இலங்கை அதிபர் சேவை தரம் 3ற்கு ஆட்சேர்ப்பதற்கான நேர்முகப்பரீட்சை கல்வியமைச்சில் எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை நடைபெறவிருக்கின்றது.
வழமைக்குமாறாக இம்முறை சாதாரண நேர்முப்பரீட்சைக்கு மேலதிகமாக கட்டமைக்கப்பட்ட நேர்முகப்பரீட்சை இடம்பெறவிருப்பதாக கல்வியமைச்சின் செயலாளர் டபிள்யு.எம்.பந்துசேன தெரிவித்தார்.
ஆவணங்களை பரிசீலிப்பதுடன் புதிய இலங்கை அதிபர் சேவைப்பிரமாணக் குறிப்பின்படி முதற்றடவையாக ஒவ்வொரு பரீட்சார்த்தியும் 10 நிமிட நேரம் வாய்மொழிமூல முன்வைப்பு ஒன்றை சமர்ப்பணம் செய்யவேண்டும் எனக் கேட்கப்பட்டுள்ளது.
இசுருபாயவிலுள்ள கல்வியமைச்சின் மேல்மாடியில் நடைபெறவிருக்கும் இந்நேர்முகப் பரீட்சைக்கு இலங்கை அதிபர் சேவை தரம் 3 போட்டிப் பரீட்சையில் சித்திபெற்ற 4079 பரீட்சார்த்திகளும் அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 4070 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது நிலவும் அதிபர் வெற்றிடங்கள் நிரப்பப்படும்.
கட்டமைக்கப்பட்ட நேர்முகப்பரீட்சை!
கட்டமைக்கப்பட்ட நேர்முகப்பரீட்சையில் 10 நிமிட நேர வாய்மொழிச் சமர்ப்பணத்திற்கு 25புள்ளிகள் வழங்கப்படவுள்ளது.
அதிபர் பணிக்கூறுகள் எனும் தலைப்பிலான சமர்ப்பணத்தின் போது அறிமுகத்திற்கு 4 புள்ளிகளும் கட்டமைப்பு மற்றும் முன்வைப்பிற்கு 4 புள்ளிகளும் முன்வைப்பு ஆற்றலுக்கு 8 புள்ளிகள் விடய ஆய்விற்கு 5புள்ளிகள் நேரமுகாமைத்துவத்திற்கு 4 புள்ளிகள் என 25 புள்ளிகள் பிரிக்கப்பட்டுள்ளன.
கல்வியமைச்சு கடந்தாண்டு நவம்பர் மாதம் நடாத்திய இலங்கை அதிபர் சேவை தரம் 3 பதவிக்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சையில் நாடளாவியரீதியில் 4079 பேர் பரீட்சையில் நேர்முகப்பரீட்சைக்காக தகுதிபெற்றிருந்தனர். இப்பரீட்சைக்கு சுமார் 20ஆயிரம் பேர் தோற்றியிருந்தனர்.
4070 வெற்றிடங்கள் நிரப்பப்படும்!
தகுதிபெற்ற 4079 பேரில் வடக்கு மாகாணத்திலிருந்து 420பேரும் கிழக்கு மாகாணத்திலிருந்து 327பேரும் தெரிவாகியுள்ளனர். இருந்தபோதிலும் இப்பரீட்சையில் எதிர்பார்த்தளவு பெறுபேறு கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டிலுள்ள பாடசாலைகளில் நிலவும் 4223 அதிபர் வெற்றிடங்களில் எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் 4070 வெற்றிடங்கள் நிரப்பப்பட்டுவிடும் என்று கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவாசம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வரலாற்றில் பெருந்தொகையான அதாவது 4070 பேர் தரம் 3 அதிபர்களாக நியமிக்கப்படவிருப்பது இதுவே முதற்தடவையாகும்.