அடிப்படைவாதம் தலைதூக்குவதற்காக சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் புத்த சாசனத்துக்கு எதிராகவே செயற்படுகிறார்கள்.“அடிப்படைவாதிகளுக்கு மீண்டும் உயிர் கிடைத்துவிட்டது. வடக்கு, யாழ்ப்பாணத்தில் மாத்திரமே இவ்வாறு இடையூறு ஏற்படுத்துகிறார்கள். அங்கேயே சமய அடிப்படைவாதம் போசிக்கப்படுகிறது. அதற்கு அரசாங்கத்தினரும் இடமளித்து வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்” என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.
கொழும்பிலுள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று (15) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே இதனைக் குறிப்பிட்டார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
‘‘இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து புத்த சாசனத்துக்கு பாரதூரமாக நுணுக்கமான தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. வெசாக் போயா தினத்தன்று திஸ்ஸ விகாரையின் முன்னால் சமய அடிப்படைவாத குழுவொன்று திஸ்ஸ விகாரையின் வெசாக் போயா தின வழிபாடுகளுக்கு வந்த பெளத்தர்களுக்கு உள்நுழைய இடமளிக்காமல் பஸ்களுக்குள் நுழையவிடாது வீதியை வழிமறைத்து, பொலிஸாரை சிறிதளவும் கவனத்தில் கொள்ளாமல் அடிப்படைவாதிகள் நடந்துகொண்ட விதமே அந்த நுணுக்கமான தாக்குதலின் உச்சக்கட்டத்துக்கான எடுத்துக்காட்டாகும்.
அடிப்படைவாதிகள் உயிர் கிடைத்துவிட்டது. பயங்கொள்ள வேண்டியதில்லை, அந்த அடிப்படைவாதிகள் தம்மை எதுவும் செய்யமாட்டார்கள் என்பதை இந்த அரசாங்கம் நன்கு அறிந்து வைத்துள்ளதால் எந்தவொரு பயமும் இல்லாமல் பொலிஸாரை எதற்காகவும் கவனத்தில் கொள்ளாமல் செயற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்பைக் கூட சிறிதளவும் மதிக்காமல் செயற்படுபவர்களுக்கு இந்த அரசாங்கம் எதுவும் செய்யாது என்பது அவர்களுக்கு தெரியும். யாழில் ஆயுதங்கள் கூட இன்றியே பொலிஸார் நடமாட வேண்டும் என்று பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டிருக்கிறார் என்பதும் அவர்களுக்கு தெரியும்.
அதன் காரணமாகவே ஒவ்வொரு போயா தினத்திலும் சமய அடிப்படைவாதிகள் திஸ்ஸ விகாரைக்கு முன்பாக நாடகம் அரங்கேற்றுகிறார்கள். இந்த நாட்டில் எந்தவொரு சமய நம்பிக்கையையும் பின்பற்றுவதற்கான உரிமை சகலருக்கும் இருக்கிறது. அதற்கு யாரும் இடையூறு ஏற்படுத்த மாட்டார்கள். இந்து பக்தர்களுக்கோ, கிறிஸ்தவ பக்தர்களுக்கோ, இஸ்லாமிய பக்தர்களுக்கோ, பெளத்த பக்தர்களுக்கோ எந்தவொரு இடத்திலும் இடையூறு ஏற்படுத்தப்படுவதில்லை. வடக்கு, யாழ்ப்பாணத்தில் மாத்திரமே இவ்வாறு இடையூறு ஏற்படுத்துகிறார்கள். அங்கேயே சமய அடிப்படைவாதம் போசிக்கப்படுகிறது. அடிப்படைவாதம் தலைதூக்குவதற்காக சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் புத்த சாசனத்துக்கு எதிராகவே செயற்படுகிறார்கள். அதற்கு அரசாங்கமும் இடமளித்து வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறது’’ என்றார்.