கட்டுரைகள்பிரதான செய்திகள்

அடக்க மறுத்தாலும் அடக்க முடியாது; அடங்குமா Covid-19?

சுஐப் எம். காசிம்

“கொரோனா” சீனாவில் ஆரம்பமான இந்தச் சின்னஞ் சிறிய வைரஸ், இன்று அழிக்கவே முடியாத உயிரியாக மனிதக் கலங்களுக்குள் புகுந்து உயிர்ப்பெறுகிறது. எமக்குள் நுழையாவிடின் கொரோனா உயிர்ப்படையவும் முடியாது. 2019 ஆம் ஆண்டு டிசம்பரில் கண்டு கொள்ளப்பட்ட இது, இலங்கையில் 2020 பெப்ரவரியளவில்தான் காணக் கிடைத்தது. ஆகஸ்ட் வரையும் அபார ஆட்டமாடி கலக்கத்தை ஏற்படுத்திய இந்தக் கொரோனா, வெலிசறை கடற்கரை முகாமில் புகுந்து கிளப்பிய பீதிதான் உச்சத்தில் நின்று, வாழ்வா அல்லது சாவா என்ற அச்சத்தில் ஆழ்த்தியிருந்தது.

எமது நாட்டு மக்களிடத்தில் அன்று வரைக்கும் அழியாத அச்சமாக இருந்து, பின்னர் அடங்கிப்போன இந்தக் கொரோனா, “கொத்தணி” என்றும் “சமூகத் தொற்று” என்றும். இன்று மீண்டும் எம்மை ஆட்கொள்ள வந்துள்ளது. இலங்கையில் 3979 பேரைப் பீடித்த இது, இன்னும் எத்தனை பேரைப் பீடிக்கும், இதனால் எத்தனை உறவுகள் காவுகொள்ளப்படும், என்பதெல்லாம் அச்சத்தை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதில் இதுவரை 3266 பேர் சுகமடைந்துள்ளமை, மருத்துவ வசதிகளில் மனிதனுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது. இத்தனை தொற்றுக்குள், இந்தக் கொரோனாவால் 13 பேரைத்தானே பலியெடுக்க முடிந்துள்ளது. எனவே, எதிர்காலத்தில் கொரோனாவும் கொல்லப்பட்டு வெல்லப்படலாம்.

அடிக்கடி வந்து ஆயுளை அச்சுறுத்தும் இந்தக் கொரோனா, இவ்வுலகில் குடியிருப்பது, மனிதனின் சுதந்திர வாழ்வுக்கு இடப்படும் கால்கட்டு, கைக்கட்டு மட்டுமல்ல மனக்கட்டாகவும் பார்க்கப்படுகிறது. உலகின் எந்த மூலைகளுக்கும் எல்லையின்றிப் பறந்த மனிதனை, கண்ணுக்கே தெரியாத கொரோனா கட்டுப்படுத்துவதா? ஆரம்ப காலத்தில் அச்சமுற்று அடங்கினாலும் இனிமேல் இதற்கு அச்சப்படவோ அடங்கவோ முடியாதென்றுதான், விஞ்ஞானம் இன்று விழித்தெழத் துடிக்கிறது. இந்தத் துடிப்பில்தான் அரசாங்கங்கள் துணிச்சலுடன் செயற்படுகிறதோ தெரியாது. ஒன்றிரண்டு பேரைத் தொற்றிக்கொண்டதற்கே, நாடே முடக்கப்பட்டு, மக்கள் மூச்சின்றிக் கிடந்த காலமெல்லாம் இனியில்லை. கடந்த கால அனுபவத்தில் கற்றுக்கொண்ட படிப்பினைகள், அனுபவங்களால் கொரோனாவின் கொட்டத்தை அடக்குவதென்ற தைரியத்தில் இயங்கும் அரசாங்கத்திற்கு மக்களின் ஒத்துழைப்புத்தான் தைரியமூட்டும்.

ஏன், ஒரு வாரத்திற்கு முன்னர், மினுவாங்கொடையில் இந்தக் கொரோனா ஏற்படாதிருந்தால், எமது நாடு கொரோனாவிலிருந்து விடுபட்ட நாடு என்ற பட்டத்தைப் பெற்றிருக்கும். உலக சுகாதார ஸ்தாபனம் இப்பட்டத்தை அறிவிக்க இருந்த நிலையில்தான், மீண்டும் நாம் நிர்க்கதிக்குள் தள்ளப்பட்டுள்ளோம். எனவே, பெறவிருந்த பட்டத்தை நாம் பெற்றேயாக வேண்டுமென்றால் பொறுப்புடன் நடப்பதுதான் ஒரே வழி. பொலிஸாருக்காக மாஸ்க் அணிவது, அவ்வாறு அணிந்தாலும் அதை நாடிக்குக் கீழே தொங்கவிடுவது, தேவையில்லாமல் கூடிநிற்பது, சமூகப் பொறுப்புக்கள், கூட்டுப் பொறுப்புக்களைப் புறந்தள்ளிச் செயற்படுவதை எல்லாம் நிறுத்துவதுதான் கொரோனாவின் கொட்டத்தை அடக்குவதற்கான முதல் வெற்றிப்படிகள். கடந்த காலத்தில் இதைச் செய்யாததால்தான், உலக சுகாதார ஸ்தாபனத்தால் கிடைக்கவிருந்த பரிசைத் தவறவிட்டதாகவும் சில விமர்சனங்கள் உள்ளன.

