அதிக விலைக்கு நெல்லை கொள்வனவு செய்தாலும் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலைக்கமைவாகவே அரிசியை விற்பனை செய்ய முடியும். அதிக விலைக்கு நெல்லை கொள்வனவு செய்து இறுதி தருணத்தில் நெருக்கடிக்குள்ளாக வேண்டாம் என்று பிரதான அரிசி உற்பத்தியாளர்களிடம் கேட்டுக் கொள்கிறோம் என நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் ஹேமந்த சமரகோன் தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள நுகர்வோர் அதிகார சபையின் காரியாலயத்தில் வியாழக்கிழமை (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
அரிசி உள்ளிட்ட ஏனைய அத்தியாவசிய உணவு பொருட்களின் நிர்ணய விலை குறித்து தொடர்ந்து சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டுள்ளோம்.
எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புக்களை முன்னெடுப்போம்.ஆகவே நிர்ணய விலைக்கு மாறாக அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு வர்த்தகர்களிடம் கேட்டுக் கொள்கிறோம்.
நெல்லுக்கான உத்தரவாத விலை நிர்ணயிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் விலை நிர்ணயத்துக்கு மாறாக அதிக விலைக்கு ஒருசில பகுதிகளில் தனியார் தரப்பினரும், தனியார் நிறுவனங்களும் நெல்லை கொள்வனவு செய்வதாக அறிய முடிகிறது.
அதிக விலைக்கு நெல்லை கொள்வனவு செய்தாலும் தற்போது அமுலில் உள்ள அரிசிக்கான கட்டுப்பாட்டு விலைக்கு அமைவாகவே அரிசியை விற்பனை செய்ய முடியும். அதிக விலைக்கு நெல்லை கொள்வனவு செய்தமைக்காக அரிசியின் கட்டுப்பாட்டு விலையை திருத்தம் செய்ய முடியாது.
நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலைக்கு மாறாக அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்தால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் நபராயின் 1 இலட்சம் முதல் 5 இலட்சம் ரூபா வரையில் தண்டப்பணம் விதிக்கப்படும், அல்லது ஆறு மாத கால சிறை தண்டணைக்கு உள்ளாக நேரிடும்.
தனியார் நிறுவனமாயின் 1 இலட்சம் முதல் 5 மில்லியன் வரையில் தண்டப்பணம் விதிக்கப்படும். கடந்த ஜனவரி மாதம் முதல் இன்று (நேற்று) வரையான காலப்பகுதியில் மாத்திரம் அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த தரப்பினருக்கு நீதிமன்றத்தின் ஊடாக 38 மில்லியன் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது என்றார்.