நாட்டில் இன்று மக்களை வாழ வைக்க முடியாத அரசாங்கமே காணப்படுவதாக எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அவிசாவளையில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்க முடியாத அரசாங்கம் எவ்வாறு மக்களை வாழ வைக்கப்போகிறது என்ற விடயத்தில் பிரச்சினை காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் எதிர்க்கட்சியிலிருந்தபோது நெல்லுக்கு 150 ரூபாய் உத்தரவாத விலையைத் தருவதாகக் கூறினார்கள்.
இவ்வாறான பொய்களைக் கூறி மக்களை ஏமாற்றும் செயல்களில் ஈடுபட்டு, ஆட்சிக்கு வந்த பின்னர் விவசாயிகளைக் கைவிட்டுள்ளனர்.
இன்று அரச உத்தியோகத்தர்கள் விருப்பத்தின் பேரில் இடமாற்றம் செய்யப்பட்டு அவர்களுக்கு ஆதரவானவர்கள் மாத்திரம் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர்.
பெரும்பான்மையான மக்கள் இன்று கடன் சுமைக்கு ஆளாகியுள்ளனர்.
அண்மையில் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் ஜனாதிபதி செயலகத்திற்குச் சென்ற போதும் அவர்களுக்கு உரிய தீர்வுகள் எதுவும் வழங்கப்படவில்லை என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.