உண்மையில் இவ்வாறான பரிசு கிடைத்து, நாடும் கொரோனாவிலிருந்து விடுபட்டிருந்தால், வெளிநாடுகளில் எம்மைப் பார்ப்பதற்காகவும், குடும்பங்களுடன் வந்து கலந்து, தனிமையை அணைப்பதற்கும் காத்திருக்கும் எத்தனையோ உறவுகள், நாடு தேடி வந்து, வீட்டில் சந்தோஷமடைந்திருக்கும். ஆகவே, இவையெல்லாம் கூட்டுப் பொறுப்பாகவன்றி குடும்பப் பொறுப்பாகக் கருதியே, அரசின் கொரோனா ஒழிப்பு பணிகளுக்கு ஒத்துழைக்க வேண்டியுள்ளது.

“பத்துப் பேரில் ஒருவர் கொரோனாவால் பீடிக்கப்படலாம்” என்ற எச்சரிக்கைக்கு மத்தியில்தான், எமது எதிர்காலம் நகர வேண்டியுள்ளதையும் நாம் கவனத்தில்கொள்ள வேண்டியுள்ளது. இதுவரைக்கும் உலகில் சுமார் மூன்று கோடியே 56 இலட்சம் பேரைத் தொற்றி, சுமார் பத்து இலட்சத்து 45ஆயிரம் பேரின் உயிர்களைப் பறித்தெடுத்துள்ள இந்தக் கொரோனாவின் கொடூரம், இதுவரைக்கும் விஞ்ஞானம், மருத்துவம் என்பவற்றுக்குச் சவால்தான். இதனால் செலவுகளைப் பொருட்படுத்தாது, மக்களைக் காப்பாற்றுவதில் அரசாங்கம் எடுத்துள்ள அர்ப்பணிப்பு, முன்னாயத்தம், பாதுகாப்பு ஏற்பாடுகள் பாராட்டப்பட வேண்டியவைதான். இதற்குள் சில அரசியல் சாயங்கள் பூசப்படுவதைப் பார்க்கையில், ஏட்டிக்குப் போட்டியான மக்கள் சேவையா? அல்லது தருணம் பார்த்துக் காய் பறிக்கும் எமது நாட்டுக்கே உரித்தாகிப்போன அரசியல் கலாசாரமா? என்றும் தெரியாதுள்ளது.

இதுவரைக்கும் மூன்று இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு பீ.சீ.ஆர் பரிசோதனை செய்து, கொரோனாத் தாக்கத்தின் வேகத்தை அறிந்து வரும் அரசாங்கம், மத்தளை விமான நிலையத்தில் வந்த அதிகாரிகளைப் பரிசோதனை செய்யாமல் விடுமா? யாருக்காக இதைச் செய்ய வேண்டும் இந்த அரசாங்கம். இந்தக் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மனநிலைகள்தான் இதற்குச் சரியான சாட்சி சொல்லும். இவ்வாறான சூழ்நிலைகளில், ஆத்மீகவாதிகளின் ஆறுதல்களால்தான் மனிதன் ஓரளவாவது உயிர்வாழ்வதை விரும்புவதாகத் தெரிகிறது. கொரோனா ஏற்படுத்தவுள்ள உயிரிழப்புக்களில் சிலரது சமய மற்றும் சமூக நம்பிக்கைள் புறக்கணிக்கப்படுகின்ற அதிருப்திகளுக்கு இதுவரை தீர்வு கிடைக்காதுள்ளது. இதனால் பலர் இயற்கை மரணத்தையே இந்தக் காலகட்டத்தில் எதிர்பார்ப்பதாகவும் தெரிகிறது.

“இவ்வளவு தொற்று ஏற்படவிருந்த இலங்கையா இத்தனை நாளும் வெற்றிப் பெருமிதம் கொண்டாடியது” என்ற வெளிநாடுகளின் சில ஏளனங்களுக்கு, எமது நாடு விரைவில் தக்க பதில் சொல்ல வேண்டும். இதைத்தான் எமது ஆத்மீகவாதிகள் வேண்டி நிற்கின்றனர். இறுதிச் சடங்குகளில் எதிர்கொள்ள நேரிடுகின்ற சில மன வேதனைகளை மறந்தவாறு, நாட்டுக்காகப் பிரார்த்திப்பதைத் தவிர வேறு வழிகளில்லை என்ற இவர்களது சமயோசிதப் பார்வைகள்தான், இவர்களைப் பிரார்த்திக்கவும் தூண்டியுள்ளது. எரித்தாலும் அடக்க முடியாதென்ற யதார்த்தம், விஞ்ஞானப் பார்வைகளில் எதைப் புலப்படுத்தப்போகின்றன என்ற தேடல்களும் ஆத்மீகவாதிகளிடம் இல்லாமலில்லை. இதனால்தான், எல்லாம் வல்ல ஆண்டவனின் அருட்கடாட்சத்தில் இந்தக் கொரோனா ஒழியப் பிரார்த்திக்கின்றனர். இவை எல்லாவற்றை விடவும் வாழ்வதற்கான வழிகளைத் திறக்கும் பொருளாதாரத்தையும் பாதுகாக்க இந்தக் கொரோனா ஒழிய வேண்டுமே ஆண்டவா.

Related posts

Newly accredited Sri Lankan Residential Envoy to The State of Palestine presented his credentials today to the Minister of Foreign Affairs Dr Riad Al Malky

wpengine

அஷ்ரஃபின் 17ஆவது நினைவேந்தல் நிகழ்வு

wpengine

திரைப்படமாக தயாரிக்கப்படவுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வாழ்க்கை வரலாறு .

Maash