Breaking
Sun. Nov 24th, 2024

வைத்தியசாலைகள் மற்றும் பாடசாலைகள் போன்ற எந்த அரச நிறுவனங்களாக இருந்தாலும் அங்கு இடம்பெறுகின்ற பொது விடயங்களில் அரசியல் ரீதியான பாராபட்சம் காட்டுகின்ற நடைமுறை மாற்றப்பட வேண்டும். இன்று இங்கு நடைபெறுகின்ற இந்நிகழ்வுக்கு எமது பிரதேசத்தைச் சேர்ந்த மீள்குடியேற்ற, புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் கௌரவ M.L.A.M. ஹிஸ்புல்லாஹ் அவர்கள் அழைக்கப்படவில்லை என்பது மிகவும் கவலையான விடயமாகும். என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கௌரவ. பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் சுகாதார, போசனை மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் கௌரவ. ராஜித சேனாரத்ன அவர்களின் அனுசரணையில் காத்தான்குடி மஞ்சந்தொடுவாய் ஆயர்வேத வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நோயாளர் தங்கு விடுதியினை உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கும் நிகழ்வு 2017.02.28ஆந்திகதி-செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மேற்கண்டவாறு தெரிவித்தார்,

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்

இந்நிகழ்விற்கு கௌரவ இராஜாங்க அமைச்சர் அவர்கள் அழைக்கப்படவில்லை என்பது எனக்கு இறுதிவரை தெரியாத விடமம். இவ்விடயத்திற்கு நான் எனது கடுமையான கண்டனத்தினை தெரிவித்துக்கொள்கின்றேன். இவ்வாறன செயற்பாடுகள் எமது சமூகத்திலிருந்து முற்றாக இல்லாமல் செய்யப்பட வேண்டும். அரச அதிகாரிகள் அவர்களினுடைய விடயங்களை உரிய முறையில் முன்னெடுக்க வேண்டுமே தவிர அதில் எவ்விதமான அரசியல் காழ்ப்புணர்ச்சிகளும் இருக்கக்கூடாது.

மேலும் மக்களுக்கு சிறந்ததொரு சேவையினை வழங்குவதனை நோக்கமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இவ்வைத்தியசாலையானது இதற்கு முன்னர் இவ்வைத்தியசாலையில் கடமையிலிருந்த வைத்தியப் பொறுப்பதிகாரியின் முறையற்ற செயற்பாடுகளினால் இவ்வைத்தியசாலை மிகவும் பின் தங்கிய நிலைமையில் எதுவிதமான அபிவிருத்திகளும் மேற்கொள்ளப்படாத நிலைமையில் காணப்பட்டது.
2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இவ்வைத்தியசாலையில் நோயாளர்கள் தங்கியிருந்து சிகிச்சை பெறும் விடுதி ஆரம்பிக்கப்பட்டிருந்த போதிலும் ஓரிரு மாதங்களிலேயே அவ்விடுதி மூடப்பட்டது. இவ்வைத்தியசாலையில் நடைபெறும் ஊழல்கள் பற்றி சமூகத்தில் அதிகமாக பேசப்படுகின்ற ஒரு நிலைமை ஏற்பட்டது.
இது தொடர்பாக நாங்கள் உடனடியாக எமது பிரதியமைச்சர் கௌரவ. பைசல் காசிம் அவர்களை தொடர்புகொண்டு இவ்வைத்தியசாலையினை அபிவிருத்தி செய்ய வேண்டுமாக இருந்தால் வைத்தியப் பொறுப்பதிகாரியினை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டுமென்று கேட்டுகொண்டோம்.

அந்த இடமாற்றத்தினை வழங்குவதற்கு பல்வேறு அரசியல் காரணிகள் தடையாக இருந்த போதிலும் நாங்கள் மேற்கொண்ட தொடர் முயற்சியின் பலனாக குறித்த வைத்திய பொறுப்பதிகாரியினை இடமாற்றியிருந்தோம். அதன் பிற்பாடுதான் எங்களுக்கு இந்த வைத்தியசாலையின் அபிவிருத்திகளை தொடர்ச்சியாக முன்கொண்டுசெல்ல முடிந்தது.

இவ்வைத்தியசாலையினை இடமாற்றம் செய்து நவீன முறையில் அபிவிருத்தி செய்வதற்காக 180 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்படவிருந்தவேலை அதற்கான உரிய காணி ஒன்று அடையாலப்படுத்தப்படாமை காரணமாக அந்த அபிவிருத்தி திட்டம் இல்லாமல் போய்விடக்கூடிய ஒரு நிலைமை உருவானது.

இவ்விடயம் தொடர்பாக இறுதியான தீர்மானம் ஒன்றை மேற்கொள்வதற்காக ஆயுள்வேத ஆணையாளர் அவர்களும், கணக்காளர் அவர்களும் இங்கு வந்திருந்த போது வைத்தியசாலையினை அபிவிருத்தி செய்வதற்கான உரிய இடம் ஒன்றினை ஒரு மாத காலத்திற்குள் பெற்றுத்தருவோம் என்ற வாக்குறுதியினை நானும், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனமும் இணைந்து எழுத்து மூலமாக வழங்கியிருந்தோம்.

அதற்கமைவாக நாங்கள் மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சியின் பயனாக காத்தான்குடி முதியோர் இல்லத்திற்கு சொந்தமான காணி ஒன்று பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதோடு அவ்விடத்தில் இவ்வைத்தியசாலையினை நவீன முறையில் அபிவிருத்தி செய்வதற்கான முன்னெடுப்புகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
அந்தவகையில் நாங்கள் இவ்வூரினுடைய அனைத்து விதமான அபிவிருத்தி விடயங்களிலும் கூடிய அவதானத்தோடு செயற்படுவதுடன் எதிர்காலத்திலும் தொடர்ச்சியாக மேலும் பல அபிவிருத்தித் திட்டங்களையும் முன்னெடுக்கவுள்ளோம் எனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வானது, மஞ்சந்தொடுவாய் ஆயுள்வேத வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரி டாக்டர் ஏ.எல். ஜலால்தீன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சுகாதார, போசனை மற்றும் சுதேச வைத்திய பிரதி அமைச்சர் கௌரவ பைசல் காசிம் அவர்களும், கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களும், விஷேட அதிதிகளாக ஆயுள்வேத ஆணையாளர் எல்.எச். திலகரட்ன, கிழக்கு மாகாண சுதேச வைத்திய ஆணையாளர் திருமதி எஸ். சிறிதர் ஆகியோரும் ஏனைய அதிதிகளாக ஆயுள்வேத திணைக்களத்தின் அதிகாரிகள், ஆயுள்வேத வைத்தியர்கள், முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *