ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி அன்னச் சின்னத்தில் போட்டியிடுவதற்கான அங்கீகாரத்தை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் வழங்கியுள்ளனர்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் நேற்று மாலை ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கின்ற கட்சித் தலைவர்களின் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியூதீன், மனோ கணேசன், பழனி திகாம்பரம் மற்றும் ராஜித சேனாரத்ன ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.
இதன்போது, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அமைச்சர் சஜித் பிரேமதாசவை வேட்பாளராக போட்டியிடச் செய்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு எடுத்த முடிவை பிரதமர் ரணில் உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கின்றார்.
இந்நிலையில், ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்களும் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதற்கான தீர்மானத்தை ஏகமனதாக எடுத்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.