செய்திகள்பிரதான செய்திகள்

அதானி காற்றாலை திட்டத்திற்கு எதிரான மனு மீளப்பெறப்பட்டது ..!

மன்னார் (Mannar) விடத்தல் தீவு பிரதேசத்தில் காற்றாலை மின் நிலையத்தை நிர்மாணிப்பதற்கு இந்தியாவின் அதானி நிறுவனத்துடன் மேற்கொண்ட தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் இருந்து இன்று (18) மீளப்பெறப்பட்டுள்ளன.

சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் சீராக்கல் மனுவொன்றை சமர்ப்பித்து, குறித்த திட்டம் வாபஸ் பெறப்படுவதாக இந்திய அதானி நிறுவனம் இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

அந்த அறிவிப்புக்குப் பின்னர், மனுதாரர்கள் குறித்த அடிப்படை உரிமை மனுக்களை மீளப் பெற்றனர். சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் உள்ளிட்ட 5 தரப்பினரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் குறித்து அதானி நிறுவனம் தொடர்ந்தும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பான திட்டங்கள் தொடர்பாக அதானிக்கும் இலங்கை அரசுக்கும் இடையே தொடர்ந்தும் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக இந்தியாவின் “தி இந்து” செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த திட்டங்களின் கட்டணங்கள் தொடர்பாக பரஸ்பர உடன்பாட்டை எட்டுவதற்கு உரிய கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் பூநகரி புதுப்பிக்கத்தக்க காற்றாலை திட்டத்தில் இருந்து கட்டணப் பிரச்சினை காரணமாக விலகுவதாக அதானி குழுமம் சமீபத்தில் எழுத்துப்பூர்வமாக அறிவித்திருந்தது.

ஆனால் குறித்த திட்டத்தை முற்றாக நிறுத்துவதற்கு எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

கட்டணங்கள் தொடர்பாக பரஸ்பர உடன்பாடு ஏற்பட்ட பிறகு, ஜூன் மாதத்திற்குள் இந்தத் திட்டத்தின் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படக்கூடும் என “தி இந்து நாளிதழ்” தனது அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, இந்த திட்டம் தொடர்பில் அதானி குழுமத்துடன் தொடர்ந்தும் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கை அரசாங்கம் அண்மையில் குறிப்பிட்டிருந்தது.

Related posts

பிரபாகரன் கொலை செய்ய, சலுகைக்காக முஸ்லிம்கள் கையேந்துகிறார்கள்.

wpengine

கருத்தடை மற்றும் குடும்ப கட்டுபாடு பொருட்கள் விளம்பரத்திற்கு தடை

wpengine

அரச சேவையில் 7,456 பேர் இணைத்துக் கொள்ள அனுமதி .

Maash