Breaking
Wed. Apr 24th, 2024

பொதுத்தேர்தல் நீதியானதாகவும் நேர்மையான முறையிலும் நடைபெறும் வகையில் அதனை உறுதிப்படுத்தி, செயற்பாடுகளை முன்னெடுக்கும் நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொள்ள வேண்டுமென மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வவுனியாவில், நேற்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

“கட்சி ஒன்றின் தலைவராக அதுவும் சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவராக இந்த வேண்டுகோளை விடுக்கின்றேன். நாட்டிலே கடந்த காலங்களில் இடம்பெற்ற முறைகேடான, அநீதியான, அராஜக போக்கிலான தேர்தலை இல்லாமலாக்கி, நீதியும் நியாயமும் வாக்கெடுப்பில் மேலோங்க வேண்டும் என்பதற்காகவே, 2015 ஆம் ஆண்டு சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டோம். அதன் பிரதிபலனாக உருவாக்கப்பட்ட சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு, இம்முறை பொதுத்தேர்தலில் அதன் நோக்கத்தை நிறைவேற்ற உழைக்க வேண்டும். ஆணைக்குழுவின் தலைவர் உட்பட உறுப்பினர்கள் இந்த விடயத்தில் அதீத கவனம் செலுத்த வேண்டும்.

ஆளுங்கட்சிக்கு சார்பானதாகவோ, ஆளுங்கட்சி ஆசனங்களை கூட்டிக்கொள்ளும் வாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் தேர்தலாகவோ ஆகஸ்ட் தேர்தல் அமைந்துவிடக் கூடாது. நேர்மைத்தன்மையும் சுயாதீன செயற்பாடுகளும் இடம்பெற்று, எதிர்க்கட்சியினர் தமக்கு உரித்தான ஆசனங்களை முறையாகப் பெற்றுக்கொள்வதற்கு ஆணைக்குழு வழிசமைக்க வேண்டும்.

எல்லாக் கட்சிக்கும், களத்தில் நிற்கும் அனைத்து வேட்பாளருக்கும் சம அந்தஸ்த்தும் சம சந்தர்ப்பமும் வழங்கப்படுவதை உத்தரவாதப்படுத்த வேண்டும். அரச இயந்திரங்கள் அதிகாரப் போக்குகளால், ஒருசாரார் ஆதாயம் அடையக்கூடிய தேர்தலாக இது மாறிவிட்டால் ஜனநாயகம் கேலிக்கூத்தாக்கி விடும்.

தேர்தலை விட மக்களின் சுகநல வாழ்வையே நாம் பிரதானமாகக் கருதுகின்றோம். மக்களினதும் வாக்காளர்களினதும் உயிருக்கு பங்கம் ஏற்படாத வகையிலும் கட்சிகளினது கொள்கைகள், வேட்பாளர்களினது கருத்துக்கள் வாக்காளர்களிடம் எவ்வித தடங்கலுமின்றி சென்றடைய, ஆணைக்குழு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றோம்” என்று கூறினார். 

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *