருந்தார். அதற்காக கோடிக்கணக்கில் பேரமும் பேசப்பட்டது. ஆனால், மக்களோ மைத்திரியின் பக்கம் நின்றனர். ஒரு தடவைகூட மஹிந்தவை ஆதரிக்காத கட்சித் தலைமை, கட்சியையும் பிளவுபடாமல் காப்பாற்றவேண்டும், அதேவேளை மக்கள் கருத்துக்கும் மதிப்பளிக்கவும் வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது.

இவ்வாறான சூழ்நிலையில், கட்சித் தலைமை எடுத்த சாணக்கிய முடிவினால் இறுதிக் கட்டத்திலாவது மைத்திரியின் பக்கம் கட்சியில் சேதாரமில்லாமல் கொண்டுவந்து சேர்க்கப்பட்டது. ஆனால், அப்போதும் ஒருசிலர் இந்த முடிவை ஏற்றுக்கொள்ளாமல், கோபித்துக்கொண்டு தேர்தலில் யாருக்கும் வாக்களிக்காமல் தனது வாக்குரிமையை பகிஷ்கரித்தார். அவர்தான் இந்த இழுபறிக்கு காரணம் என்பது அன்ஸிலுக்கும் தெரியும், மக்களுக்கும் தெரியும்.
கட்சிக்கு வாக்களித்த தாய்மார்களின் விருப்பங்களுக்கு ஏற்றவாறு அவர்களின் காலடிக்குச் சென்று தலைவர் சேவையாற்றுவதாக கடந்த வருடம் பாலமுனையில் பேசிய அன்ஸில், இன்று அதே பாலமுனையில் வைத்து பேசும்போது, கட்சிக்கு வாக்களித்ததால் பெண்களின் கற்புகள் பறிக்கப்படுவதாக கூறுகிறார். அது உண்மையாக இருந்தால் கடந்த வருடமே அதை கூறியிருக்க வேண்டுமே. ஏன், இந்த வருடம் கூறவேண்டுமா? கூடவே இருக்கும்வரை நல்லவர்களாக துதித்துவிட்டு, வெளியே வந்து அவர்களை மோசமாக வசைபாடுகின்ற அரசியல் பாங்கு அன்ஸிலையும் விட்டுவைக்கவில்லை போலும்.

அவர் குற்றம்சாட்டிய அரசியல்வாதி, அண்மையில் கண்டி ஓக்ரே ஹோட்டலில் நடைபெற்ற மு.கா. செயலமர்வில் தன்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அபாண்டமானவை என்றும் அதில் எவ்வித உண்மையும் இல்லையென்றும் தலைவர் முன்னால் பகிரங்கமாக எடுத்துக் கூறினார். அப்போது அங்கே பிரசன்னமாயிருந்த அன்ஸில், அவரது கருத்துக்கு ஏன் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. அவர் கூறுவது பிழையென்று சுட்டிக்காட்டாமைக்கான காரணம் என்ன? அப்போது ஏன் (கள்ள) மௌனம் சாதித்தீர்கள்?

ஹஸன் அலியின் செயலாளர் பதவி பறிக்கப்பட்டதற்காக போராடவில்லை என்று கூறும் அன்ஸில், அதேநேரம், அவருக்கும் என்னைப்போலவே அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறி அதற்காகத்தான் போராடுகிறேன் என்பதை அவராகவே ஒப்புக்கொள்கிறார். கட்சியை ஒரே திசையில் கொண்டு செல்லவேண்டும் என்ற நோக்கத்துக்காத்தான் தலைவர் செயலாளரை மாற்றினார். மர்ஹ_ம் அஷ்ரப் தலைவராக இருந்த காலத்தில்கூட, செயலாளராக இருந்த ரவூப் ஹக்கீமை தனது விருப்பத்துக்காக அந்த பதவியிலிருந்து அஷ்ரப் மாற்றினார். அப்போது அதை சரிகண்டவர்கள், இன்று இதை பிழைகாண்பதில் என்ன நியாயம் இருக்கிறது?

