பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

அடுத்த ஜனாதிபதி எவர்? என்பது எல்லோர் மனதிலும் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

ஊடகப்பிரிவு
இனவாத சக்திகளின் நடவடிக்கைகளையும் எண்ணங்களையும் தவிடுபொடியாக்கும் வகையில், ஜனாதிபதி வேட்பாளரை அடையாளப்படுத்தும் நல்லதொரு முடிவை, சிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து மேற்கொள்ளுமென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான, தேசிய வடிவமைப்பு நிலையத்தின் அனுசரணையில், தையல் பயிற்சியினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட போதே, அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

வவுனியா மாவட்ட மகளிர் அமைப்பின் அமைப்பாளரும், தையல் பயிற்சி நிலையத்தின் பொறுப்பாளருமான சலாஹுதீன் ஜிப்ரியாவின் ஏற்பாட்டில், வவுனியா, பட்டாணிச்சூர், புளியங்குளத்தில் கடந்த (20) இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் கூறியதாவது,

“அடுத்த ஜனாதிபதி எவர்? என்பது எல்லோர் மனதிலும் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. பலருக்கு இந்த விடயம், ஒரு ஏக்கமாகவும் இருக்கின்றது. கடந்த அரசை உருவாக்குவதில், சிறுபான்மை மக்களினது பங்களிப்பு பிரதானமானது. 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு நமக்கு வந்த சவால்கள், சோதனைகள், துன்பங்கள் அனைவர் மனதிலும் இன்னும் இருக்கின்றன.

பெரும்பான்மைக் கட்சிகள் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதிலும் அறிவிப்பதிலும் மும்முரங்காட்டி வருகின்றன. இந்த வகையில், சிறுபான்மைக் கட்சிகள் தமது மக்களின் அபிலாஷைகளுக்கு ஏற்றவகையில், தமக்கிடையிலே கருத்தாடல்களில் ஈடுபட்டு வருகின்றன. கருத்து வேற்றுமைகள் மற்றும் கொள்கை வேறுபாடுகள் ஆகியவற்றை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு, நாம் இடையறாது கலந்துரையாடி வருகின்றோம்.

பெரும்பான்மை சமுதாயத்தைப் போஷிப்பது போன்று, சிறுபான்மைச் சமுதாயத்தையும் கௌரவமாகவும் சமத்துவமாகவும் நடாத்தும் ஒரு நாட்டுத் தலைமையை உருவாக்குவதில் ஒருமித்து செயற்படுகின்றோம். சிறுபான்மைக் கட்சிகள் வேறுபட்ட போதும், அந்த மக்களின் அபிலாஷைகளை பெற்றுக்கொடுக்கக் கூடிய தலைவரை அடையாளங்காண்பதில், எம்மிடம் கருத்து வேற்றுமை கிடையாது. தேர்தலில் வெற்றிபெறக் கூடிய ஒருவருக்கே எமது ஒருமித்த ஆதரவை வழங்க வேண்டும்.

இனவாதத்தைக் கக்கி, அதன் மூலம் ஆட்சிக் கதிரையை கைப்பற்ற முடியுமென ஒரு கூட்டம் துடியாய்த் துடிக்கின்றது. என்ன விலை கொடுத்தேனும் ஆட்சியை கைப்பற்றுவதிலேயே அவர்கள் குறியாய் இருக்கின்றனர். இந்த நடவடிக்கையை முறியடிக்கக் கூடிய வகையில், சிறுபான்மை மக்கள் தமது நிலைப்பாட்டை எடுத்து, அனைவரையும் அரவணைக்கும் தலைவனை தெரிவுசெய்ய வேண்டும். இதற்காகவே நாங்கள் அயராது பாடுபடுகின்றோம்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இனஉறவுக்கு எடுத்துக்காட்டாக விளங்கி வருகின்றது. அதற்காக உழைத்தும் வருகின்றது. அண்மைக்காலங்களில் நாம் அதனை செயலில் நிரூபித்துள்ளோம்.

கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வன்னி மாவட்டத்தின் பல உள்ளூராட்சி சபைகளில், மூன்று சமூகங்களையும் சேர்ந்தவர்கள் எமது கட்சியில் தெரிவாகினர், மாந்தை மேற்கிலும் மாந்தை கிழக்கிலும் தவிசாளர்களாக, எமது கட்சியைச் சார்ந்த தமிழ்ச் சகோதரர்கள் தெரிவுசெய்யப்பட்டதும், வட மாகாண சபையில் சிங்கள சகோதரர் ஒருவர் தெரிவுசெய்யப்பட்டதும் இதற்கு எடுத்துக்காட்டு. அது மட்டுமல்ல, கட்சியின் உண்மையான சேவையை இந்த விடயங்கள் கட்டியங்கூறியிருக்கின்றன.

கரடுமுரடான பயணத்திலும் காருண்ய அரசியல் நடத்துகிறோம். இருந்தபோதும், சதியாளர்கள் எம்மை துரத்தியே வருகின்றனர். எந்த வழியிலாவது எமது குரல்வளையை நசுக்குவதே அவர்களின் திட்டம்.

அரசியல்வாதிகள் மக்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்குவதில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். பொதுவாக, இவ்வாறான உதவிகள் உரியவர்களுக்கும் வறியவர்களுக்கும் செல்வதில் சில இடர்பாடுகள் இருக்கின்றன. அதனை உறுதிப்படுத்துவதில் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களின் ஒத்துழைப்பு அவசியமாகின்றது. இவ்வாறான கைங்கரியங்களில், சமநிலை பேணப்படல் வேண்டும் என்பதே எனது விருப்பம். ஏற்றத்தாழ்வுகள் நீங்கி, வறுமை இல்லாதொழிக்கப்பட வேண்டும்.
தையல் பயிற்சிகளையும் வழங்கி, சான்றிதழ்களையும் வழங்கி, தையல் இயந்திரங்களையும் கையளிப்பது உங்களின் வாழ்க்கை தரத்தையும், வருமானத்தையும் உயர்த்துவதற்காகவே என்பதை, நீங்கள் உணர்ந்து செயற்படுங்கள்” என்றார். தையல் பயிற்சி பெற்றவர்கள் அமைச்சருக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தனர் .
இந்த நிகழ்வில், வட மாகாண சபை உறுப்பினர்களான ஜயதிலக்க, ரிப்கான் பதியுதீன், அமைச்சரின் பொதுசன தொடர்பாடல் அதிகாரி எம்.ஐ.முத்து முஹம்மத் மற்றும் நகர சபை உறுப்பினர்களான பாரி, லரீப் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

சம்பூர் அனல்மின்நிலையத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் வவுனியாவில்

wpengine

கட்சிக்காக உழைத்து வருபவர்களுக்கு அமைச்சரவை மறுசீரமைப்பின் போது ஏமாற்றம்

wpengine

அரேபியாவை ஏமாற்றி 48 ஆயிரம் கோடிகளை கறந்து விட்டார் டிரம்ப் மீது

wpengine