வரவிருக்கும் உள்ளூராட்சி தேர்தலின் மூலம் தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் கிடைக்கும் உள்ளுராட்சி சபைகளுக்கு கண்ணை மூடிக் கொண்டு நிதி ஒதுக்கப்படும்
வரவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி ஆட்சி செய்யும் உள்ளூராட்சி சபைகளுக்கு மட்டுமே கண்ணை மூடிக்கொண்டு நிதி ஒதுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மற்ற கட்சிகள் ஆட்சி செய்யும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிதி வழங்குவதற்கு முன்பு பத்து முறை சரிபார்க்கப்படும், மேலும் தேவையற்ற செலவுகளுக்கு நிதி வழங்கப்படாது எனவும் அவர் எச்சரித்தார்.
இந்தக் கருத்துகளை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, நேற்று (12) கந்தளாய் நகரில் நடைபெற்ற மக்கள் கூட்டத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் பேசுகையில், “நவம்பர் மாதம் மீண்டும் புதிய வரவு-செலவுத் திட்டத்தை கொண்டு வருகிறோம். ஜூன் மாதத்திற்குள் அதற்கான முன்மொழிவுகளை பெறுவோம். அப்போது உள்ளூராட்சி மன்றங்கள் என்ன செய்ய வேண்டும்? ,
உதாரணமாக – கந்தளாய் உள்ளூராட்சி மன்றத்தின் வருமானம் இவ்வளவு, செய்ய வேண்டிய வேலைகள் இவை. ஆனால், பார்க்கும்போது வருமானம் போதாது, செய்ய வேண்டிய வேலைகள் அதிகம் உள்ளன. அப்படியெனில், அரசிடம் இருந்து அந்த வேலைகளுக்கு நிதி கோர வேண்டும். நாங்கள் அந்த நிதியை மத்திய அரசு மூலம் வழங்குவோம்.
நாங்கள் முன்மொழிவை எடுத்து பரிசீலிக்கிறோம். நிதி அமைச்சகமாக இருக்கும் நாங்கள், முன்மொழிவு எங்கிருந்து வந்தது என பார்க்கிறோம்.
உதாரணமாக, கந்தளாய் உள்ளூராட்சி மன்றத்தில் இருந்து வந்திருக்கிறது. அடுத்து, யார் ஆட்சியில் இருக்கிறார்கள் என பார்க்கிறோம். கந்தளாய் உள்ளூராட்சி மன்றம் தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றால், கண்ணை மூடிக்கொண்டு முன்மொழிவை அனுமதித்து, நிதியை வழங்குவோம். ஆனால், மற்றொரு கட்சி ஆட்சியில் இருந்தால் என்ன செய்வோம்? பத்து முறை சரிபார்ப்போம். ஏன்? முந்தையவர்கள் எப்படி செய்தார்கள் என்பது உங்களுக்கு தெரியும். பாதைக்கு கொஞ்சம் கான்கிரீட், மீதி பையில். இப்படி நடந்ததில்லையா?
அப்படியெனில், நிதி வழங்க மாட்டோம். திருடுவதற்கு நிதி கொடுக்க வேண்டுமா? இல்லை. இதை மனதில் வைத்திருங்கள். அப்படியெனில், இந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கு யாரை அனுப்ப வேண்டும்? இந்த முறை அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரத்தை வழங்க வேண்டும். இல்லையெனில், பயனில்லை. இல்லையெனில் என்ன நடக்கும்? முடங்கிப்போன உள்ளூராட்சி மன்றங்கள், மத்திய அரசின் வேலைகளுக்கு காலை இழுக்கும் மன்றங்கள். அது சரியாக இருக்காது,” என்றார்.