ஹஸன் அலியின் பிரச்சினை வேறு, அன்ஸிலின் பிரச்சினை வேறு. பஷீர் சேகுதாவூதுக்கு இருக்கின்ற கட்சித் தலைமையை மாற்றவேண்டும் என்ற கோரிக்கைதான் அன்ஸிலிடமும் இருக்கிறன்து என்பது அவரது பேச்சிலிருந்து தெளிவாகத் தெரிகின்றது. அதுமட்டுமல்லாமல், ஏறாவூரில் பாரிய அரசியல் பலத்துடன் இருக்கும் கிழக்கு முதலமைச்சரை வசைபாடும் பஷீரின் கொள்கையும் அன்ஸிலிடம் இல்லாமலில்லை. பஷீரை எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்காத நிலையிலேயே அன்ஸிலின் இன்றைய செயற்பாடுகள் அனைத்தும் ஒழுங்குபடுத்தப்பட்டிருப்பது அவர் மீதான சந்தேகத்தை மேலும் வலுக்கச் செய்கிறது.

இரு மாதங்களுக்குள் விசேட பேராளர் மாநாட்டை நடாத்தி, தனக்குரிய செயலாளர் பதவியை தரவேண்டும் என்று ஹஸன் அலி பொத்துவில் கூட்டத்தில் வைத்து தலைவருக்கு காலக்கெடு விதித்துள்ளார். அதேவேளை, தலைவரிடமிருந்து கட்சியை மீட்டெடுக்கும் வரை ஓயப்போவதில்லை என்ற அன்ஸில் பாலமுனை கூட்டத்தில் தெரிவித்துள்ளார். இருவரும் ஒரே மேடையில் பேசித்திரிந்தாலும் இருவரும் வெவ்வேறு நிகழ்ச்சிநிரலின் கீழ் செயற்படுகின்றார்கள் என்பது இதன்மூலம் தெளிவாகத் தெரகின்றது. இப்படி சுயநலத்துக்காக போராடுபவர்களை மக்கள் எப்படி நம்புவார்கள்?
ஒருவேளை, ஹஸன் அலிக்குரிய பதவிகள் வழங்கப்பட்டால் அவர் வழமைபோல கட்சித் தலைமையுடன் இணைந்துகொண்டு அவருடைய பாதையில் சென்றுவிடுவார். கடைசியில் அன்ஸில் அணியினர் தனிமைப்படுத்தப்பட்டு விடுவார்கள். இதனால், எப்படியாவது ஹஸன் அலி – ஹக்கீம் முறுகலை ஸ்திரநிலையில் வைத்திருக்கவேண்டும் என்பதில் அவர் சிரத்தையெடுப்பது தெளிவாகப் புரிகின்றது. அதுமட்டுமல்லாமல், பஷீர் சேகுதாவூதின் எண்ணக்கருவான முஸ்லிம் தேசியக் கூட்டமைப்புக்குள் ஹஸன் அலியை இழுத்துச் செல்லும் திட்டத்தையும் திரைமறைவில் அவர் அரங்கேற்றுவதாக சொல்லப்படுகிறது.

மஹிந்தவுடன் இணைந்து போட்டியிடவேண்டும் இல்லாவிட்டால் கட்சிக்கு எதிராக 17 கூட்டங்களை நடாத்தப்போவதாக கடந்த மாகாணசபைத் தேர்தலின்போது பஷீர் சேகுதாவூத் சவால் விட்டிருந்ததார். அவருடைய முதலாவது கூட்டமே பிசுபிசுத்துப்போன காரணத்தினால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. அதுபோல, இன்று அன்ஸில் அணியினர் கட்சித் தலைமைக்கு எதிராக 16 கூட்டங்களை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளனர். அதற்காக ஒலிபெருக்கி வழங்குநரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

பிரதி வெள்ளிக்கிழமைகளில் இந்தக் கூட்டங்களை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளனர். இருந்தாலும் கடந்த வெள்ளிக்கிழமை இக்கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறவில்லை. பொத்துவில் கூட்டத்துக்கு மக்கள் செல்வாக்கு இல்லாததும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், தவிர்க்க முடியாத காரணங்களினால் கடைசிக் கூட்டம் பிற்போடப்பட்டதாகவும், தற்போது அம்பாறை மாவட்ட உலமா சபையுடன் பேசி வருவதாகவும் ஹஸன் அலி தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவர்கள் எதிர்பார்க்கும் மக்கள் செல்வாக்கு கிடைக்காத காரணத்தினால், அடுத்த வெள்ளிக்கிழமையாவது கூட்டம் நடைபெறுமா என்பதில் சந்தேகம் நிலவுகிறது.

நிந்தவூரில் நடைபெற்ற கூட்டத்துக்கு பெருமளவான பார்வையாளர்கள் வந்திருந்தனர். ஹஸன் அலி கட்சிக்கு எதிராக பேசப்போகிறார், தலைவரை வெளியேற்றுவதற்காக பேசப்போகிறார் என்றே அங்கிருந்தவர்கள் காத்துக்கொண்டிருந்தனர். ஏனெனில், அங்கிருந்தவர்களில் அதிகமானோர் மாற்றுக் கட்சிக்காரர்கள், முஸ்லிம் காங்கிரஸ் அதிருப்தியாளர்கள். இந்நிலையில், தலைவர் ரவூப் ஹக்கீம்தான் என்று ஹஸன் அலி மேடையில் பேசியபோது, கூட்டத்தை பார்க்கவந்தவர்கள் கூச்சலிட்டனர். கடைசிவரை அவர்கள் எதிர்பார்த்தது நடக்காத காரணத்தினால் தூரத்திலிருந்து வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்பிச் சென்றார்கள்.

இந்நிலையில், இந்தக் கூட்டத்தின் உண்மைத்தன்மை புரிந்துகொண்டதால் பொத்துவிலில் நடைபெற்ற கூட்டத்துக்கு அப்படியொரு சனக்கூட்டம் வரவில்லை. இங்கிருந்து நிறையப்பேர் கொண்டு செல்லப்பட்டார்கள். அண்மையில் நடைபெற்ற பொத்துவில் கூட்டத்தின் ஹஸன் அலியின் இறுதிக்கட்ட உரையின்போது குறுக்கிட்ட ஒரு பார்வையாளர், ~ரவூப் ஹக்கீமும் எங்களை ஏமாற்றுகிறார். நீங்களும் பொய் சொல்லி எங்களை ஏமாற்றுகிறீர்கள். உங்களது தேவைக்காக எங்களை பயன்படுத்த வேண்டாம்| என்று பகிரங்கமாகவே கூறியிருந்தார். இதனால் மேடையில் பேசிய அவருக்கு தர்மசங்கட நிலை ஏற்பட்டது.

ஹஸன் அலி பேசும்போது ஒரு பொதுமகன் அவருக்கு எதிராக பேசியதால் அங்கும் அவர்கள் எதிர்பார்த்த அடைவை அடைய முடியவில்லை கொடுக்கவில்லை. அத்துடன் எதிர்பார்த்த மக்கள் கூட்டமும் வரவில்லை. தங்களது கூட்டங்களுக்கு மக்கள் செல்வாக்கு இல்லை என்பதை அவர்கள் ஒவ்வொரு கூட்டமாக நடத்தும்போது உணர ஆரம்பித்துள்ளார்கள். இப்படியே போனால், மாற்றுக் கட்சிக்காரர்களை வைத்துக்கொண்டுதான் இந்தக் கூட்டங்களை நடத்த வேண்டியேற்படும். ஏதொவொன்று கிடைக்காத காரணத்தினால்தான் இவர்கள் ஊர் ஊராக மேடைபோட்டு பேசித்திரிகிறார்கள் என்பதை மக்கள் தெளிவாக புரிந்துவைத்துள்ளார்கள்.

ரவூப் ஹக்கீமுக்கு வக்காளத்து வாங்கிக்கொண்டு பாலமுனையில் தேசிய மாநாட்டை நடாத்துவதற்கு பயன்படுத்திய மேடை மற்றும் கொடிகளை இன்று அவரை தூற்றுவதற்காக அன்ஸில் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். கட்சியை எங்களிடம் ஒப்படைத்துவிட்டு நீங்கள் வெளியேறுங்கள் என்று பேசிக்கொண்டிருக்கிறார். இதன்மூலம் அவர் எந்தப் பின்புலத்தில் செயற்படுகிறார் என்பதை நீங்களாகவே ஊகித்துக்கொள்ள முடியும்.

(நன்றி: நவமணி 21.03.2017)

Related posts

தோனாவின் புனரமைப்பு பணிகளை பார்வையிட்டார் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்

wpengine

அரசின் அடிவருடிகளாக நாங்கள் செயற்படவில்லை! றிஷாட் பதியூதீன் ஆட்டம் நிறுத்தப்டப்டுள்ளது.

wpengine

அதி­காரப் பகிர்வு முஸ்லிம் சமூ­கத்தின் மீது எழு­தப்­படப் போகின்ற அடிமைச் சாசனம்! புரிந்துகொள்ள முடியாத தலைமைகள்

wpengine