பாடசாலைகளுக்கான அதிபர்கள் நியமனத்தின் போது அனைத்துப் பாடசாலைகளுக்கும் ஒரே மாதிரியான கொள்கை மற்றும் வழிமுறை பின்பற்றப்படுவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியில் எழுந்துள்ள பிரச்சினை குறித்து எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் நேற்று (09) பாராளுமன்றத்தில் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து வௌியிட்ட அவர், கடந்த அரசாங்கங்கள் அதிபர்களின் நியமனத்தை சிக்கலாக்கியிருந்தன. பல வருடங்களாக முறையான நடைமுறைகள் இல்லாமல் பதில் அதிபர்களை நியமித்ததன் ஊடாக ஆசிரியர்களுக்கும் பாடசாலைக்கும் அநீதியை ஏற்படுத்தியதோடு, பாடசாலை நிர்வாகத்தையும் சிக்கல் நிலைக்கு தள்ளிவிட்டனர். தற்போது, இந்த செயல்முறை முறையாகவும் சரியான முறையைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஒருவருக்கு அதிபர் பதவி வகிப்பதற்குத் தேவையான தகுதிகளின் அடிப்படையில், அனைத்து தேசிய பாடசாலைகளுக்கும், வெற்றிடம் நிலவும் இடங்களுக்கும் பதவி நியமனங்கள் வழங்கப்படுகின்றன. நாங்கள் ஒவ்வொரு பாடசாலைகளுக்கும் வெவ்வேறு வகையில் செயற்படுவதில்லை. அனைத்துப் பாடசாலைகளுக்கும் ஒரே கொள்கை மற்றும் வழிமுறைகளைப் பின்பற்றுகிறோம். கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியின் அதிபரும் அந்த முறையின் மூலம் நியமிக்கப்பட்டுள்ளார்.
கம்பஹா விக்ரமாரச்சி சுதேச மருத்துவக் கல்லூரியில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாக பல்வேறு தரப்பினரால் செய்யப்பட்ட எழுத்து மற்றும் வாய்மொழி முறைப்பாடுகளின் அடிப்படையில் பல சிக்கல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதன்படி, இந்த விடயத்தில் முறையான மற்றும் பகுப்பாய்வு விசாரணையை நடத்த ஒரு நிபுணர் குழுவை நான் நியமித்துள்ளேன். நாங்கள் கல்வி ஊழியர்கள் மற்றும் மாணவர்களைச் சந்தித்து கலந்துரையாடினோம். முதற்கட்ட கலந்துரையாடல்களில் இருந்து நாங்கள் கண்டறிந்த பல அடிப்படைப் பிரச்சினைகள் உள்ளன.
குறிப்பாக, கம்பஹா விக்ரமாரச்சி சுதேச மருத்துவக் கல்லூரி, தேவையான அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையில் பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டுள்ளது. தேவையான மனித வளங்கள் அல்லது உள்கட்டமைப்பு வசதி இல்லாமல் புதிய பீடங்களும் புதிய பட்டப்படிப்பு திட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலும், அடிப்படை நோக்கங்களுக்கு மேலதிகமாக, தொழில்நுட்பம், சமூகவியல் மற்றும் மேலாண்மை போன்ற படிப்புகள், சுதேச மருத்துவத்துடன் மேலதிக வசதிகள் இல்லாமல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தை விசாரித்து, தேவையான நடவடிக்கை எடுப்பதற்காக அறிக்கை தயாரிக்க ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது.
வன்னிநியூஸ் வட்ஸ்ப் குழுவில் இணைய: https://chat.whatsapp.com/ECH9aFFlKIJB0htsdAdJyg